மலரினும் மெல்லியது காமம் 4

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
அந்த இரவு நேரத்தில் கணேஷை சற்றும் எதிர்பார்க்காத புவனா அவனை திகைப்பாய் பார்த்தாள்.

“என்னங்க”

“நான் டவுனுக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். அப்ப ஒரு பைக் கீழ விழுந்திருந்தது. யாருன்னு போய் பார்த்தா உங்க வீட்டுக்காரர். கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு. கீழ விழுந்ததில அடிபட்டிருந்தது. அதான் அவரப் போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டேன்.”

கணேஷ் சொல்ல புவனா பதறினாள்.

“எந்த ஹாஸ்பிடல்? இப்ப அவர் எப்படி இருக்கார்?”

“கெட் வெல் ஹாஸ்பிடல்ல. ஒண்ணும் பிரச்னை இல்ல. நல்லாத்தான் இருக்கார்.”

“ரொம்ப தேங்க்ஸ்”

“பரவால்ல. நீங்க இப்பவே போகணும்னு இல்ல. காலையிலக் கூட போலாம். உங்களுக்கு தகவல் சொல்லத்தான் வந்தேன். அப்ப நான் வரட்டுங்களா?”

“இல்ல எனக்கு இப்பவே போகணும்”

புவனா சொல்ல கணேஷ் ஒரு நிமிடம் யோசித்தான்.

“சரி வாங்க”

“இல்ல நான் போய்க்கிறேன் ப்ளீஸ்”

“இப்ப டைம் என்னன்னு பாருங்க? மணி பத்தரை. நைட் டைம்ல தனியா எப்படி அங்க போவீங்க ?”

“கேப் சொல்லிக்கறேன்”

“போன் பண்ணிப் பாருங்க. நைட் வருவானான்னு தெரியல. வந்தாலும் கேப்ல நைட் தனியாப் போறது எனக்கு சரியாப்படல” அவன் குரலில் தெரிந்த நிஜமான அக்கறை அவளை மேற்கொண்டு ஒன்றும் பேசவிடவில்லை.

அவசரமாய் வீட்டைப் பூட்டி வெளியே வந்தாள்.

அவன் பைக் நிற்பதைப் பார்த்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் புரிந்து கொண்டான்.

“பைக் இங்கயே இருக்கட்டுங்க. கேப் சொல்லுங்க. நாம ஹாஸ்பிடல் போலாம் “

கணேஷ் சொல்ல புவனா சரவணா கால் டாக்ஸிக்கு போன் செய்தாள்.

பேசிவிட்டு வைத்தவளை கணேஷ் பார்த்தான்.

“என்னாச்சு?”

“டிரைவர் கால் பண்ணுவார்”

“ம்”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கார் வந்து நின்றது. இருவரும் ஏறிக்கொண்டனர்.

“எதுக்கு உங்களுக்கு வேற வீண் சிரமம்?” புவனா கேட்க அவன் புன்னகைத்தான்.

“இதுல சிரமம் ஒண்ணுமில்லங்க. உங்கள கொண்டு போய் பத்திரமாக ஹாஸ்பிடல்ல விட்டுட்டு நான் வீட்டுக்குப் போனா தூங்கிடுவேன். ஒருவேளை உங்கள இப்படியே விட்டுட்டு வீட்டுக்குப் போனா எனக்கு தூக்கம் வராது “ கணேஷ் சொல்ல சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் புவனா. இருவர் விழிகளும் சந்தித்து மீண்டன.

புவனாவிற்கு கணேஷின் அக்கறை பிடித்திருந்தது. மனம் தானாக அவனை அரவிந்துடன் ஒப்பிட்டது.

அரவிந்த் ஒரு நாள் கூட இப்படி அக்கறையாக நடந்து கொண்டதில்லை. எங்காவது தடுமாறினால் கூட பார்த்து பத்திரமா என்று சொல்லமாட்டான். பார்த்து வர முடியாதா கண்ணு என்ன பொடனிலயா இருக்கு என்று எரிந்து விழுவான்.

ஒன்று மட்டும் நிச்சயம். கணேஷை திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவள்.

யோசித்தவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். எங்கோ வெளியில் வேடிக்கை பார்த்தவன் கேசம் காற்றில் கலைய அதை இயல்பாய் கோதியவனை தன்னை மறந்து ரசித்தவள் சட்டென்று தன்னை கடிந்து கொண்டாள்.

என்ன பெண் நான். இந்த மாதிரி சூழ்நிலையில் இப்படி செய்வதற்கு எப்படி என்னால் முடிகிறது?

இரு கண்களையும் மூடியபடி முருகனை மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

‘முருகா எப்பவும் என் கூட இருந்து என்னை நல்வழிப்படுத்து’

மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையை கார் அடைந்தது.

இருவரும் இறங்கினர்.

கணேஷ் காரிடாரில் முன்னால் நடக்க அவள் அவனைத் தொடர்ந்தாள்.

ஓர் அறை முன் நின்ற கணேஷ் “இங்கதான்” என்றான்.

புவனா உள்ளே சென்று பார்க்க அரவிந்த் தூங்கிக் கொண்டிருந்தான்.

நெற்றியில் தோளில் மணிக்கட்டில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.

புவனாவிற்கு பெருமூச்சு வந்தது.

அளவுக்கு மீறி குடித்துவிட்டு இப்படி விழுந்து கிடக்கும் அளவிற்கு அந்தக் குடியில் அப்படி என்னதான் இருக்கிறதோ?

சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அரவிந்தையே மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்த புவனா கணேஷிடம் திரும்பினாள்.

“சரி நான் பார்த்துக்குறேன் நீங்க கிளம்புங்க”

“ஏதாவதுன்னா எனக்கு போன் பண்ணுங்க உடனே நான் வர்றேன்” கணேஷ் சொல்ல தலையாட்டினாள்.

கணேஷ் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“என்னோட நம்பர் தெரியுமா உங்களுக்கு ?”

“தெரியாது”

“நோட் பண்ணிக்கங்க”

அவன் சொல்ல தன் மொபைல் எடுத்து அதில் குறித்துக் கொண்டாள்.

கணேஷ் அவளிடமிருந்து விடை பெற்று வெளியில் வந்தான்.

காத்திருந்த காரில் ஏறிக் கொண்டான். பனிக்காற்று வீசியது.

மனதில் புவனா மீது பரிதாபம் தோன்றியது.

பாவம் மிகவும் நல்ல பெண். கணவன் இப்படி வாய்த்திருக்கிறான். இப்படி நல்ல பெண்கள் வாழ்க்கையில் அமைந்தும் அவர்களைக் கொண்டாடாமல் குடிப்பதற்காக பார்க்குப் போய் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து குடிப்பவர்கள் மீது அவன் மனதில் வெறுப்பு தோன்றியது.

புவனாவின் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் வீட்டில் இருந்தான்.

“என்னப்பா இவ்வளவு லேட்?” அவன் அம்மா அலமேலு கேட்க சொன்னான்.

“அடப்பாவமே அது ரொம்ப நல்ல பொண்ணு பாவம்” சொன்ன அலமேலுவிடம் கேட்டான் கணேஷ்.

“உனக்கு அந்த பொண்ணு தெரியுமாம்மா?”

“நல்லாத் தெரியும். எப்பவுமே சிரிச்ச முகத்தோட இருப்பா” சொன்ன அலமேலு கணேசனிடம் கேட்டாள்.

“சாப்பிட்டியா?”

“இல்லம்மா”

“வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

சொன்ன அலமேலு ஒரு தட்டில் தோசையும் சட்னியும் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டான்.

“நீ சாப்டியாமா ?”

“ம்” சொன்ன அலமேலு கணேஷின் முகத்தைப் பார்க்க புரிந்து கொண்டவன் புன்னகையுடன் கேட்டான்.

“தரகர் வந்திருந்தாரா?”

“எப்படி தெரியும்?”

“அதான் நீ ஒண்ணும் சொல்லாம என் முகத்தைப் பார்க்கிறியே? அதில் இருந்தே தெரியலையா?” கணேஷ் சொல்ல அலமேலு சிரித்தாள்.

“இந்த வருஷமாவது உன்னோட கல்யாணம் நடந்தா சந்தோஷப்படுவேன்”

“விடுமா பார்த்துக்கலாம்”

“நான் போறதுக்குள்ளே உனக்கு ஒரு நல்லது நடத்தி வச்சுப் பார்க்கணும்னு ஆசைப்படறேன் பா”

“அதெல்லாம் நீ அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேம்மா. என்கூட ரொம்ப நாள் நீ இருப்பே”

சொன்ன கணேஷை பாசமாய் பார்த்த அலமேலு

“ ஏதாச்சும் சொல்லி என் வாயை அடைச்சுடு” என்று சொல்ல கணேஷ் சிரித்தான்.

மறுநாள் காலை.

கணேஷ் எழும்போது காலை 6 மணி.

வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து நின்றான்.

அலமேலு சொம்பில் கருப்பட்டி காப்பியை கொண்டு வந்து வைத்தாள். அவ்வளவு சீக்கிரமாக குளித்து கிளம்பியிருந்த அம்மாவைப் பார்த்த கணேஷ் ஆச்சரியமானான்.

“எங்கம்மா கிளம்பிட்டே?”

“முருகன் கோவிலுக்கு . இன்னிக்கு தைப்பூசம்”

“எங்கே?”

“திண்டலுக்கு”

“நானும் வரவா?”

“என்ன கேள்வி? கிளம்பி வா . வெயிட் பண்றேன்.”

அலமேலு சொல்ல கணேஷ் அரை மணி நேரத்தில் குளித்து உடைமாற்றி வெளியே வந்தான்.

“போலாம்மா”

கணேஷ் காரில் ட்ரைவிங் சீட்டில் அமர அலமேலு உள்ளே ஏறி அமர்ந்தாள்.

கணேஷ் காரைக் கிளப்ப முயலும்போது “மாமா நானும் இருக்கேன்” என்ற குரல் அவன் காதில் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அனிதா ஓடி வந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். கணேஷிற்கு அனிதாவின் அப்பா மாமா முறை ஆகிறது.

“உன் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போலாம்னு நினைச்சேன். நீயே ரெடியா ஓடி வர்றே?” அலமேலு கேட்க அனிதா புன்னகைத்தாள்.

“மாமா பாவம். அவரை வெயிட் பண்ண வைக்க வேண்டாம்னு நல்லெண்ணம் அத்தை. அதான்” அனிதா சிரித்தபடி சொல்ல கணேஷ் ஒன்றும் சொல்லவில்லை.

காரை ஓட்டினான்.

அடுத்த கால் மணி நேரத்தில் திண்டல் அடிவாரத்தை அடைந்தனர்.

கீழே இருந்த விநாயகரைத் தொழுது படிக்கட்டுகளில் ஏறினர்.

“ கூட்டம் ஜாஸ்தியா இருக்கு நீ ஏறிடுவியாமா ? “ கணேஷ் அலமேலுவிடம் கேட்டான்.

“அதப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க மாமா நான் இருக்கேன் அத்தையை நான் பத்திரமா பார்த்துக்கறேன். மேலே கூட்டிட்டு போயிட்டு கீழ இறக்க வேண்டியது என்னோட பொறுப்பு “ அனிதா குறும்பாய் சொல்ல அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் சிரிப்பதை தன்னை மறந்து ரசித்த அனிதாவைப் பார்த்த அலமேலு “ போதும் வா” என்று சொல்ல அனிதா வெட்கமாய் சிரித்தபடி படியேறினாள்.

கணேஷிற்கு புவனாவின் நினைவு வந்தது. தன் மொபைல் நம்பரை மட்டும் கொடுத்துவிட்டு வந்ததும் அவள் நம்பரை வாங்காமல் வந்ததும் ஞாபகம் வர ஒரு நிமிடம் யோசித்தான்.

‘இப்பொழுது அரவிந்த் எப்படி இருப்பான்?’

புவனா சமாளித்துக் கொள்வாளா? கூடவே இருந்திருக்க வேண்டுமா?

பைத்தியக்காரன் போல் யோசிக்காதே. நீ எப்படி கூட இருக்க முடியும்?

ஏன் முடியாது?

நீ ஒன்றும் அரவிந்துக்கு சொந்தமோ அல்லது நட்போ அல்ல.

ம்

சொந்தமா நட்போ அல்லாத ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் இருந்தால்?

இருந்தால்?

பாதிப்பு தான்.

யாருக்கு?

இருவருக்கும் . குறிப்பாக அந்தப் பெண்ணுக்கு.

இது ஒன்றும் அந்த காலம் கிடையாது.

எந்தக் காலமாக இருந்தாலும் பெண்களை தவறாகப் பார்ப்பவர்களும் தவறாகப் பேசுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று பார்த்தால் நம் வாழ்க்கையை நாம் வாழ முடியாது.

உண்மை. ஆனால் நாமே எதற்கு ஊர்வாய்க்கு அவல் கொடுக்க வேண்டும்?

அது மட்டுமல்ல. உனக்கு அவள் மீது மதிப்பு இருந்தால் அவளுக்குப் பேர் கெடும்படியான காரியங்களில் ஈடுபட மாட்டாய் அல்லவா?

ஆம் ஈடுபடமாட்டேன்.

அப்படி நீ ஈடுபடாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

என்ன செய்ய வேண்டும்?

அவளைப் பற்றி நினைக்கக் கூடாது.

ஏன்?

அவளுக்கான வாழ்க்கையை அவள் வாழ்கிறாள். அவளைப் பற்றி நீ யோசித்தால் நிச்சயமாக அவளுக்கு நல்லது என்று நீ எதையாவது செய்யத்தான் முற்படுவாய். அது சில சமயங்களில் நல்லதாகலாம் கெட்டதும் ஆகலாம். நல்லது செய்யப் போய் நல்லதில் முடிந்தால் அது நம்மை பாதிக்காது. ஒருவேளை நல்லது செய்யப்போய் அது கெட்டதில் முடித்தால் நமக்கு வருத்தம் இருமடங்காகும். அது வேண்டுமா?

கணேஷ் தனக்கு யோசித்தபடி படியேறினான்.

திண்டல் மலையில் அலங்காரமாக வீற்றிருந்த முருகப்பெருமானை தரிசித்த கணேஷ் புவனாவிற்காகவும் வேண்டிக் கொண்டான்.

“மாமா” அனிதா அழைக்க கணேஷ் நிமிர்ந்து பார்த்தான்.

“ம்”

“பிரசாதம் எடுத்துக்கங்க”

“தேங்க்ஸ்”

“இங்க அன்னதானம் இருக்கு மாமா” அனிதா சொல்ல கணேஷ் சிரித்தான்.

“அங்க சுத்தி இங்க சுத்தி உனக்கு எது தேவையோ கரெக்டா அங்க வந்திடறே”

“என்ன மாமா ?” அனிதா சிணுங்க கணேஷ் சிரித்தபடி சமாதானப்படுத்தினான்.

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்”

சொன்ன கணேஷின் மொபைல் அடித்தது.

யார் என்று எடுத்துப் பார்க்க ட்ரூகாலரில் புவனா என்று காட்டியது.

தொடரும்
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.