மலரினும் மெல்லியது காமம் 6

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
கணேஷ் தன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்க எதிரில் புவனா வர உள்ளே ஒரு படபடப்பு அவன் கேட்காமலே ஒட்டிக்கொண்டது.

அவளை பார்க்கும் போது வரும் உணர்வு அவனுக்கே வியப்பாக இருந்தது. இத்தனைக்கும் பெண்களிடத்தில் அவன் பேசாமல் இல்லை. யாராக இருந்தாலும் பேசுவான். அதற்காக தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருக்க மாட்டான். அவன் பேசத் தயங்கும் அல்லது பேச முடியாமல் தவிக்கும் ஒரே பெண்ணாக புவனா மட்டுமே இருப்பது அவனுக்கே ஒரு வித்தியாசமான உணர்வைத்தான் தந்தது.

பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான மாணவிகள் வரும் பொழுது அங்கிருந்து தப்பித்து ஓடுவது போன்ற மனநிலை அவனுக்கும் வர தன்னையும் மீறி அவன் சிரித்து விட புவனா அவனை கேள்வியாகப் பார்த்தாள். அதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் புன்னகைத்தான். புவனா புரியாமல் பார்த்தாள். ஏதாவது பேச வேண்டும் என்று

“நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டான் கணேஷ்.

‘ம் நீங்க?”

“எனக்கென்ன எந்த பிரச்னையும் இல்ல. ரொம்ப நல்லாயிருக்கேன்” அவன் அப்படி சொன்னது புவனாவிற்குப் பிடித்திருந்தது. அவன் குரலில் தெரிந்த உற்சாகம் அவன் நம்பிக்கையை பிரதிபலித்தது. இவன் மற்றவர்கள் மாதிரி இல்லையென்று யோசித்தாள்.

யாரிடமாவது போய் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டால் பெரும்பாலோர் “என்னத்த சொல்றதுங்க ? வச்சு செய்யுது.” என்றோ “ஏதோ போயிட்டிருக்கு” என்றோ கூறுபவர்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறாள். “நன்றாக இருக்கிறேன்” என்று பெரும்பாலோர் சொல்வதில்லை. அதற்குக் காரணம் யாருக்கும் யாரிடமும் அவர்கள் உண்மை நிலையைப்பகிர்வதற்கு விருப்பமில்லை.

புவனா தன்னை மலர்ந்து பார்க்க கணேஷ் தடுமாறினான்.

ஏதாவது பேச வேண்டும் போல் தோன்றியது. அதே நேரத்தில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் திருதிருவென்று முழித்தான். அவன் அப்படி முழிப்பது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

எதற்கு இப்படி டென்ஷன் ஆகிறான்? நான் என்ன பூதமா? யோசித்தவள் தன்னை மறந்து சிரிக்க அவள் சிரிப்பதை ரசித்த கணேஷ் “ஏங்க ?” என்று பாவமாகக் கேட்டான்.

“இல்லங்க ஒண்ணுமில்ல”

“பரவாயில்லைங்க சொல்லலாம்”

“இல்ல நீங்க என்னப் பார்த்து பயந்த மாதிரி தோணுச்சு எனக்கு. அதான் நான் என்ன பூதமான்னு யோசிச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்துடுச்சு”

புவனா சொல்ல சட்டென்று கணேஷ் அவள் விழிகளைப் பார்த்தான். அவன் பார்வையைத் தாங்க முடியாதவள் வேறு எங்கோ பார்த்தாள்.

“நான் எதுக்கு உங்களப் பார்த்து பயப்படணும்?”

“எனக்கு தோணுச்சுன்னுதான் சொன்னேன். பயப்பட்டீங்களா இல்லையான்னு நீங்கதான் சொல்ல முடியும்”

புவனா சொல்ல சட்டென்று எதையும் யோசிக்காமல் சொன்னான் கணேஷ்.

“உண்மையாகவே பயம் தான்”

அவன் அப்படி சொல்வான் என்பதை எதிர்பார்க்காத புவனா அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“ ஏன்?”

“தெரியல”

“அது எப்படி தெரியாமப் போகும்?”

“நிஜமாத் தெரியலங்க. என் அப்படின்னு நானே பல முறை யோசிச்சுப் பார்த்திருக்கேன். ஆனா எனக்கு பதிலே கிடைக்கல”

கணேஷ் மிக இயல்பாக சொல்ல புவனா அவன் விழிகளை ஒரு முறை பார்க்க அதில் உண்மை தெரிந்தது.

“இனிமே நீங்க என்னப் பார்த்து பயப்பட வேண்டாம் “ அவள் மெலிதான புன்னகையுடன் சொல்ல கணேஷ் மனதிற்குள் உற்சாகம் கரை புரண்டது. மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவன் சொன்னதற்கு என்ன பொருள் என்று அப்போதே மனம் ஆராய்ந்தது.

மனம் எப்பொழுதும் இப்படித்தான் மிகவும் பிடித்தவர்கள் சொல்லும் ஒவ்வொரு சிறு வார்த்தைக்கும் ஒவ்வொரு முறையும் புதிய பொருளைக் கொண்டுவரும்.

அப்படியா இப்படியா என்று தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வைக்கும். இப்படி இருந்தால் நல்லது என்று மனம் ஒரு மாதிரியாக எதிர்பார்க்கும்.

கணேஷுக்கும் அது நிகழ்ந்தது.

“எங்க கிளம்பிட்டீங்க ?” கணேஷ் கேட்டான்.

“அது வந்து…”

“பரவால்ல சொல்லுங்க”

“நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப அப்ப இருந்த சூழ்நிலையால படிப்பு பாதியில் விடற மாதிரி ஆயிடுச்சு”

“ம்”

“இப்ப டைரக்டா பத்தாவது எழுதலாம்னு டீச்சர் சொன்னாங்க.”

“யாரு? சரோஜா டீச்சரா ?”

“ம்”

“கண்டிப்பா எழுதுங்க நல்ல விஷயம்”

அவன் ஊக்கப்படுத்த அவள் மகிழ்ந்தாள். அதே நேரத்தில் அரவிந்த் அவளை ஏளனப்படுத்தியதும் நினைவுக்கு வந்து போக அவள் முகம் மாற அதைப் பார்த்த கணேஷ் குழம்பினான்.

“என்னங்க ஆச்சு?”

“ஒண்ணுமில்ல”

“நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே?”

“இல்லைங்க”

“ம்”

“சி இ ஓ ஆபீஸ்க்குப் போறேன்”

“தனியாவா? “

“ம்”

“அவர் வரலையா?”

“இல்ல”

“ஏதாவது ஹெல்ப் வேணுமா?”

“தேங்க்ஸ் நான் மேனேஜ் பண்ணிக்கறேன்”

“ம்”

“நான் வர்றேன்”

“அங்க போயிட்டு ஏதாவது ஹெல்ப் வேணும்னா போன் பண்ணுங்க”

“ம்”

புவனா நடக்க ஆரம்பித்தாள்.

***

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் ஈரோடு.

புவனாவிற்கு யாரை பார்ப்பது என்ன கேட்பது என்பதில் தயக்கம் இருந்தது.

ஏதோ ஒரு நம்பிக்கையில் வந்து விட்டாள். ஆனால் வந்த பின் தான் தெரிந்தவர்கள் யாராவது வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அவள் தயங்கி நிற்பதைப் பார்த்து வெளியே வந்த ஒருவர் அவளிடம் கேட்டார்.

“யாரும்மா நீ ? என்ன வேணும்?”

“வணக்கம் சார்”

“வணக்கம்”

“சார் டென்த் டைரக்டா எழுதறதுக்கு ..”

“தர்ட் ஃப்ளோர்”

“தேங்க்ஸ் சார்”

உள்ளே நுழைந்தவள் எதிரில் வந்த பெண்ணிடம் விசயத்தை சொல்ல “அந்த மூணாம் நம்பர் டேபிள்” என்ற பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கே சென்றாள்.

“சொல்லுமா”

“சார் டென்த் டைரக்டர் எழுதணும்”

“ஃபெயிலா?”

“இல்ல சார் நைன்த் டிஸ்கன்டினியூ பண்ண ஸ்டுடன்ட்”

“எந்த ஸ்கூல்?”

சொன்னாள்.

“டி சி இருக்கா?”

“டி சி யா?”

“டிசி வேணும் எந்த ஸ்கூல்ல படிச்சியோ அங்க போய் டிசி வாங்கிட்டு வரணும். “

“சார்”

“டிசி வாங்கிட்டு இந்த அப்ளிகேஷன் ஃபில்லப் பண்ணிட்டு வாங்க” சொன்னவர் ஒரு விண்ணப்பத்தைக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டாள்.

புவனா இதை எதிர்பார்க்கவில்லை.

இப்போது டிசிக்கு என்ன செய்வது?

அவள் படித்த காலத்தில் இருந்த தலைமை ஆசிரியர் இப்போது இல்லை. இப்போது அனைவரும் மாறிவிட்டார்கள்.

டிசிக்கு என்ன செய்வது?

புவனா யோசித்தாள்.

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க” கணேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

கணேஷ் கவுன்சிலர் தானே? புவனாவிற்கு நம்பிக்கை பிறந்தது.

தன் மொபைலை எடுத்தவள் கணேஷுக்கு அழைத்தாள்.

ரிங் போனது.

“சொல்லுங்க”

“நான் புவனா பேசறேன்”

“தெரியும் சொல்லுங்க”

“நான் இங்க வந்தேன்”

“சிஇஓ ஆபீஸா?”

“ம்”

“என்ன சொன்னாங்க?”

“டிசி வேணும்னு சொன்னாங்க”

“அது உங்ககிட்ட இல்லையா?”

“ஸ்கூல்ல இருந்து கலெக்ட் பண்ணல”

“கவலைப்படாதீங்க நாம வாங்கிடலாம்”

“ஒண்ணும் பிரச்னை இல்லையா?”

“ஒரு பிரச்னையும் இல்ல”

“தேங்க்ஸ்”

“ஃபார்ம் கொடுத்தாங்களா?”

“ம்”

“அது கொண்டு வாங்க டிசி வாங்கிட்டு ஒண்ணா திரும்ப கொடுத்திடலாம்”

“சரிங்க”

புவனா வீட்டுக்குச் செல்வதற்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். மனதை கணேஷ் நினைவுகள் ஆக்ரமித்தன.

அவன் தன்னைப் பார்த்து பயந்தது அவளுக்கு நினைவிற்கு வந்தது.

அவனுக்கு எதற்காக அப்படி ஒரு மாறுபட்ட உணர்வு என்பது அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த உணர்வால் எந்தப் பயனும் இல்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

இப்படி ஒருவனை திருமணத்திற்கு முன்பாக சந்தித்திருந்தால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். என் விதி சரியில்லை. வேறு என்ன சொல்ல முடியும் நான்?

யோசித்தவள் ஒருவேளை அவனே தன் கணவனாக வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தாள்.

வாழ்க்கை மிக அழகாக ஆசீர்வதிக்கப்பட்டதாக அமைந்திருக்கும் என்று தோன்றியது. அதே நேரத்தில் அப்படி சிந்திப்பது தவறு என்று அவள் மனசாட்சி அவளுக்கு எடுத்துரைக்க பிடிவாதமாக அவன் நினைவில் இருந்து விடுபட வெளியே வேடிக்கை பார்த்தாள்.

வானில் இருந்த மேகக் கூட்டங்கள் எல்லாம் கூடவே ஓடி வருவது போல் அவளுக்குத் தோன்றியது. சிறுவயதில் கவிதை எழுதியது நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் நான் கவிதை எழுதுவதில்லை ஏன் ? யாருக்குத் தெரியும்? எப்பொழுது கவிதை எழுதுவதில்லை என்பதைக்கூட உணர முடியாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்.

கொஞ்ச நாட்களாக ஏதோ ஒரு நம்பிக்கை ஆனால் அது தவறான நம்பிக்கை என்று மனம் அறிவுறுத்தினாலும் அந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு இதம் தருகிறது. கற்பனையிலாவது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று சில நேரம் மனமும் அனுமதித்து விடுகிறது.

இன்னும் எனக்கு என்னென்ன தரப் போகிறதோ என் விதி? தெரியவில்லை.

புவனா பெருமூச்சு விட அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.

இறங்கினாள்.

தன் வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தவள் வழியில் கணேஷின் வயல் வர எங்காவது இருக்கிறானா என்று தன்னையும் மீறி சுற்று முற்றும் பார்த்தாள்.

எங்கேயும் இல்லை.

என்னாகிவிட்டது என் மனதிற்கு? நான் இப்படிப்பட்ட பெண் இல்லை.

எதற்காக உன்னை நீயே திட்டிக் கொள்கிறாய்?

நான் ஒன்றும் திட்டவில்லையே.

இப்படிப்பட்ட பெண் என்றால் நீ எப்படிப்பட்ட பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

திருமணமான ஒருத்தி கணவன் வீட்டில் இருக்கும் பொழுது வேறொருவனைப் பற்றி நினைத்துப் பார்த்தால் அது தவறு தானே?

யார் சொன்னது ?

உலக நியதி அதுதானே?

இருக்கலாம் ஆனால் ..

ஆனால் ?

கணவன் கணவனாக இருக்க வேண்டும் அது முக்கியம்.

அப்படித்தானே அரவிந்த் இருக்கிறார்?

இதை நீ நல்ல மனநிலையுடன் தான் சொல்கிறாயா?

ஏன்?

ஒரு குடிகாரன் உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் எப்பொழுதும் உன்னை ஏளனப்படுத்திக் கொண்டு எடுத்தெறிந்து பேசிக்கொண்டிருந்தால் உனக்கு வாழ்க்கை நன்றாக இருக்குமா?

என்றாவது ஒருநாள் அவர் மாறத்தானே செய்வார்?

நீ சொல்வதாக அப்படி அவன் ஒருநாள் மாறினாலும் அதுவரை காத்திருக்கும் உன் போன்ற பெண்ணுக்கு கொடுக்கப்படும் நியாயம் என்ன?

என்னைப்போல் பலர் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் சேர்த்துதான் நான் கேட்கிறேன்.

சரி கணவன் சரி இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதற்காக என்ன செய்வது? விட்டுச் சென்று விடுவதுதானா தீர்வு?

ஒரு மனைவிக்கான மதிப்பை அளிக்காத கணவன் கணவன் அல்ல. அவள் மதிப்பை சற்றும் உணராது வார்த்தைகளால் குதறி எடுப்பவன் கணவனாக இருக்க முடியுமா? அவனை விட்டு சென்று விடுவதுதானே நல்ல தீர்வாக இருக்க முடியும்?

என்னால் முடியாது

ஏன்?

எனக்கான மதிப்பை இந்த சமூகம் எனக்கு தராது.

இந்த சமூகம் நீ கஷ்டப்படும் போது உன்னுடன் வருமா? உன் கஷ்டத்தைப் போக்குமா?

வந்து…

வருமா வராதா?

வராது.

இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்தனி தான் அவரவருக்கான இன்ப துன்பங்கள் அவரவர்க்கு மட்டுமே. உனக்கு ஒரு விஷயம் சரி என்றால் அது சமூகத்திற்கு சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.

அப்படி என்றால்?

புரிந்து கொள்.

தொடரும்
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.