பேபி 3

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
பேபி 3

சிவகாமியின் கோர முகத்தைப் பார்த்த வாசந்தி வீறிட்டுப் பின்னால் போக சிவகாமி எழுந்தாள். வாசந்தியை இமைக்காமல் பார்த்தபடி அவளை நோக்கி நடந்தாள்.

“அம்மா ப்ளீஸ் மா எனக்கு பயமா இருக்கு என்ன விட்டுடு” வாசந்தி அலற சிவகாமி சட்டென்று மரம் போல் தரையில் விழ அந்த உருவம் மீண்டும் அவள் முன் நின்றது.

“என்ன வாசந்தி பயந்துட்டியா? பயப்படணும். நீ நல்லா பயப்படணும். கதறனும். கதறி அழணும். உன்னோட பயம் அழுகை கதறல் இதெல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

அந்தக் குரல் வெறித்தனமாய் சொல்ல வாசந்தியின் கண்களில் கண்ணீர்.

“என்ன வாசந்தி அதுக்குள்ள அழற?” கேட்ட உருவம் கீழே கிடந்த சிவகாமியைப் பார்க்க கை மட்டும் தனியாக சிவகாமியை நோக்கிப் போக வாசந்தி அலறினாள்.

“வேண்டாம் எங்க அம்மாவ எதுவும் பண்ணிடாத “ கதறினாள்.

கை சிவகாமியின் அருகில் சென்றது. அவள் கழுத்தைப் பிடித்து நெரிக்க சிவகாமி சுவாசத்திற்குப் போராடினாள். சிவகாமி துடிக்க வாசந்தி அலறினாள்.

“ப்ளீஸ் என்னை என்ன வேணாலும் பண்ணு. எங்க அம்மாவ விட்டுடு. உன்ன கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன்”

வாசந்தி அந்த உருவத்தைப் பார்த்து கெஞ்ச உருவம் உரத்த குரலில் சிரித்தது.

“என்ன வேணாலும் பண்ணலாமா?”

“ம்”

“நான் சொல்றத பண்ணுவியா?”

“செய்…றேன்” வாசந்தி தயக்கமாய் சொல்ல உருவம் சிவகாமியின் மீதிருந்த கையைப் பார்த்தது. கை சிவகாமியை விட சிவகாமி கழுத்தில் கை வைத்தபடி இருமினாள்.

வாசந்தி உருவத்தை பயமாய் பார்த்தாள்.

“நான் என்ன பண்ணனும்?” தயங்கியபடி கேட்டாள்.

உருவம் அவளைப் பார்த்தது.

“நேரம் வர்றப்ப சொல்றேன். நான் சொல்ற வரை நீ இங்கதான் இருக்கணும். என்னைப் பத்தி எங்கயாவது சொன்னா உன் அம்மா அடுத்த நிமிஷமே துடிதுடிச்சு செத்துப்போவா”

உருவம் ஆவேசமாய் சொல்ல வாசந்தி நடுங்கினாள்.

“இல்ல அப்படி எதுவும் பண்ணிடாத. நீ என்ன சொன்னாலும் நான் கேக்கறேன்”

வாசந்தி சொல்ல அந்த உருவம் சட்டென்று எங்கோ மறைந்தது.

வாசந்திக்கு அழுகை வந்தது. அம்மாவைப் பார்த்தாள். சிவகாமி இன்னும் அரை மயக்கத்தில் இருக்க தடுமாறி எழுந்த வாசந்தி சமையலறைக்குள் சென்று டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

“அம்மா”

வசந்தி அழைக்க சிவகாமி மெல்ல அசைந்தாள்.

“அம்மா”

“ம்”

மெல்ல எழுந்த சிவகாமி வாசந்தியைப் பயத்துடன் பார்த்தாள்.

“வாசந்தி”

“அம்மா”

“யாரும்மா அது?”

“தெரியலம்மா”

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

“எனக்கும்தான்”

“அது யாரு என்னன்னு நமக்குத் தெரியணும்”

“எனக்கு தெரியலம்மா”

“நல்லா யோசிச்சு சொல்லு.”

“அம்மா”

“உன்னால யாராவது பாதிக்கப்பட்டு இருப்பாங்க. “

“அப்படி யாரும் இல்லம்மா”

“அது என்ன தூக்கி எறிஞ்சதுல அதோட வெறி தெரிஞ்சது. அது அவ்வளவு சீக்கிரம் நம்மள விட்டுப் போகாது “

சிவகாமி சுற்று முற்றும் பார்த்தபடி சொல்ல வாஸந்தி நடுக்கமாய் பார்த்தாள்.

“அம்மா” அவளுக்கு அழுகை வந்தது.

“மாப்பிள்ளைக்கு உடனே போன் பண்ணு. அவர வரச்சொல்லு”

“சரிமா”

வாசந்தி அனைத்து இடங்களிலும் பயமாய் பார்த்தாள். அந்த உருவம் எங்கும் இல்லை என்பதை உறுதி செய்தவள் தன் மொபைலை எடுத்தாள்.

கணவன் சிவாவிற்கு அழைத்தாள்.

ரிங் போனது.

மறுமுனையில் சிவா எடுத்தான்.

“என்ன வாசு அம்மா வீட்டுக்குப் போனதுல இருந்து இப்பத்தான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா?”

அவன் குரலைக் கேட்டதும் சட்டென்று உடைந்து அழுதாள்.

“என்னங்க” என்றவளுக்கு மேற்கொண்டு ஒன்றும் பேச முடியாமல் போக மறுமுனையில் சிவா பதறினான்.

“வாசு என்னாச்சுடா எதுக்கு அழற?”

“நீங்க கொஞ்சம் நேரா வர முடியுமா?”

“சரி நைட் பஸ் ஏறிடறேன். காலையில உன் முன்னாடி இருப்பேன்”

“ம்”

“என்ன பிரச்னை? அத்தை எதுவும் திட்டிட்டாங்களா?”

“இல்லங்க”

“அத்தைக்கு உடம்பு ஏதாவது?”

“இல்ல நல்லாத்தான் இருக்காங்க”

“வேற என்ன பிரச்னை வாசு ?”

“நேர்ல வாங்க ப்ளீஸ். லேட் பண்ணிடாதீங்க. சீக்கிரமா வாங்க”

“சரி”

சிவாவிடம் பேசிய வாசந்தி சற்று ஆறுதலாய் உணர்ந்தாள்.

தன் கல்லூரி வாழ்க்கையில் இப்படி ஒரு குரல் எங்காவது கேட்டிருக்கிறோமா என்று யோசித்தாள்.

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை.

ஒருவேளை இது சந்தோஷாக இருக்குமா? அவன்தான் வாசந்தியிடம் காதலைச் சொல்லி அவமானப்பட்டவன்.

“உன்னோட மூஞ்சிய எப்பயாவது கண்ணாடில பார்த்திருக்கியா?”

“ஏங்க ?”

“நீ எல்லாம் எந்த தைரியத்துல என்கிட்ட வந்து ப்ரப்போஸ் பண்றே?”

அப்போது அவன் முகம் மாறியது நன்றாகத் தெரிந்தது.

ஒருவேளை அவன்தான் நான் கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டானோ? யாரிடம் கேட்பது?

யோசித்தவள் தன் தோழி புவனாவிற்கு அழைத்தாள்.

“சொல்லுடி என்ன ரொம்ப நாளுக்கு அப்புறம் போன் பண்ணியிருக்கே? “

“புவன் ஒரு சின்ன விஷயம்”

“சொல்லு”

“உனக்கு சந்தோஷ் ஞாபகம் இருக்கா?”

“மறக்க முடியுமா அவனை?”

“ம்”

“இப்ப எதுக்கு அவனப் பத்தி கேக்கற?”

“இல்ல சும்மாத்தான்”

“ம்”

“அவன் எங்க இருக்கான்னு”

“உனக்கு விஷயம் தெரியாதா?” புவனா கேட்க வாசந்திக்குத் திக்கென்றது.

“என்ன விஷயம்?”

“அவன் நீ கிடைக்கலன்னு சூயிசைட் பண்ணிட்டானே”

புவனா சொல்ல வாசந்தி உச்சமாய் அதிர்ந்தாள்.

மறுமுனையில் புவனா சிரித்தாள்.

“லூசு சும்மா சொன்னேன் அவன் ஸ்டேட்ஸ் போய்ட்டான்”

வாஸந்திக்கு புவனா மீது கோபம் வந்தது.

இவன் ஒருத்தி. விஷயம் தெரியாமல் விளையாடுகிறாள்.

வாசந்தி சிவா எப்போது வருவான் என்று காத்திருந்தாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அருகில் தன்னையும் மறந்து தூங்கிய சிவகாமிக்குப் போர்த்திவிட்டாள்.

சட்டென்று கரண்ட் போனது. தன் மொபைலை எடுத்து அதன் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தியைத் தேட… அப்போது அவள் பார்வையில் பட்டது அந்தக் கை.

மிரண்டு போய் சுற்றிலும் பார்க்க மொபைல் வெளிச்சத்தில் ரத்தம் வழியும் வாயுடன் அந்த உருவம் அவள் முன் நின்றது.

எக்கச்சக்கமாய் துடிக்கும் தன் இதயத்தை பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்தியபடி அந்த உருவத்தை பயமாய் பார்த்தாள்.

“நீ என்ன பண்ணனும்னு சொல்ல வந்தேன்”

உருவம் சொல்ல நடுங்கும் குரலில் கேட்டாள்.

“என்ன பண்ணனும்?”

உருவம் தன் கரகரத்த குரலில் சொன்னது.

“கரெக்டா பன்னெண்டு மணிக்கு மயானத்துக்கு வரணும் “

தொடரும்.
 

Author: gavudham
Article Title: பேபி 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.