மலரினும் மெல்லியது காமம் 7

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
புவனா என்ன சமைப்பது என்று யோசித்தாள். கத்தரிக்காய் இருந்தது. சாம்பார் வைத்து சாதம் வடித்தாள். அப்பளம் பொறிக்கலாமா என்ற யோசனையைக் கைவிட்டு ஊறுகாய் பாட்டிலைப் பார்த்தாள்.

இன்றாவது அரவிந்த் நேரத்திற்கு வருவானா?

வெளியே பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பைக்கும் தென்படவில்லை.

பெருமூச்சுடன் டிவி முன் வந்து அமர்ந்தாள். ஏதோ ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

“உன்னை இவ்வளவு தூரம் தூக்கி எறியறா உன் பொண்டாட்டி. ஆனா அவதான் உயிர்னு நீ நினைச்சிட்டுருக்னே இது நல்லா இருக்கா? “ எவனோ ஒருவன் நாயகனிடம் கேட்க நாயகன் புன்னகை முகம் மாறாமல் சொன்னான்.

“என்னிக்குமே அவ எனக்கு குழந்தை என்னோட குழந்தை தப்பு பண்ணா எனக்கு கோவம் வருமா?”

புவனாவால் அதற்கு மேல் அந்த படத்தைப் பார்க்க முடியவில்லை. சினிமாவில் மட்டும் தான் இத்தகைய நாயகன்கள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் ஒரு ஆண் இப்படி இருக்கிறான் என்றால் அவனுக்கு நிஜமாகவே கோயில் கட்டி கும்பிடலாம்.

இப்படி யாரால் இருக்க முடியும்? யோசித்தவள் மனதில் கணேஷ் வர தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

கணேஷ் மட்டும் என்ன விதி விலக்கா?

ஏன்?

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாமே எல்லோருமே நல்லவர்களாகத்தான் தெரிவார்கள். பக்கத்தில் போய் பார்த்தால் தானே எப்படி என்று தெரியும்?

எல்லோரும் அப்படித்தான் என்று பொதுவாக சொல்ல முடியாது.

சரிதான்.

யோசித்தவளுக்கு கணேஷ் நிச்சயம் அரவிந்த் போல் இருக்க மாட்டான் என்று தோன்றியது.

அப்போது அவள் மொபைல் அடிக்க எடுத்துப்பார்த்தவள் முகம் மலர்ந்தது. யாரைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தாளோ அவன் தான்.

“நான் கணேஷ்”

“தெரியும் சொல்லுங்க”

“ஸ்கூல் ஹெட் மாஸ்டர் கிட்ட பேசிட்டேன் நாளைக்கு காலைல பத்து மணிக்குப் போனா டிசி வாங்கிடலாம்”

கணேஷ் சொல்ல புவனாவின் முகம் மலர்ந்தது.

“ரொம்ப தேங்க்ஸ்”

“இது ரொம்ப சாதாரண விஷயம். நீங்க போய் கேட்டிருந்தாலே கொடுத்திருப்பாங்க “

“ம்”

சொன்னவள் அழைப்பைத் துண்டிக்கவில்லை. அவனும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனம் காக்க புவனா அமைதியாக இருந்தாள்.

“என்னங்க?” அவன் அழைக்க

“ம்” என்றாள்.

“நல்லா இருக்கீங்களா?”

அவன் ஏன் அப்படி கேட்டான் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ம்”

“சரிங்க”

“ம்”

“அப்புறம் ஒரு விஷயம்”

“சொல்லுங்க”

“”என்னோட மாமா பொண்ணு அனிதா உங்களுக்கு தெரியும் தானே?”

“ம் தெரியும்”

“உங்களுக்கு சப்ஜெக்ட்ல ஏதாவது டவுட்னா அவ சொல்லித் தருவா. நான் அவ கிட்ட சொல்லியிருக்கேன். “

கணேஷ் சொல்ல மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ்”

“பரவாயில்லைங்க இதுல என்ன இருக்கு?”

“ம்”

“நான் வெச்சிடவா?”

“ம்”

கணேஷ் அழைத்துப் பேசியதில் நிம்மதியாக உணர்ந்தவள் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தாள். கதவைத் திறக்க அரவிந்த் தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான்.

புவனா ஒன்றும் பேசாமல் சோபாவில் சென்று அமர

“என்னடி என்ன அப்படி பார்க்கிற? இன்னிக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு தான். அதனால என்ன ஸ்டெடியா வீட்டுக்கு வந்துட்டேனே?”

அரவிந்த் நா குழறியபடி கேட்க புவனா ஒன்றும் சொல்லவில்லை.

“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?”

“என்ன சமைச்சிருக்கே?”

“கத்திரிக்கா சாம்பார்”

“அடச்சீ அதை நீயே தின்னு” சொன்னவன் தன் உடைகளைக்கூட கழட்டாமல் படுக்கையறைக்குச் சென்று அப்படியே கவிழ்ந்து படுத்தான்.

புவனாவிற்கு பசித்தது ஆனாலும் சாப்பிடத் தோன்றவில்லை. சாதத்திற்கு தண்ணீர் ஊற்றினாள்.

உள்ளே அரவிந்த் என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்த்தாள்.அவன் அளவுக்கு மீறிய போதையால் படுக்கையில் கிடக்க அந்த நிலையிலும் அவளுக்கு ஒரு நிம்மதி இருந்தது. அதற்கு காரணம் அவன் அவளை அன்று இரவு தொந்தரவு செய்ய மாட்டான் என்பதே.

புவனாவிற்கு தூக்கம் வரவில்லை. டிவி முன் அமர்ந்தாள்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோம்” ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க புவனாவிற்கு கோபம் வந்தது.

எல்லா இடங்களிலும் டாஸ்மாக் வைத்து பெரும்பாலான ஆண்களை குடிக்க வைத்து அவர்கள் வீடுகளில் உள்ள பெண்களின் கண்ணீரைத் துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் இந்த அரசின் சாதனையா? யோசித்தவளுக்கு தான் என்றோ படித்த காமராஜரின் வரலாறு நினைவிற்கு வந்தது. அனைவரிடமும் கருணை கட்டிய காமராஜர் ஒரு சாராய வியாபாரிக்கும் அவன் மனைவிக்கும் கருணை காட்ட மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம். ஊரில் ஒருவன் சாராயம் விற்கிறான் என்றால் அந்த ஊர் மொத்தமும் கெட்டுவிடும் என்பதுதான். அப்படி ஆட்சி நடந்த தமிழகத்தில்தான் இப்பொழுது டாஸ்மாக் வருமானம் அரசிற்கான முக்கிய வருவாயாகப் பார்க்கப்படுகிறது.

எதைப் பற்றி யோசித்து என்ன பயன்? என் விதி சரியில்லை என்றால் நான் தானே அனுபவிக்க வேண்டும்?

புவனா படுத்தாள். தூக்கம் வரவில்லை. குளிர்காற்று ஜன்னல் வழியாக வீசியது. தன்னை யாராவது நேசமாய் அணைத்துக் கொள்ள வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. போர்வை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டு பிடிவாதமாய் உறங்க முற்பட்டு சிறிது நேரத்தில் அவளுக்கே தெரியாமல் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை சீக்கிரமாகவே கிளம்பி இருந்த புவனாவை வியப்பாய் பார்த்த அரவிந்த் கேட்டான்.

“எங்க கிளம்பிட்டே?”

“ஸ்கூலுக்கு போயிட்டு டிசி வாங்கிட்டு வரணும்”

“எதுக்கு?”

“நான் டென்த் டைரக்டா எழுதறேன்”

“வேண்டாம்”

“புரியல எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க?”

“இப்ப நீ படிச்சு என்ன கலெக்டர் ஆகப் போறியா?” அவன் கேள்வியில் நக்கல் இருக்க அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக பதில் சொன்னாள்.

“அது எனக்கு தெரியாது ஆனா எனக்கு படிக்க விருப்பம் இருக்கு. நான் படிக்கப் போறேன்”

“காசு எவன் தருவான்?”

“யாரும் தர வேண்டாம் என்னோட படிப்புக்கு நானே பார்த்துக்கறேன்”

“எப்படி?”

“எனக்கு டைலரிங் தெரியும் பீஸ் வாங்கித் தச்சுக் கொடுத்தா எனக்கு காசு வரும்”

புவனா அப்படி சொல்வாள் என்பதை எதிர்பார்க்காத அரவிந்த் அவளை கோபமாய் பார்த்தான்.

“என்னடி ரொம்ப திமிரா பேசற?”

“நான் என்னங்க திமிரா பேசறேன்? நீங்க கேள்வி கேட்டீங்க. நான் உங்களுக்கு பதில் சொன்னேன்.”

“நீ அப்ளை பண்ண வேண்டாம்”

“ஏன்?”

“எனக்கு பிடிக்கல”

“உங்களுக்கு ஏன் பிடிக்கணும்? படிக்கப் போறது நான்தான். எனக்குப் பிடிச்சிருக்கு நான் படிக்கிறேன்”

புவனா தொடர்ந்து பேசியது அவனுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவளை வெறித்தான்.

‘எங்க போயிடப் போறே? பார்த்துக்கறேன்டி உன்ன’ மனதிற்குள் கருவினான்.

சரியாக பத்து மணி அளவில் புவனா தான் படித்த பள்ளிக்குக் கிளம்பினாள்.

உள்ளே சென்று தலைமை ஆசிரியர் அறை எங்கே இருக்கிறது என்று பார்க்க எதிரில் கணேஷ் நின்றான். அந்நேரத்தில் அவனை எதிர்பாராமல் அங்கே பார்த்ததில் சட்டென்று அவள் முகம் மலர்ந்ததைக் கணேஷும் பார்த்து விட்டான்.

“வாங்க குட் மார்னிங்”

“குட் மார்னிங் நீங்க?”

“உங்க டிசி வாங்கத்தான் வந்தேன்” அவன் சொல்ல தனக்குள் பொங்கிய மகிழ்ச்சிக்கான காரணம் புரியாமல் புவனா தவித்தாள் அதைவிட அவள் உணர்வை அவன் அறிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தாள்.

அவளையே பார்த்தபடி வந்த கணேஷ் எதிரில் இருந்த ஒரு சிறிய துணை கவனிக்காமல் மோதிக் கொள்ளப்போக சட்டென்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டாள். அதை எதிர்பாராதவன் அவள் மீது மோதி நிற்க புவனாவிற்கு படபடப்பு அதிகமானது.

என்னாச்சு எனக்கு ? கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்து. இவன் என் மேல மோதுனதில எனக்கு ஏன் இப்படி சந்தோசம் வருது?

புவனா தவித்த அதே வேளையில் கணேஷ் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

இவள் இவ்வளவு மென்மையானவளா?

கணேஷ் தன்னை மறந்து புவனாவை காதலுடன் பார்க்க அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் பார்வையை தவிர்க்க முற்பட்டாள்.

“கணேஷ்” அழைத்தாள்.

“ம்”

“என்னாச்சு?”

“ஸாரி”

“எதுக்கு?”

“நான் வேணும்னே உங்க மேல மோதல”

“தெரியும்”

“தேங்க்ஸ்”

“இது எதுக்கு?”

“என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு”

“இட்ஸ் ஓகே”

கணேஷ் தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றான். புவனா அவனைத் தொடர்ந்தாள்.

ஏற்கனவே கணேஷ் சொல்லியிருந்ததால் டிசி தயாராக வைக்கப்பட்டிருந்தது.

தலைமை ஆசிரியர் புவனாவை பாசமாய் பார்த்தார்.

“என்னம்மா திரும்ப படிக்கப் போறியா?”

“ஆமா சார்”

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குமா. நல்லா படிமா . ஏதாவது உதவி வேணும்னா இங்க க் கூட வந்து கேட்கலாம் “

அவர் சொல்ல புவனா அவரை கும்பிட்டாள்.

“ரொம்ப நன்றி சார்”

இருவரும் வெளியே வந்தனர்.

ஒரே நேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஷூம் தன்னைப்போல் தவித்தது புவனாவிற்கு வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை அவனும் என்னைப் போல் தானா என்ற கேள்வி உள்ளுக்குள் வர அவள் மனம் உடனடியாக அதை மறுத்தது.

கணேஷ் நிச்சயமாக அப்படி இருக்க மாட்டார்.

யோசித்தவள் கணேஷ் முகத்தைப் பார்த்தாள். என்னதான் கம்பீரமான ஆணாக இருந்தாலும் அவன் முகத்தில் தெரிந்த அப்பாவித்தனமும் குழந்தைத்தனமும் அவளை அவளுக்கும் தெரியாமல் அவன்பாற் ஈர்த்துவிடத் தன்னை மறந்து ரசித்தவள் கணேஷ் “ என்னங்க” என்று அழைத்ததில் கலைந்தாள். தவறு செய்து விட்டோமோ என்ற கலக்கம் அவள் முகத்தில் தோன்ற அதை கவனித்த கணேஷ் மென்மையாகக் கேட்டான்.

“என்னங்க”

“ம்”

“ஏதாவது சாப்பிட்டுப் போலாமா?”

அதை அவனிடமிருந்து எதிர்பாராதவள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைப்பாய் பார்த்தாள்.

“நாமளா ?”

“ம்”

“வேண்டாம் கணேஷ்” அவள் சொல்ல அவன் முகம் சட்டென்று வாடியது போல் உணர்ந்தாள். உடனே “சரி வாங்க” என்று அழைத்தாள். அவனுடன் சென்று ஏதாவது சாப்பிட்டால் அதை யாராவது பார்த்துவிட்டால் தனக்கும் அவனுக்கும் இருவருக்கும் பெயர் கெடும் என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தும் அவன் முகம் வாடியது அவளால் தாங்க முடியவில்லை.

உடனே தன் மனதை மாற்றிக் கொண்டு அவள் அவனை அழைத்தது கணேசை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

பள்ளிக்கு எதிரில் இருந்த ராதா கூல்ட்ரிங்க்ஸ் கடைக்குச் சென்றனர்.

எதிரெதிரில் அமர்ந்தனர்.

“என்ன சாப்பிடறீங்க?” கணேஷ் கேட்க

“ஏதாவது “ என்றாள்.

“உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள். தன்னிடம் முதல் முறையாக கேட்கும் ஒருவன். இதுவரையிலும் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று யாரும் கேட்டதில்லை. அவனை மகிழ்வாய் பார்த்தபடி சொன்னாள்.

“பாதாம் கீர்”

தொடரும்
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 7
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.