சைக்யாட்ரிஸ்ட் 2

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
சைக்யாட்ரிஸ்ட் 2

தன் எதிரே வந்து அமர்ந்த விஷாலை முறைத்தாள் ஆர்த்தி.

“என்னப்பா கொஞ்சம் சீக்கிரமா வரக்கூடாதா?” ஆர்த்தி கேட்க ரகு சிரித்தான்.

“மாமா அக்கா ரொம்ப டென்ஷன் ஆயிட்டாங்க” சொன்னவனை ஏறிட்ட விஷால் புன்னகைத்தான்.

“இருக்காதே உன் அக்காக்கு என் மேல நம்பிக்கை ஜாஸ்தியாச்சே “ விஷால் கேட்க ஆர்த்தி அவனை கோபமாய் பார்த்தாள்.

“ஆர்த்தி”

“என்ன ?”

“உனக்குப் பிடிச்ச ஸ்ட்ராபெர்ரி பிளவர் ஐஸ்கிரீம் வாங்கித்தரேன். கோபம் போயிடுச்சா?” விஷால் கேட்க இல்லை என்று மறுப்பாய் தலையாட்டினாள் ஆர்த்தி.

“வேற என்ன வேணும்? ஆடித்தள்ளுபடில நாலு சாரி ?”

“என்னப் பார்த்தா கிண்டலா இருக்கா?”

கேட்ட ஆர்த்தியிடம் தன் உள்ளங்கையை அவள் மட்டும் பார்க்கும்படி காட்டினான்.

ஆர்த்தி பார்த்தாள்.

“ஸாரி டி பொண்டாட்டி லவ் யூ” என்று எழுதப்பட்டிருக்க ஆர்த்தி மலர்ந்தாள். அவள் முகத்தில் திடீரென்று தெரிந்த மனமாற்றம் ரகுவைக் குழப்பியது.

“மாமா”

“சொல்லு ரகு”

“கையில என்ன எழுதிக் காட்டினே?”

“நீ இப்ப எத்தனாவது படிக்கிறே?”

“எயிட்த் ஸ்டாண்டர்ட் “

“இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும். கையில என்ன எழுதலாம்னு அப்ப சொல்லித்தரேன் “ விஷால் சொல்ல ஆர்த்தி சிரித்தாள்.

“ஆர்த்தி”

“ம்”

“நாம டைரக்டா வீட்டுக்கு போயிடலாம். மாமா பாவம். வீணா அலைய வேண்டாம்.”

“அதெல்லாம் நான் என்ன சொன்னாலும் அப்பா கேட்க மாட்டார். மாப்பிள்ளை மேல அவருக்கு பாசம் ஜாஸ்தி. ட்ரெயின் வர்றதுக்கு முன்னாடியே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்திருப்பார் “ ஆர்த்தி சொல்ல விஷால் புன்னகைத்தான்.

“ஆர்த்தி”

“ஒண்ணு சொன்னா ஐஸ்ன்னு நினைக்கக்கூடாது “

“என்ன ?”

“ஃபர்ஸ்ட் டைம் குன்னூர்ல உன்னோட வீட்ல உன்னை எப்படி பார்த்தேனோ அதே மாதிரியே இருக்கே. “

“அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு விஷால்”

“என்ன ?”

“உன்னோட கண் உன்னோட ரசனை. ரெண்டும் அப்படியே இருக்கு” சொன்ன ஆர்த்தி விஷாலின் கையை பிடித்துக் கொண்டாள்.

“விஷால் நான் ஒண்ணு கேட்கவா ?”

“கேளு”

“வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் உன்னோட மொபைல் நீ ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை “

“ஏன்?”

“ஊர்ல இருக்கிற இந்த நாலு நாளும் உன் கூட ரிலாக்ஸ்டா இருக்கணும்னு ஆசைப்படறேன் “ சொன்ன ஆர்த்தியை உற்றுப் பார்த்த விஷால் கண்களால் சம்மதித்தான்.

***

“வாய்ப்புக்காக என்னோட மானத்தை இழக்கிறது எனக்கு பிடிக்காத விஷயம் அதனாலதான் சினிமால என்னால பெரிய அளவில் சாதிக்க முடியல “

சின்னத்திரை நடிகை கலைவாணி பேச ரிப்போர்ட்டர் குறித்துக் கொண்டார்.

“நீங்க டிவில நம்பர் ஒன் ஆர்ட்டிஸ்ட் இது எப்படி மேடம் வந்துச்சு இதுக்காக நீங்க பட்ட கஷ்டங்கள் என்ன?”

“ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னோட கொள்கையில நான் சமரசம் செய்யல. “

பேட்டியை முடித்துக் கொண்டு கலைவாணி தன் காரை நோக்கிப் போக அவன் கார் அருகில் நின்றிருந்தான்.

‘யார் அவன் ஒரு மார்க்கமாக நிற்கிறான்?’ யோசித்த கலைவாணி அவனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முயல அவன் அழைத்தான்.

“என்ன மேடம் கண்டுக்காம போறீங்க?”

“ஸாரி யார் நீங்கன்னு தெரியல அதான்.”

“நான் உங்க ரசிகன் மேடம்”

“ஓ தேங்க்யூ. எந்த சீரியல் உங்களுக்கு பிடிச்சிருக்கு?”

“மேடம் நான் உங்க சீரியலுக்கு ரசிகன் இல்லை. உங்களுக்கு ரசிகன். உங்களுக்கு எது எது எங்க இருக்கு எப்படி இருக்குன்னு உங்களையே பார்த்துட்டு இருப்பேன் உங்களோட ரசிகன் நான் “

அவன் பேச்சு ஒரு மாதிரியாகப் போவதை உணர்ந்த கலைவாணி அவனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து போக முயல அவன் கைகளை குறுக்காய் வைத்து மறித்தான்.

“என்ன கலை என்னோட மனச கலைச்சிட்டு நீ பாட்டுக்கு போனா எப்படி கலை?”

“மரியாதையா வழிய விடு இல்லன்னா உனக்கு மரியாதை இருக்காது “ கலைவாணி சொல்ல அவன் தன் மொபைலை எடுத்தான்.

“இப்ப நான் என்ன பண்ணப்போறேன்? ஒரு ஃபோட்டோ எடுத்து கலைக்கிட்ட காட்டப்போறேன். அதுக்கப்புறம் கலை என்ன பண்ணும் ? நான் சொல்றதெல்லாம் கேட்டுட்டு என்கூட வரும்? சரியா கலை?” சொன்னவன் தன் மொபைலில் இருந்த ஒரு போட்டோவை அவளிடம் காட்ட அவள் திடுக்கிட்டாள்.

“இது இது எப்படி உன்கிட்ட..?” வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

“எப்படி வந்துச்சு இந்த போட்டோ என்கிட்டங்கிறது தேவையில்லாத விஷயம். ஆனா இந்த போட்டோவை நான் வெளியில காட்டினா கொஞ்ச நேரம் முன்னாடி சீன் போட்ட கலையா இதுன்னு ஊர் பேசும். சும்மா சொல்லக்கூடாது போட்டோல உன்னோட எக்ஸ்பிரஸன் செம”

அவன் நக்கலாகச் சொல்ல கலைவாணி தளர்ந்தாள்.

“யார் நீ? உனக்கு என்ன வேணும்?” பயமாய் கேட்க அவன் சிரித்தான்.

***

V ட்ரக்ஸ் என்று முகப்பில் பிரம்மாண்டமாய் போர்டு வைக்கப்பட்டிருந்த கம்பெனியில் அதன் எம்டி வித்யாசாகர் தன் முன் நின்றிருந்த தன் பி ஏ விஷ்ணுவை ஏறிட்டார். கேட்டார்.

“எப்படி போகுது எல்லாம்?”

“கோயிங் வெல் சார்”

“இப்ப என்ன ஸ்டேட்டஸ் ?”

“தமிழ்நாடு மொத்தம் இதுவரைக்கும் நம்ம டீம் மெம்பர்ஸ் 80 பேரை டாக்டர்ஸா இறக்கியிருக்கோம் சார்”

“அவங்க டாக்டர் இல்லன்னு யாரும் கண்டு பிடிக்க மாட்டாங்களே?”

“ஒரு பர்சன்ட் டவுட் வர்றதுக்குக் கூட வாய்ப்பில்ல சார். அவங்க எல்லாருக்கும் டாக்டர்ஸா எப்படி நடந்துக்கணும்னு ட்ரெயின் பண்ணியிருக்கோம். அது மட்டும் இல்ல .எம்பிபிஎஸ் டாக்டர்ஸ்லத்தான் போலி டாக்டர்ஸ் ஈஸியா மாட்டிக்குவாங்க. சைக்ரியாட்ரிஸ்ட்ஸ் மேல யாருக்கும் சந்தேகம் வராது”

“எக்ஸலண்ட் விஷ்ணு”

“தேங்க்ஸ் சார்”

“அவங்க எல்லாருக்கும் நம்ம டேப்லட் சப்ளை பண்ணிட்டே இருக்கணும்.”

“யெஸ் சார். அதுக்கு எல்லாவிதமான அரேஞ்ச்மெண்ட்ஸ்ம் பண்ணிட்டேன்.”

“குட்”

“இன்னொரு விஷயம் இருக்கு சார்”

“என்னது?”

“நம்ம டேப்லட் விஷயம் வேற யாராவது ஸ்மெல் பண்ணியிருப்பாங்களோன்னு டவுட் சார்”

விஷ்ணு சொல்ல வித்யாசாகர் முகம் மாறியது.

“என்ன சொல்ற?”

“நேற்று சண்டே. நம்ம பிளான்ட்க்கு வேறொரு வேலையா போயிருந்தேன். அப்ப..?”

“அப்ப என்ன சொல்லு”

“ஒருத்தன் வெளியே இருந்து நம்ம பிளான்ட்டோட பில்டிங்க போட்டோ எடுத்தான். “

“ராஸ்கல் யார் அவன்?”

“தெரியல சார் கேட்டதுக்கு அவன் ஒன்னும் சொல்லல “

“எங்க இருக்கான்?”

“அவுட்ஹவுஸ்ல ரூம்ல போட்டு பூட்டி வச்சிருக்கேன். “

“என்ன பண்ணலாம்?”

“அவன வெளியில விட்டா அவன் போய் ஏதாவது சொல்லுவான். அது இன்னும் கொஞ்சம் பேரை இங்க வர வைக்கும் அது வேண்டாம் சார்.”

“அப்ப முடிச்சுடலாமா?”

“சிலிண்டர்ல பொட்டாசியம் சயனைடு கேஸ் ஃபில் பண்ணி வச்சிருக்கேன். நீங்க ஓகே சொன்னதும் அவனோட ரூம்ல வச்சு சிலிண்டரோட வால்வ் ஓபன் பண்ண வேண்டியது தான் பாக்கி “

“அவன நல்லா செக் பண்ணியாச்சா? பிரஸ்ஸா இருக்கப்போறான் “

“இல்ல சார் அவன் கிட்ட ஐடி கார்டு எதுவும் இல்லை “

“மொபைல் எதுவும் ?”

“இல்ல சார் கேமரா மட்டும் தான் வச்சிருந்தான்”

“ஒருத்தன் மொபைல் கூட எடுக்காம வர்றான்னா அவன் தனியா வந்திருக்க மாட்டான். அவன் கூட இன்னும் வேற யாராவது இருப்பாங்க. இவன் இவனோட மொபைல்ல அவங்கக்கிட்ட கொடுத்துட்டு வந்திருப்பான். இன்னும் சொல்லப்போனா அவங்களும் கூட நமக்கு தெரியாம நம்மள கண்காணிச்சிட்டு இருப்பாங்க இல்லையா?” வித்யாசாகர் கேட்க விஷ்ணு யோசித்தான்.

“யெஸ் சார்”

“அப்ப அவங்களுக்கு தெரியணும் இங்க வந்து நம்மள கண்காணிச்சா என்ன நடக்கும்னு அவங்களுக்குத் தெரியணும். அப்ப அவங்களுக்கு தெரியற மாதிரி இவனோட சாவு ரொம்ப கொடூரமா இருக்கணும் அந்த மாதிரி ஏதாவது பண்ணு “

“யெஸ் சார்”

***

ரயில் கோவை ரயில் நிலையத்தை அடைந்தது.

விஷால் ஆர்த்தி ரகு மூவரும் இறங்கினர்.

“வாங்க மாப்பிள்ள” அழைத்தபடி விஷால் முன் வந்து புன்னகைத்தார் நஞ்சுண்டேஸ்வரா .

“லக்கேஜ் கொடுங்க “ நஞ்சுண்டேஸ்வரா கேட்க விஷால் மறுத்தான்.

“மாமா நீங்க சும்மா வாங்க . நாங்கதான் வந்திடுவோமே நீங்க எதுக்கு பாவம் கஷ்டப்படறீங்க?”

“இது கஷ்டம் இல்ல மாப்ள. ஒரு சந்தோசம் அதுவும் நீங்க எனக்கு மருமகனா கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன் மாப்பிள்ளை” நஞ்சுண்டேஸ்வரா சொல்ல ஆர்த்தி சிரித்தாள்.

“போதும்பா உங்க சென்டிமெண்ட்ஸ் ரொம்ப ஓவரா இருக்கு”

“மாமா” ரகு அழைத்தான். திரும்பிய விஷாலின் பார்வையில் அவன் பட்டான். உயரமாக தாடி வைத்திருந்தவன் சட்டென்று ஒரு பெண்ணின் மொபைலை பறித்தபடி ஓட முயல விஷால் மின்னல் வேகத்தில் செயல்பட்டான். அவன் முன் நின்ற விஷால் அவன் சட்டையைப் பிடிக்க அதை எதிர்பார்க்காதவன் விஷாலை கோபமாய் பார்த்தபடி தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கத்தியை எடுத்தான்.

“மாப்பிள்ள பார்த்து “ நஞ்சுண்டேஸ்வரா அலறினார்.

அவன் கத்தியை விஷால் நோக்கி வீச தன் இடது கையால் அவன் வலது கையை தடுத்த விஷால் எட்டி உதைக்க அவன் தரையுடனானத் தன் தொடர்பைத் துண்டித்து வானில் பறந்து தரையில் அதிவேகமாய் மோதி கை கால்கள் பரப்பியபடி தாறுமாறாய் விழுந்தான். அலறினான்.

விஷால் மீண்டும் அவன் முன்னால் செல்ல கையெடுத்துக் கும்பிட்டான்.

மொபைலை வாங்கி அந்த இளம் பெண்ணிடம் ஒப்படைத்த விஷால் அவன் இரண்டு கைகளையும் பின்னால் மடக்கிக் கட்டினான்.

“மாமா” விஷால் அழைக்க நஞ்சுண்டேஸ்வரா பதட்டமாய் ஓடி வந்தார்.

“மாப்பிள்ள”

“நீங்க ரகுவையும் ஆர்த்தியையும் கூப்பிட்டு வீட்டுக்குப் போங்க நான் இவனை போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு வர்றேன்”

சொன்ன விஷால் அவர்கள் பதிலுக்கு காத்திராமல் அவனை நெட்டித் தள்ளியபடி நடக்க ஆரம்பித்தான்.

இருவரும் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தனர்.

ஒரு கான்ஸ்டபிள் ஓடி வர அவரிடம் விஷால் தன் ஐடி கார்டைக் காண்பித்தான். கான்ஸ்டபிள் பதட்டமாய் சல்யூட் வைக்க தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.

“இவன் மொபைல் திருடுனான். இவன உள்ள வச்சு என்கொயரி பண்ணுங்க”

“யெஸ் சார்” சொன்னவர் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல திரும்பிய விஷாலின் பார்வையில் அந்த இளம் பெண் பட்டாள். விஷாலை நோக்கி வந்தவள் அழைத்தாள்.

“அண்ணா”

“யாரும்மா நீங்க? என்ன வேணும்?”

“என்னோட ஹஸ்பண்ட் நாலு நாளா காணோம். எங்க போனாலும் எனக்கு போன் பண்ணி பேசுவாரு நாலு நாளா எனக்கு போன் பண்ணல. எனக்கு ரொம்ப பயமா இருக்குண்ணா “

அவள் சொன்ன விதமும் அண்ணா என்று அழைத்ததும் விஷாலை அசைத்துப் பார்க்க அவன் கேட்டான்.

“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்? லாஸ்ட்டா உங்ககிட்ட என்ன சொல்லிட்டுப் போனார் ?”

“அவர் ரிப்போர்ட்டர்ணா“

“அவர் பேர் என்ன? எந்த பத்திரிக்கையில ரிப்போர்ட்டர் ?”

“சண்முகம் அண்ணா. மாற்றம் பத்திரிகைல ரிப்போர்ட்டர்”

“ம் எவ்வளவு நாளா காணோம்னு சொன்னீங்க?”

“நாலு நாள் ஆச்சு அண்ணா.”

“உங்க ஹஸ்பண்ட் லாஸ்ட்டா போறப்ப எங்க போறேன்னு சொல்லிட்டுப் போனாரா? ஏதாவது தெரியுமா?”

“சொன்னார் அண்ணா ஏதோ ஒரு கம்பெனியில சட்டத்துக்கு புறம்பா என்னமோ பண்றாங்க. அப்படின்னு சொன்னாரு. “

“என்ன கம்பெனின்னு ஏதாவது சொன்னாரா?”

“ஆமாண்ணா சொன்னார். அந்த கம்பெனி வந்து “ யோசித்தவள் சொன்னாள்.

“V ட்ரக்ஸ்”

தொடரும்
 

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.