சைக்யாட்ரிஸ்ட் 5

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
சைக்யாட்ரிஸ்ட் 5

“என்ன டாக்டர் உண்மையை சொல்றியா இல்ல அடிபடறியா?” விஷால் கேட்க மனோகரன் பயத்தோடு பார்த்தான்.

“சார் “

“என்ன சொல்லு”

“சத்தியமா எனக்கு ஒண்ணும் தெரியாது சார். ஜானி சொன்னதத்தான் நான் செஞ்சேன் “ மனோகரன் சொல்ல ஜானி அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“டேய் நீங்க ரெண்டு பேரும் என்ன நடந்ததுங்கிற உண்மையை முழுக்க சொல்லலன்னா இங்க இருந்து வெளியே போக முடியாது “

சொன்ன விஷால் ஜானியைப் பார்க்க அவன் பதறினான்.

“சார் எனக்கு ஒன்னும் தெரியாது சார்”
சொல்லி வாய் மூடவில்லை விஷால் கையிலிருந்த லத்தி காற்றைக் கிழித்தபடி அவன் தோளை விளாச அவன் அலறினான். விஷால் நிறுத்தவில்லை.

“சார் சார் நான் சொல்லிடறேன் சார்” ஜானி வலி தாங்க முடியாமல் கத்தினான்.

“சொல்லுடா “

“சார் நான் அந்த கட்சியோட மாவட்ட செயலாளர் வேலாயுதத்துக்கிட்ட ரொம்ப வருஷமா இருக்கேன்”

“மேல சொல்லு”

“எந்த ஒரு விஷயம்னால என்ன வச்சுத்தான் செய்வார். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டார்.”

“ம்”

“கலைவாணியோட போட்டோ கொடுத்தார் “

“யாரு கலைவாணி ?”

“டிவி ஆர்ட்டிஸ்ட்”

“சொல்லு”

“இந்த போட்டோவ அவ கிட்ட காட்டு அவ ரொம்ப அதிர்ச்சியாவா. அவள உன்கூட வரணும்னு மிரட்டுன்னு சொன்னார் சார்.”

“எதுக்கு? “

“தெரியல சார்”

“நீ மிரட்டினியா?”

“சார் வந்து…”

“சொல்லுடா”

“ஆமா சார்”

“இதுல மனோகரன் எங்க வந்தான்?”

“சார் வேலாயுதம் சார் ஒருநாள் என் கூட மனோகரனைப் பார்த்திருக்கார். அவனக் கூட்டிட்டு வரச்சொன்னார். நானும் கூட்டிட்டுப்போனேன். அப்ப…”

“என்ன சொல்லு?”

“மனோகரன் சைக்யாட்ரிஸ்ட்டா நடிக்கணும்னு சொன்னார். பணம் தர்றதா சொன்னார். எதுக்குன்னு கேட்டோம். கலைவாணி மனோகரனை வந்து கன்சல்ட் பண்ணுவா அப்ப கலைவாணிக்கு ஒரு மாத்திரை கொடுக்கணும். அங்கிருந்து கிளம்பறப்ப இன்னொரு மாத்திரை கொடுக்கணும். அவள சூயிசைட் பண்ண வைக்கணும்னு சொன்னார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அது மட்டும் இல்ல கலைவாணி எப்படி மனோகரனை வந்து பார்ப்பா? வேற யாராவது டாக்டர் கிட்ட போனா என்ன பண்றதுன்னு கேட்டேன். அதுக்கு அவர் அதைப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம். கலைவாணி மனோகரனை கன்சல்ட் பண்ண வைக்க வேண்டியது அவருடைய பொறுப்புன்னு சொன்னார் சார்”

சொன்ன ஜானியை விஷால் நம்ப முடியாமல் பார்த்தான்.

“என்ன கதை விடறியா?”

“சார் நான் சொன்னதெல்லாம் சத்தியமான உண்மை சார்”

ஜானி தன் தலையில் கை வைத்து சொல்ல விஷால் முத்துகிருஷ்ணனை ஏறிட்டான்.

“அந்த வேலாயுதம் எங்க இருப்பார்?”

“சார் அவர் கட்சியோட மாவட்ட செயலாளர் இவன் சொல்றத நம்பி நாம போய் எதுவும் பண்ண முடியாது”

“ஏன்?”

“எவிடன்ஸ் இல்லாம ஏதாவது பண்ண போனா நாளைக்கு அவர் கோர்ட்டுக்குப் போனா நாம பதில் சொல்லணும் “

முத்துகிருஷ்ணன் சொல்ல விஷால் யோசித்தான்.

“நாம அவரை அரெஸ்ட் பண்ணப் போறதில்ல. என்கொயரி பண்ணலாமே தப்பில்லையே “ விஷால் சொல்ல முத்துகிருஷ்ணன் தலையசைத்தார்.

அதே நேரத்தில் விஷால் மனதில் வேறொரு எண்ணம் ஓடியது.

ஜானின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவன் பொய் சொல்வது போல் தெரியவில்லை. அதே நேரத்தில் அவன் சொன்னதை முழுமையாகவும் விஷாலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘என்ன நடக்குதுன்னு ரகசியமாக கண்காணிச்சுட்டு அதுக்கப்புறம் என்கொயரி பண்ணா சரியா வரும் ‘ யோசித்த விஷால் முத்துகிருஷ்ணனை அழைத்தான்.

“முத்துகிருஷ்ணன்”

“சார்”

“அந்த வேலாயுதத்தை இப்ப விசாரிக்க வேண்டாம்”

“சார் நீங்கதான் …”

“ஆமா நான் சொல்றப்ப விசாரிச்சா போதும் இப்ப வேண்டாம் “

“யெஸ் சார்” சொன்ன முத்துகிருஷ்ணன் “சார் இந்த ரெண்டு பேரை என்ன பண்றது?”

“கலைவாணி தற்கொலை கேஸ்ல இவங்களே உண்மைய சொன்னாக் கூட இவங்க மேல கேஸ் நிக்காது. இவங்க சொல்றது எதுவுமே நம்ப முடியல. இவங்கள விட்டுடுங்க”

“சார்” முத்துகிருஷ்ணன் அதிர்ந்து போய் பார்க்க விஷால் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

“யெஸ் சார் “ முத்துகிருஷ்ணன் சல்யூட் வைக்க விஷால் தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.

“எதுக்கும் அவங்க ரெண்டு பேரையும் கண்காணிக்கிறதுக்கு அரேஞ்ச் பண்ணுங்க “

“சரி சார்”

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த விஷால் தன் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொண்டு பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே வரும்போது மணி மாலை ஆறு.

குன்னூர் செல்லும் பஸ் வர ஏற இருந்தவன் பார்வை எதிரே இருந்த புத்தகக் கடையில் தொங்கவிடப்பட்ட மாலை மலரின் போஸ்டர் பட்டது.

கோவையில் பரபரப்பு. கட்சியின் மாவட்டச் செயலாளர் வெட்டிப் படுகொலை.

விஷாலுக்கு ஏதோ ஒன்று தோன்ற பரபரப்புடன் மாலை மலரை வாங்கிப் பார்த்தான்.

கட்சியின் மாவட்ட செயலாளர் வேலாயுதம். இன்று கட்சி அலுவலகத்திற்கு வந்த அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. உடன் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் வந்தவர்கள் தங்கள் வந்த வாகனத்தில் ஏறிப் பறந்தனர்.

விஷால் முத்துகிருஷ்ணனை அழைத்தான்.

“சார்”

“விஷால் பேசறேன். விஷயம் தெரியுமா?”

“ஆமா சார் இப்பத்தான் தெரியும் ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு.”

“முத்துகிருஷ்ணன் ஏதோ வேற பெரிய ஆபத்து வரும் போலத் தோணுது.”

“என்ன சார் சொல்றீங்க?”

“அந்த ஜானி உண்மையத்தான் சொல்லியிருக்கான்.”

“நீங்க சொன்ன மாதிரி வேலாயுதத்தை நாம போய் விசாரிச்சிருக்கணும் சார். ஒருவேளை இந்த கொலை கூட நடக்காமப் போயிருக்கும் “

“பரவால்ல விடுங்க இனிமே அதப் பத்திப் பேசி என்ன ஆகப்போகுது? நீங்க ஒன்னு பண்ணுங்க”

“சொல்லுங்க சார்”

“ஸ்பாட்ல போய் தரோவா இன்ஸ்பெக்ட் பண்ணுங்க. அந்த கேஸ் யார் டீல் பண்றாங்கன்னு பாருங்க. ஏதாவது ஃபைன்டிங்ஸ் இருந்தா எனக்கு கால் பண்ணுங்க “

“யெஸ் சார்”

பேசி முடித்த விஷால் குன்னூர் செல்லும் பஸ்ஸில் ஏறினான்.

மாலைமலரை மீண்டும் விரித்தான்.

இளைஞர் தற்கொலை காதல் தோல்வியா? போலீஸ் விசாரிக்கிறது

அடுத்த பக்கத்தில் வாலிபர் தற்கொலை காரணம் என்ன?

கடைசி பக்கத்தில் பொறியியல் மாணவி தற்கொலை மன அழுத்தம் காரணம்.

என்ன இன்னைக்கு எல்லாமே தற்கொலை நியூஸா இருக்கு? குழம்பிய விஷால் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது.

***

தேவ் ஆறடிக்கும் மேல் உயரமாக இருந்தான். கண்களில் தீர்க்கமான க்ரூரம் இருந்தது.

தனக்கு முன் நின்ற தர்மாவை பெருமையுடன் பார்த்தான்.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

தேவ சொல்ல தர்மா தலையை குனிந்து வணங்கினான்.

“தர்மா நான் எப்பவுமே பர்பெக்ட்டா இருப்பேன். ஒரு பிளான் போடறது முக்கியமில்லை அந்த பிளான்ல என்னென்ன பிரச்னை எப்ப வரும்னு தெரிஞ்சிருக்கணும் அப்படி வர்ற பிரச்னையை அப்பப்ப சால்வ் பண்ணி போயிட்டே இருக்கணும் யாரு மேல எப்ப சந்தேகம் வந்தாலும் அவங்க உயிரோட இருக்கக் கூடாது ஒன்னு அவங்களே தற்கொலை பண்ணிக்கணும் இல்லன்னா அவங்கள நாம கொலை பண்ணிடனும்.”

“கண்டிப்பா”

“நீயும் உன்னோட ஆளுங்களும் எப்பவுமே விழிப்பா இருக்கணும். “

“ம்”

“வேலாயுதத்தைப் போடறப்ப பிரச்னை ஒன்னும் இல்லையே?”

“இல்ல. யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வராது”

“தட்ஸ் குட்”

தர்மாவும் அவன் ஆட்களும் சென்ற பின் தேவ் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அவன் போன் அடித்தது.

எடுத்துப் பார்த்தான்.

வித்யாசாகர்.

“என்ன வித்யாசாகர் சொல்லுங்க”

“சார் விஷ்ணு சண்டே அன்னிக்கு ரவுண்ட்ஸ் போறப்ப நம்ம பிளான்ட் ஒருத்தன் போட்டோ எடுத்ததப் பார்த்துட்டான்.”

“வித்யாசாகர் நீங்க ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும்.”

“சொல்லுங்க சார்”

“ V ட்ரக்ஸ் கம்பெனி என்னோடதுன்னு யாருக்குமே தெரியாது. தெரியவும் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் கரெக்டா ?”

“ஆமா சார்”

“நீங்க ஓனர் இல்ல என்னோட மேனேஜர்னு நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். “

“ யெஸ் சார்”

“இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நீங்க எனக்கு போன் பண்ணிட்டு என்கிட்ட சஜசன் கேட்டா நான்தான் ஓனர்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். இல்லையா? “

“ஸாரி சார்”

“யாரோ மாட்டிருக்கான்னு சொன்னீங்களே அவனை பாய்லர்ல போட்டுருங்க. அப்படி ஒருத்தன் இருந்தான்னு இந்த உலகத்துக்கு தெரியாது “

“ஓகே சார்”

“அப்புறம் இன்னொரு விஷயம்”

“சொல்லுங்க சார்”

“என்னிக்காவது நம்ம கம்பெனி மேல போலீஸ் ஆக்ஷன் எடுத்தா..”

“சொல்லுங்க சார் என்ன பண்ணனும்?”

“நாம தயாரிக்கிற டேப்லட்டை நீங்க சாப்பிட்டுட்டு செத்துப் போயிடணும் “

தேவ் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல மறுமுனையில் வித்யாசாகர் அதிர்ந்தார்.

“என்ன வித்யாசாகர் பதிலையே காணோம்? “

“யெஸ் சார்”

“சொன்னது புரிஞ்சுது தானே?”

“யெஸ் சார்”

தேவ் பேசிவிட்டு யோசித்தான். தன் மொபைலை எடுத்து அழைத்தான்.

நீரஜ் எடுத்தான்.

“சொல்லுண்ணா”

“இப்ப எங்க இருக்கே நீரஜ் ?”

“அந்த பார்ட்டி லீடர் கூடத்தான் “

“அவ கிட்ட பேசு எப்பவுமே அவன் பண்றத பாராட்டி பேசற மாதிரி பேசு. அவன் எல்லாமே சொல்லிடுவான்.”

“கிட்டத்தட்ட சொல்லிட்டாண்ணா”

“என்ன சொன்னான்?”

“நம்ம டேப்லட்டை வச்சு நிறைய பேரை தற்கொலை பண்ணவச்சு இங்க இருக்குற கவர்மெண்ட்டை கொலாப்ஸ் பண்ணி எலக்சன்ல அவனுடைய கட்சியை ஜெயிக்க வைக்கணும்னு என்னமோ திட்டம்னு சொன்னான்”

நீரஜ் சொல்ல தேவ் சிரித்தான்.

“அவன் அப்படித்தான் மூளை கெட்ட தனமா ஏதாவது பேசுவான். அதக் கண்டுக்காத. நான் தான் அவன்கிட்ட அப்படி சொல்லி வச்சிருக்கேன்.”

“அண்ணா”

“நம்ம டேப்லெட்டுக்கு ஃபாரின்ல நல்ல வேல்யூ இருக்கு. ஆனா சக்சஸ் ரேட் எப்படின்னு கொஞ்சம் தயங்கறாங்க. பத்து பேருக்கு இந்த டேப்லெட் கொடுத்து அதுல ஒன்பது பேர் செத்துப் போய்ட்டாங்கன்னா நம்ம டேப்லெட்டுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு.”

“அது முடியுமாண்ணா?”

“நான் ஒரு எக்ஸாம்பிள் சொல்றேன் கேளு. கார்ல போயிட்டு இருக்கே. டிராபிக் சிக்னல் ஃபாலோ பண்றே. இந்த டேப்லெட் எடுத்து வாயில போடு. எல்லாத்தையும் மீறுவே. ஏன் லெப்ட்ல போகணும் ரைட்ல போனா என்ன தப்புன்னு ரைட்ல போவே. எந்த ரூல்ஸும் நீ பாலோ பண்ண மாட்டே. வேற யாரைப் பத்தியும் உனக்கு கவலை இருக்காது இப்போ அங்க இருக்கிற எல்லாரும் இந்த டேப்லட் சாப்பிடறாங்கன்னு வை. எத்தனை பேர் சாவாங்க ? யோசிச்சுப் பாரு”

தேவ் சொல்ல நீரஜ் பிரமித்தான்.

“அண்ணா சான்சே இல்ல வேற லெவல் நீ”

“எப்பவுமே நாம நம்மள உயர்வா பேசி கோட்டை விட்டுடக் கூடாது “

“என்னண்ணா சொல்ற?”

“விஷால்னு ஒருத்தன் நம்ம கேஸ்ல இன்வால்வ் ஆயிட்டிருக்கான்”

“தூக்கிட வேண்டியதுதானே?”

“அங்கதான் தப்பு பண்றே அவனுக்கு நம்ம மேல எந்த விதமான டவுட்டும் வராது. அவ மேல நாம கை வைக்கக் கூடாது. ஆனா சிசிடிவி கேமராவில் இன்னிக்கு ஒரு விஷயம் பார்த்தேன். அவனோட பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா போல. அவளும் அவ அப்பாவும் ஒரு கைனகாலஜிஸ்ட் போய் பார்த்திருக்காங்க.”

“அண்ணா உனக்கு எப்படிண்ணா தெரியும்”

“நமக்கு ஒரு எதிரி இருக்கான்னு தெரிஞ்சா அவனோட மூவ் என்னன்னு நமக்குத் தெரிஞ்சிருக்கணும் அப்பத்தான் அதுக்கு தகுந்தபடி நாம எது வேணாலும் பண்ண முடியும். அவனோட பொண்டாட்டியைக் கண்காணிக்க ஆள் அனுப்பி இருக்கேன்.”

“சூப்பர்ணா”

“அவனுக்கு குழந்தை பிறக்கப்போகுது போல. சென்டிமென்ட்ங்கிறது எல்லாருக்கும் ஒன்னுதான். திரும்ப அவன் நம்ம லைன்ல குறுக்க வந்தா அவனோட பொண்டாட்டிய தர்மாகிட்ட சொல்லி தூக்கிடறேன். போலீஸ்காரனா இருந்தாலும் கர்ப்பமா இருக்கிற பொண்டாட்டி செத்துப்போனா மனசு உடைஞ்சு போய்டுவான் .நம்ம வழிக்கு வரமாட்டான் என்ன சொல்ற ?”

தொடரும்.
 

Author: gavudham
Article Title: சைக்யாட்ரிஸ்ட் 5
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.