ஒரு ரகசிய குற்றம் 20

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
நான் இன்ஸ்பெக்டர் சுதர்சனத்தை பார்த்தேன்.



"ஸார், நான் சொல்ல வர்றது அதில்லை! நீரஜாவை பிளாக்மெயில் பண்ணவனே விக்ரம்தானே!"



"ஆமாம். நீ கண்டுபிடிச்சதும் அதானே? பணமும் வேணும்; ஒரு நாளைக்கு நீயும் வேணும்னு பிளாக்மெயில் பண்ணான்! எல்லாம் செல்போன்ல எவிடென்ஸா இருக்குதில்ல? அவனே பிளாக்மெயில் பண்ணி வர வைக்கிறான்; வந்த பிறகு ஏதோ காரணத்துக்காக நீரஜாவை கொலை பண்ணிடறான். விக்ரமை பிடிச்சா எல்லாம் தெரிஞ்சு போயிடுது!"



சுதர்சனம் இப்போது உறுதியாக இருந்தார். நீரஜாவின் செல்போன்; என்னுடைய செல்போன்; ஓட்டலில் ரூம் புக் பண்ணின ஆதாரம்; எல்லாவற்றிற்கும் மேலாக ஓட்டல் சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்கள் எல்லாம் மிகத் தெளிவாக விக்ரமை கொலைகாரனாகச் சித்தரித்தது.



"யோவ், பொன்னுசாமி! இந்தப் பொண்ணு நீரஜாவோட ஹஸ்பண்ட்… அவன் பேர் என்ன சொன்ன?"



"சுவாமிநாதன் சார்!" பொன்னுசாமியை கேட்டதற்கு நான் பதில் சொன்னேன்.



"அவனோட போன் நெம்பர் நீரஜாவோட செல்போன்ல இருக்கு; அதை எடுத்து அவனுக்கு கால் பண்ணி சொல்லச் சொன்னேனே, சொல்லிட்டியா?"



"சொல்லிட்டேன் சார்!" என்றார், பொன்னுசாமி என்ற போலிஸ்காரர்.



" இப்ப எங்க இருக்கானாம்?"



"மும்பையில் ஒரு மீட்டிங்கல கலந்துக்கிறதுக்காக வந்திருக்கிறதா சொன்னார்."



"உன் பொண்டாட்டி இது மாதிரி ஒரு ஓட்டல் ரூம்ல கொலை செய்யப்பட்டு கிடக்கிறா; அடுத்த பிளைட்டை பிடிச்சு மும்பையில் இருந்து சென்னை வந்து சேருன்னு சொல்லிட்டியா?"



"சொல்லிட்டேன் சார்!"



"கன்பார்மா மும்பையில்தானே இருக்கான்?"



"ஆமா, சார்!"



"பேசினது சுவாமிநாதன்தானே?"



" ஆமா சார்!"



" என்ன சொன்னான்?"



" முதல்ல நான் சொன்னதை நம்பலை சார்! அப்புறம் தெளிவா சொன்னபிறகு, ரொம்ப அப்செட்டா பேசினார் சார்! ஒரு வேளை வேற யாரையாவது பார்த்துட்டு சொல்றீங்களான்னு கேக்கறார்."



" அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"



"இல்லை, உங்க மனைவி நீரஜான்னு கன்பார்மா தெரிந்து தான் உங்களுக்கு போன் பண்றோம். உங்க நெம்பர் அவங்க செல்போன்ல இருந்துதான் எடுத்து பண்றோம்னு சொன்ன பின்னாடிதான் நம்பினார். அடுத்த ப்ளைட்ல வர்றதா சொல்லியிருக்கார்."



"சரி, அவர் வாட்டும். அதுக்குள்ள நாம போஸ்ட்மார்டம் பண்ணி ரிப்போர்ட் தயார் செய்து வைக்கலாம்."



கான்ஸ்டபிள் பொன்னுசாமி தலையாட்டிக் கொண்டார்.



ஆம்புலன்ஸ் வந்தது. ஸ்ட்ரக்ச்சர் வந்தது. ஆஸ்பத்திரி ஆட்கள் வந்தார்கள். நீரஜாவை தூக்கி ஸ்ட்ரெக்ச்சரில் ஏதோ பொருள் போல கிடத்தினார்கள். அப்போது அவள் தலை ஒரு பக்கம் சாய்ந்து என்னை பார்த்தது. நான் வெலவெலத்துப் போனேன். என்னை இப்படி அநியாயமாக கொலை செய்வதற்கு விட்டு விட்டாயே என்பதுபோல் அவள் பார்வை என்னைக் குற்றம் சாட்டியது.



தன் கடைசி பயணத்திற்கு முந்தைய பயணமாக நீரஜாவை தூக்கிச் சென்றார்கள்.



எல்லா பார்மாலிட்டிஸூம் முடிந்த பிறகு, என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்ட பிறகு, சுதர்சனம் கடைசியாக என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டார்.



நான் நட்ட நடு ஹாலில் தனித்து ஸ்தம்பித்து நிற்க, நீரஜா இறந்து கிடந்த அறையை ஒரு போலீஸ்காரர் மூடி சீல் வைத்து விட்டு சென்றார். இன்னும் இரண்டு நாளைக்கு அந்த அறை அப்படியேதான் மூடிக்கிடக்கும். நீரஜாவின் உடலை போஸ்ட்மார்டம் செய்து, கேஸ் பதிவு செய்து, வேறு எதுவும் சந்தேகம் இல்லை என்று முடிவுக்கு வந்த பிறகு, அறையில் மீண்டும் சோதனை செய்வதற்கு எதுவும் இல்லை என்றான பிறகு அறையை திறக்க அனுமதிப்பார்கள்.



நான் என்ன செய்வது என்று புரியாமல் மாடிப்படி இறங்கினேன். இதே படிக்கட்டுகளில் மூன்று மூன்றரை மணி நேரத்திற்கு முன்பு தலைதெறிக்க ஓடியது நினைவுக்கு வந்தது. படிக்கட்டுகளில் இறங்கி 306-ம் எண் அறைக்கு வந்து என்னுடைய ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு, அறையை பூட்டிக் கொண்டு, 305-ம் எண் அறைக்குள் நுழைந்தேன். கட்டிலுக்கு தலைப்பகுதியில் அலமாரியின் கீழ் விளிம்பில் அந்த சிறிய ஹேண்ட்பேக் அப்படியே இருந்தது. மெனக்கெட்டு கேமராவை பொருத்தியது எல்லாம் வீணாயிற்று. கடைசியில் இந்த கேமரா அடங்கிய வேண்ட பேகையாவது நீரஜா எடுத்துக் கொண்டு போயிருக்கலாம். ஹேண்ட்பேக் திரும்பும் இடங்களில் எல்லாம் காமிராவும் திரும்பி, காட்சிகளைப் பதிவு செய்திருக்கும். கொலையாளியின் முகம் தெரியாவிட்டாலும் அவனின் கையோ, காலோ, கழுத்தோ கொலையாளியின் சட்டையோ, ஏதோ ஒன்று பதிவாகியிருக்கும். அதிலிருந்து ஏதாவது துப்பு கிடைத்து இருக்கும்.



இப்போது மட்டும் என்ன? விக்ரம்தான் என்று தெரிந்து விட்டதே! மிக அழகாக திட்டம் போட்டு நீரஜாவின் பெயரில் அறை எடுத்திருக்கிறான். நீரஜாவின் வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுத்திருக்கிறான் நீரஜாவின் வோட்டர் ஐடி விக்ரமிடம் இருந்திருக்கிறது. ஒரிஜினல் இல்லை என்றாலும் டூப்ளிகேட்டை அவன் செல்போனில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், கம்ப்யூட்டரில் போன் நம்பர் பதிவாகும் என்றும், அறை பதிவு செய்யப்பட்டு 412 எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அவன் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்றும் அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான். வழக்கமாக ஒரு எண்ணும் நீரஜாவை பிளாக்மெயில் செய்வதற்கும் வேறு பல உபயோகத்திற்கும் என்று ஒரு எண்ணும் பயன்படுத்தி இருக்கிறான்.



போலீஸ் என்ன வாயில் விரல் வைத்துக் கொண்டிருக்கும் குழந்தையா என்ன? செல்போன் நம்பர் கிடைத்தால் போதாதா? ஆறு மாதங்கள் வரையிலான அனைத்து உரையாடல்களையும் மீட்டெடுத்து விடுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் அவர்களுக்கு வேலையே இல்லை. திருப்பதி லட்டு மாதிரி பிளாக்மெயில் செய்யப்பட்ட உரையாடல்கள்; அவளுக்கு வந்த விக்ரம் பற்றிய எச்சரிக்கை குறுஞ்செய்தி; அதே நம்பரில் - செத்துப்போன எத்திராஜ் பெயரில் - பேசிய உரையாடல்கள் எல்லாம் பதிவாகியிருந்த நீரஜாவின் செல்போன் கிடைத்து விட்டது. இவையெல்லாம் சுலபமாக வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய தடயங்கள் !



செத்துப் போன எத்திராஜ் பெயரிலிருந்து நீரஜாவுக்கு மெசேஜ் வந்ததுதான் இப்போது வரைக்கும் புதிராகவே இருந்தது. இதை ஒரு பொருட்டாகவே சுதர்சனம் எடுத்துக் கொள்ள மாட்டார் என்றே எனக்குத் தோன்றியது. ஏனெனில் கொலை செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் தெளிவாக இருக்கிறது. நடுவில் இதை போட்டுக் குழப்பிக் கொள்ள விரும்ப மாட்டார்.



நான் அந்த கேமரா பொம்மை பொருத்திய ஹேண்ட் பேக்கை எடுத்து திறந்து பார்த்து, என் ஹேன்ட் பேக்கில் வைத்துக் கொண்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன். இரண்டு அறைகளையும் ஒரு நாளைக்கு பதிவு செய்திருந்தேன். அதனால் இங்கேயே இரவு தங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.



இப்போது நேரம் என்ன? பத்து மணிக்கு மேலாகிவிட்டது. இதற்கு மேல் வீட்டிற்கோ, ஆபிசுக்கோ போவதை விட, இந்த அறையிலேயே படுத்து தூங்கி விட்டு, காலையில் போகலாம் என்று முடிவெடுத்தேன்.



பசித்தது. அறையைப் பூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட்டை நோக்கி நடந்தேன். என்னுடைய பைக் நினைவுக்கு வந்தது. அப்படியே நீரஜாவின் காரும் நினைவுக்கு வந்தது. நாளைக்கோ, நாளை மறுநாளோ தகவல் சொல்லி யாராவது வந்து எடுத்து போவார்கள்.



நான் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தேன். அந்த நேரத்திலும் ஜனங்களுக்குப் பசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். காலியான ஒரு டேபிளில் அமர்ந்து, ஒரே ஒரு ஸ்பெஷல் மசாலா தோசைக்கு ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன்.



அப்போதுதான் கவனித்தேன். இரண்டு டேபிள்கள் தள்ளி சாப்பிட்டு கொண்டிருந்த சந்திரனை பார்த்து புன்னகைக்க முயன்றேன். அவன் சாப்பிடுவதிலேயே கவனமாக இருந்தான்.



இன்ஸ்பெக்டர் சுதர்சனத்துக்கு சிசிடிவி பதிவுகளைப் போட்டு காண்பித்து இப்போதுதான் சாப்பிட நேரம் கிடைத்தது போலும், என்னை சரியாக கவனிக்கவில்லை.



சுதர்சனம் அவனை நிறையத்தான் வேலை வாங்கிவிட்டார். சிசிடிவி கேமரா பதிவைத் திரும்பத் திரும்ப ஓடவிட்டு, பின்னோக்கி, முன்னோக்கி குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, பெரிதுபடுத்தி அவனுக்கு அலுத்துப் போய்விட்டிருக்கும்.



நான் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவன் சாப்பிட்டு கைகழுவி கொண்டு வந்தான். இயல்பாக அவனைப் பார்த்து புன்னகைத்தேன். இம்முறை என் புன்னகையை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு புன்னகைத்தான்.



"ரொம்ப கஷ்டமா இருந்துச்சில்ல, உங்களுக்கு?" என்றேன்.



அவன் டேபிளில் அருகே நின்று, "அதை ஏன் கேக்கறீங்க? தலைவலியாப் போச்சு!" என்றான். "இப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும்! கேமிராவுக்குப் போற ஒயர்ல ஏதோ லூஸ் கனெக்சன் போலிருக்கு! சரியான நேரத்தில் கட்டாயிடுச்சு! அது மட்டும் கரெக்டா பதிவாகி இருந்தா எனக்கு வேலை சுலபமா முடிஞ்சிருக்கும்!"



"உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லாருக்குமே இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது. போலீசுக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யணும் இல்லை?"



"நீங்க ரூம் எடுத்து தங்கறதுக்குதானே வந்தீங்க? நீங்க எப்படி இந்த கேஸ்ல மாட்டிக்கிட்டீங்க?"



"நானா விரும்பி வந்து மாட்டிக்கிட்டேன்! செத்துப் போன பொண்ணு கூட நான்தான் வந்திருந்தேன். அவளுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக வந்தவன் அந்தப் பொண்ணைக் காப்பாத்த முடியாம பலி கொடுத்துட்டு நிக்கிறேன்."



"அப்படியா? பெரிய இடத்து பெண் போல தெரியுது! என்ன விவகாரம்?"



"பிளாக்மெயில்!"



"யாரை, அந்தப் பெண்ணையா?"



"ஆமா, ஆனா… ஏன் கொன்னான்னு தெரியலை! பிளாக்மெயில் பண்ணியவன் கேட்டதுக்கெல்லாம் அந்தப் பொண்ணு சம்மதிச்சுட்டா! இருந்தாலும் ஏன் கொன்னான்? அதான், புரியலை!"



"சரி சார்! நான் கிளம்பறேன். இப்பவே ஏகப்பட்ட டயர்டா இருக்கு!"



"இந்த நேரத்துக்கு வீட்டுக்குப் போகணுமா? வீடு எங்க இருக்கு?"



"அதுக்கு நீலாங்கரை போகணும் சார்! இப்ப எங்க போறது? என் ரூமுக்குப் போறேன்."



"ரூம் எங்க இருக்கு?"



"இதே ஓட்டல்லதான்! கம்ப்யூட்டர் ரூம் தான் எனக்கு படுக்கையறை! இன்னிக்கு விநாயகத்துக்குதான் டூட்டி! அவன்தான் இன்னிக்கு இன்சார்ஜ் எடுத்திருக்கணும். அவனுக்கு என்னமோ சந்தர்ப்பம்! என்னைப் பார்த்துக்கச் சொன்னானேன்னு வந்து நான் மாட்டிக்கிட்டேன். இன்னிக்கு ராத்திரிக்கு எத்தனை மணிக்கு எழுப்புவாங்களோ தெரியாது. எப்ப எழுப்புவாங்களோன்ற கவலையிலேயே தூங்கணும்! விநாயகம் எதுக்கு லீவ் போட்டான்னே தெரியலை! என்னை நல்லா மாட்டிவிட்டுட்டான்!"



சொன்ன சந்திரனை யோசனையாய்ப் பார்த்தேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 20
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.