சைக்யாட்ரிஸ்ட் 6

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
சைக்யாட்ரிஸ்ட் 6

விஷால் தன் மடியில் படுத்திருந்த ஆர்த்தியின் தலையை பாசமாய் கோதிவிட்டான்.

“ஆர்த்தி”

“ம்”

“எல்லாமே இப்பதான் நடந்த மாதிரி இருக்கு . ஃபர்ஸ்ட் டைம் குன்னூர்க்கு அப்பா கூட வந்தது. பக்கத்து வீட்டுல இருந்த உன்னப் பார்த்தது. நீ என் கூட சகஜமாக பேசினது. உன்கிட்ட நான் ப்ரப்போஸ் பண்ணது. நான் ஒவ்வொரு ஊருக்குப் போகும் போதும் கூட வந்து என்கூட தங்கினது… நம்ம கல்யாணம் ..இப்ப நமக்கு குழந்தை வரப்போகுது… எல்லாமே நினைச்சுப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு ஆர்த்தி “

“ம்” சொன்ன ஆர்த்தி விஷாலின் முகத்தைப் பார்த்தாள்.

“ஏன்பா உன் முகம் இப்படி இருக்கு?”

“இல்ல அண்ணா என் புருஷனை காப்பாத்துங்கண்ணான்னு ஒரு பொண்ணு என்கிட்ட வந்து கேட்டா. “

“என்னாச்சுப்பா ?”

“அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் ஒரு ரிப்போர்ட்டர். ஒரு கம்பெனிக்கு போறேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. அந்த கம்பெனியில சட்ட விரோதமா ஏதோ நடக்கிறதா அவருக்கு டவுட் வந்திருக்கு. ஆனா போனவர் திரும்ப வரல”

“என்னப்பா சொல்ற?”

“V டிரக்ஸ் னு கம்பெனி பேரை அந்தப் பொண்ணு சொல்லுச்சு. ஆனா எந்தவிதமான எவிடன்ஸ் இல்லாததால நாங்க மேற்கொண்டு அதை ப்ரொசீட் பண்ண முடியாமப் போயிடுச்சு. “ விஷால் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல ஆர்த்தி அவனையே பார்த்தாள்.

“விஷால்”

“ம்”

“உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு நாள் நீ எதுக்கு போலீஸ் ஆகணும்னு கேட்டேன். இந்த ஜனங்களுக்கு என்னால் ஆன நல்லது எப்பவுமே பண்றதுக்குத்தான் இந்த காக்கி அ ட்ரஸ் எனக்குத் தேவை. இதுதான் நீ சொன்ன பதில்.”

ஆர்த்தி சொல்ல விஷால் பெருமூச்சு விட்டான்.

“கரெக்ட்தான்”

“நீ எப்பவுமே ரூல்ஸ் பார்க்காத. மக்களுக்கு நல்லது பண்ண முடியுமான்னு மட்டும் பாரு. ஒரு வேளை அந்த மாதிரி பார்த்து உனக்கு வேலை போனாலும் கவலையே இல்லை. நான் டீச்சர் வேலைக்கு மறுபடியும் போய் உன்னைப் பார்த்துக்குவேன் “ ஆர்த்தி சொல்ல விஷால் சிரித்தான்.

“லைஃப் ஃபுல்லா நான் வேலைக்குப் போகலைன்னாலும் உனக்கு பிரச்னை இல்லையா?”

“நிஜமா இல்லை.”

“ஏன்?”

“நீ வீட்ல இருந்தா போதும் அப்பப்ப உன் மடியில நான் இருந்தா போதும். எனக்கு இதைவிட வேற எதுவும் பெருசில்ல.”

ஆர்த்தி சொல்ல விஷால் அவளை அணைத்துக் கொண்டான். அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“ஆர்த்தி”

“ம்”

“நான் காலையில கோயம்புத்தூருக்கு கிளம்பறேன். “

“சரிப்பா”

“பத்திரமா இரு வீட்டுக்குள்ளேயே இரு எங்கயும் வெளியில போகாத “

“ ம்”

***

தேவ் தன் முன் பவ்யமாய் அமர்ந்திருந்த டாக்டர் சந்திரசேகரை ஏறிட்டான்.

“என்ன டாக்டர்?”

“நீங்க சொன்னிங்கன்னு கிரிக்கெட்டர் முரளியை நான் பிரெயின் ஸ்டிமுலேட்டர் யூஸ் பண்ண வச்சு தற்கொலை பண்ண வச்சிட்டேன்.”

“தெரியுமே வெரி குட் சொல்லுங்க”

“நாம அந்த பிரெயின் ஸ்டிமுலேட்டர் யூஸ் பண்றது நிறுத்திடலாமா சார்?”

“ஏன் அப்படி சொல்றீங்க? இன்ஃபேக்ட் அந்த ஃபார்முலாவை உருவாக்குனதே நீங்கதானே?”

“உண்மைதான் சார். கோமாவில இருக்கிற பேஷண்ட்ஸ ஆர்டிபிசியல் பிரெயின் ஸ்டிமுலேட் பண்ணி அவங்க கோமாவைக் கலைக்க முடியுமான்னு ப்ராஜெக்ட் பண்ணேன். அப்பதான் அந்த ஃபார்முலா ரெடி பண்ணேன். ஆனா சாதாரண மனுஷங்க கிட்ட அதை டெஸ்ட் பண்றப்ப அவங்களோட மூளை தாறுமாறா கட்டளை போடும் . அவங்களால என்ன பண்ண முடியும்? தலைவலி ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். செத்துப்போனா போதும்னு சூயிசைட் பண்ணிடுவாங்க. ஆனா அந்த மாத்திரை போட்டிருக்குற நேரத்துல சூயிசைட் பண்ணி செத்துப்போன்னு யாராவது அவங்க கிட்ட சொல்லணும். அப்பத்தான் அந்த கட்டளை வந்து அவங்க மனசுல பதியும் . செத்துப் போயிடுவாங்க.”

“இதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே”

“ஆமா சார் ஆனா தெரியாத ஒரு விஷயம் கூட இருக்கு”

டாக்டர் சந்திரசேகர் சொல்ல தேவ் ஆச்சரியமாய் பார்த்தான்.

“என்ன அது?”

“நேத்து ஒரு டேப்லெட் ஒரு எலிக்கு கொடுத்து பார்த்தேன். அந்த எலி மை காட் ரொம்ப பயங்கரமா மாறிடுச்சு. ரொம்ப வயலண்டா பிஹேவ் பண்ணுச்சு.” சந்திரசேகர் பயத்தோடு சொன்ன தேவ் ஆர்வமானான்.

“அப்படின்னா என்ன சொல்ல வரீங்க டாக்டர்?”

“பிரெயின் ஸ்டிமுலேட்டர் டேப்லட் சாப்பிட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிறவங்க பத்தி பிரச்னை இல்லை ஆனால் ஒருவேளை அவங்க தற்கொலை பண்ணிக்காம இந்த எலி மாதிரி வயலண்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சா அது எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும்னு என்னால கணிக்க முடியல. சம் டைம்ஸ் அது மனித சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக்கூட மாறலாம். “

“வாவ் டாக்டர் இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் த ரியல் குட் நியூஸ் நீங்க எனக்கு கொடுத்திருக்கிறது” தேவ் சொல்ல அவனை பயத்துடன் பார்த்தார் டாக்டர்.

“இதுல இருக்குற ரிஸ்க் ஃபேக்டர்ஸ் உங்களுக்குத் தெரியல “

“ரிஸ்க் பத்தி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்குத் தேவை சாம்பிள். ஆயிரம் சாம்பிள் வேணும். ஆயிரம் பேருக்கு இந்த டேப்லட் கொடுத்து அதில எத்தனை பேர் சாகறாங்க எத்தனை பேர் வயலன்டா பிஹேவ் பண்றாங்க.. வேற ஏதாவது பிரச்சனை இருக்கா எல்லாமே எனக்குத் தெரியணும் எல்லாமே நான் ரிப்போர்ட்டா அனுப்பணும். அந்த ரிப்போர்ட்ட பேஸ் பண்ணித்தான் எனக்கு இந்த டேப்லட்க்கான ஆர்டர் உலகம் ஃபுல்லா இருந்து வரும் என்னோட இந்த வளர்ச்சியை யாராலயும் தடுக்க முடியாது. அதுக்கு நடுவுல எந்த எத்திக்ஸ்ம் வரத் தேவையில்லை “

தேவ் தீர்மானமாகச் சொல்ல டாக்டர் சந்திரசேகர் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. தன் வியர்வையைத் துடைத்துக் கொண்டார். பெருமூச்சு விட்டார்.

“சார் “ அழைத்தார்.

“என்ன சொல்லுங்க டாக்டர்”

“அந்த ஆக்டர்?”

“ஆமா அவனுக்கு நல்ல வாய்ஸ் இருக்கு அவனை எப்படியாவது கொலாப்ஸ் பண்ணிட்டோம்னா அவனோட ஃபேன்ஸ் நிறைய பேருக்கு அந்த டேப்லட் கொடுத்துப் பார்க்கலாம். நமக்கும் சாம்பிள்ஸ் தேடி அலையற டைம் மிச்சமாகும் “

தேவ் சொல்ல டாக்டர் பதறினார்.

“என்ன சார் சொல்றீங்க?”

“அந்த நடிகர் தன்னோட ரசிகர்களை வச்சு ஒரு மாநாடு போடறார். மதுரையில தமுக்கம் மைதானத்தில மாநாடு. அங்க நாம அந்த நடிகனுக்கும் அவனோட ரசிகர்களுக்கும் இந்த டேப்லட் கொடுக்கிறோம். என்ன ஆகப் போகுதுன்னு பார்க்கப் போறோம் “

“ப்ளீஸ் சார் வேண்டாம் இது ரொம்ப ஆபத்து”

“டாக்டர் இந்த ஃபார்முலா உங்களோடதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உங்க மேல மரியாதையோட பேசிட்டிருக்கேன். இல்லன்னா நான் சொல்ற ஒரு விஷயத்தை வேண்டாம்னு நீங்க சொன்னதுக்காக இந்நேரம் செத்திருப்பீங்க. புரியுதா ?”

தேவ் முகத்தில் தெரிந்த கோபம் டாக்டரை பயமுறுத்தியது.

“சாரி சார் நான் அப்படி மீன் பண்ணல”

“நீங்க எப்படி மீன் பண்றீங்கங்கிறது எனக்கு வேண்டாம் டாக்டர். நான் சொல்றது நடக்கணும். அவ்வளவுதான் வேற எதுவும் எனக்கு தெரிய வேண்டாம் புரியுதா ?”

“புரியுது சார்”

***

கேமராக்கள் தொடர்ந்து போட்டோ எடுக்க பிளாஷ் வெளிக்கத்தில் மின்னினான் மதன்.. நடிக்க வந்து ஐந்து வருடங்கள் மட்டுமே ஆகின்றன. நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை குறுகிய வருடங்களில் சம்பாதித்த அவன் மேல் அனைவருக்கும் பொறாமை உண்டு.

“மதன்”

“சொல்லுங்க சார்”

“இப்பதான் சினிமாவில் வந்திருக்கீங்க நல்லாவும் பண்றீங்க அதுக்குள்ள எதுக்கு மாநாடு அப்படி இப்படின்னு ?”

“இதெல்லாம் ஒரு டெக்னிக் சார் என்னோட ரசிகர்களை நான் தக்க வச்சுக்குவேன் ஒன்னு. இரண்டாவது எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்கன்னு எல்லாருக்கும் காட்டறதுக்கு. அதைப் பார்த்துட்டு புரொடியூசர்ஸ் என்னோட சேலரியை இன்னும் ஏத்துவாங்க. ஆனா இதெல்லாம் என்னோட ரசிகர்களுக்குத் தெரியாது. நான் என்னமோ அவங்க மேல இருக்கிற உண்மையான அன்புல அவங்களப் பார்க்கிறதுக்காக வர்றேன்னு நினைப்பாங்க.”

“சார் அப்போ உங்களுக்கு சென்டிமென்ட்ஸ் ஒன்னும் இல்லையா?”

“சென்டிமென்ட்ஸ் வச்சுட்டு என்ன சார் சாதிக்க முடியும்? லைஃப்ல மேல மேல போயிட்டே இருக்கணும் சார்”

மதன் கண்களில் வெறியுடன் சொன்னான்.

***

விஷால் தன் பைக்கில் V ட்ரக்ஸ் கம்பெனிக்குச் சென்றபோது காலை மணி ஒன்பது. தன் பைக்கை பார்க் செய்தவன் பார்வையால் மொத்த பில்டிங்கையும் அலசினான்.

உள்ளே சென்றவனை செக்யூரிட்டி தடுத்தான்.

“யார் சார்?”

“நான் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்.”

‘எந்த கம்பெனி ?”

“வர்ஷா மெடிக்கல்ஸ்”

“ ஐடி கார்ட் காட்டுங்க” செக்யூரிட்டி கேட்க புன்னகைத்தபடி தன் ஐடி கார்டை எடுத்துக் காட்டினான் விஷால்.

செக்யூரிட்டி பதறிப்போய் விஷ் செய்தான்.

“ஸாரி சார் நீங்க போங்க”

“தேங்க்யூ” சொன்னவன் இரண்டு எட்டு எடுத்து வைத்து பின் செக்யூரிட்டியிடம் திரும்பினான்.

“இன்டர்காம்ல உள்ளே போன் பண்ணக் கூடாது புரியுதா ?”

“சரிங்க சார்”

விஷால் உள்ளே நுழைந்தான். ரிஷப்ஷனிஸ்ட் அழகாகப் புன்னகைத்தபடி கேட்டாள்.

“ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ சார்?”

“உங்க எம்டி எப்ப வருவார்?”

“பத்து மணிக்கு வருவார் சார்”

அப்போது அங்கே விஷ்ணு வந்தான். விஷாலை கேள்வியாகப் பார்த்தபடி கண்களால் யார் என்று அவளிடம் கேட்டான். அவள் தெரியவில்லை என்பதாக சைகை காட்ட விஷ்ணு விஷாலிடம் கேட்டான்.

“என்ன வேணும்?”

“உங்க எம்டிய பார்க்கணும்”

“நீங்க யாரு?”

“அது நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன்”

“இங்கே எல்லாமே நான் தான் என்கிட்டயே சொல்லுங்க” விஷ்ணு சொல்ல விஷால் தன் ஐடி கார்ட் எடுத்துக்காட்டினான்.

விஷ்ணுவின் முகம் மாறியது.

“ சார்”

“இங்க எல்லாமே நீ தானே? வா உன்கிட்ட கொஞ்சம் விசாரிக்கணும் “

“சார்..வந்து…”

விஷால் எம் டி அறைக்குள் நுழைய விஷ்ணு பின்தொடர்ந்தான்.

சேரில் அமர்ந்த விஷால் விஷ்ணுவை ஏறிட்டான். கேட்டான்.

“என்ன ட்ரக்ஸ் இங்கே ப்ரொட்யூஸ் பண்றீங்க?”

“சார் பிளான்ட் இங்கே இல்ல”

“எங்கே இருக்கு?”

“இங்க இருந்து நாலு கிலோமீட்டர் உள்ள போகணும்”

“சரி ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு வா”

“புரியல சார்”

“என்னென்ன ட்ரக்ஸ் யார் யாருக்கு சப்ளை பண்ணி இருக்கீங்க இன்வாய்ஸ் டீட்டெயில்ஸ் பர்ச்சேஸ் டீட்டெயில்ஸ் சப்ளை ஃபைல் எல்லாமே கொண்டு வா போ “

விஷால் கேட்க விஷ்ணு பதறினான்.

“சார் அதெல்லாம் என்னோட கஸ்டடியில இல்ல”

“என்ன சொல்ற?”

“எம் டி சார் தான் எல்லாம் மெயின்டெயின் பண்றார்”

“போன் பண்ணி உன்னுடைய எம்டிய உடனே இங்க வரணும்னு சொல்லு”

“ சொல்றேன் சார்”

“இப்பவே கால் பண்ணு”

விஷால் சொல்ல விஷ்ணு அவஸ்தையாய் பார்த்தபடி தன் மொபைலை எடுத்தான்.

மறுமுனையில் வித்யாசாகர் போனை எடுத்தார்.

“என்ன விஷயம் எதுக்கு போன் பண்ணியிருக்கே?”

“சார் கொஞ்சம் உடனே இங்க வர முடியுமா?”

“என்ன விஷயம் விஷ்ணு ஏதாவது பிராப்ளமா?”

“ப்ளீஸ் சீக்கிரமா வாங்க”

பேசி முடித்த விஷ்ணு விஷாலைப் பார்க்க விஷால் கேட்டான்.

“சிசிடிவி விஷுவல்ஸ் பார்க்கலாமா?”

தொடரும்
 

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 6
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.