சந்தியாவந்தனம் 4

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
ராகவிற்கு கோபம் தலைக்கேறியது.



"ஹலோ மிஸ்டர்"



"மோகன் சார்"



"மோகன் நீங்க இப்ப கிளம்பிப் போங்க"



"ஏன் சார் உங்க பொண்டாட்டி வீட்ல இல்லையா?" மோகன் கேட்க ராகவ் மனதிற்குள் அவனை கெட்ட வார்த்தையால் திட்டினான்.



"உனக்கு சொன்னா புரியாதா?"



"ஏன் சார் இவ்வளவு ஆத்திரப்படறீங்க? நீங்க டைவர்ஸ் பண்ணலையா முடிவை மாத்திட்டீங்களா? ப்ளீஸ் சார். முடிவ மாத்திடாதீங்க நம்பி வந்துட்டேன் ஏமாத்தாதீங்க "



சொன்னவனை ஒன்றும் சொல்லாமல் வெறிக்கப் பார்த்தான் ராகவ்.



அப்போது சந்தியா எதார்த்தமாக வெளியே வர மோகன் வாசலில் இருந்து கத்தினான்.



"ஹலோ மேடம் நல்லா இருக்கீங்களா?"



சந்தியா அவனை குழப்பமாய் பார்த்தாள்.



"யாரு?" கேட்டபடி ராகவைப் பார்க்க ராகவ் அவளை உன்னிப்பாய் பார்த்தான்.



"நீ கொடுத்த அட்வர்டைஸ்மென்ட் பார்த்துட்டு வந்திருக்கான்"



"என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியல."



"ரொம்ப நடிக்க வேண்டாம் நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு" ராகவா சொல்ல சந்தியா ஒன்றும் புரியாமல் மோகனிடம் திரும்பினாள்.



"யார் நீங்க? என்ன பிரச்னை?"



"மேடம் தமிழ் மேட்ரிமோனி டாட் காம் ல உங்க மறுமணம் ப்ரொஃபைல் பார்த்தேன். அதான் நேர்ல வந்து விசாரிச்சிட்டு போலாம்னு வந்திருக்கேன்." மோகன் சொன்ன சந்தியா அவனை கோபமாய் பார்த்தாள்.



"என்ன சொல்றீங்க? "



"இத பாருங்க இந்த அட்வர்டைஸ்மென்ட் நீங்கதானே கொடுத்தீங்க?" கேட்டபடி மோகன் தன் மொபைலில் இருந்த ஸ்கிரீன்ஷாட் எடுத்து சந்தியாவிடம் காண்பித்தான்.



'விரைவில் விவாகரத்து பெற இருக்கும் அழகான குணமான பெண்ணுக்கு மணமகன் தேவை. தொடர்புக்கு சந்தியா. மொபைல் அவள் மொபைல் எண் கொடுக்கப்பட்டிருந்தது.



அதைப் பார்த்த சந்தியா அதிர்ந்தாள்.



"சாரி இந்த விளம்பரம் நான் கொடுக்கல ப்ளீஸ் கிளம்புங்க" சந்தியா சொல்ல மோகன் பரிதாபமாய் பார்த்தான். ராகவ் நிம்மதி பெருமூச்சு விட்டான்.



"மேடம்" மோகன் அழைத்தான்.



"என்ன?"



"எப்படியும் சார் உங்களை டைவர்ஸ் பண்ணத்தானே போறார்? உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை நீங்க ஏன் அமைச்சிக்கக்கூடாது? நான் உங்களுக்கு கண்டிப்பா பொருத்தமானவனா இருப்பேன் ப்ளீஸ் "



மோகன் சொல்ல ராகவ் கத்தினான்.



"டேய்"



"சார் டீசன்ட்டா பேசுங்க. உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருதுன்னு தெரியல. எப்படி இருந்தாலும் நீங்க அவங்களை விட்டு விலகத்தானேப் போறீங்க? அப்புறம் என்ன பிரச்சனை உங்களுக்கு? எங்களுக்கு உங்க ஆசீர்வாதம் நிச்சயமா வேணும் சார்" மோகன் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் கூலாக பதில் சொல்ல ராகவிற்கு ரத்த அழுத்தம் எகிறியது.



"ராஸ்கல் மரியாதையா போயிடு இல்லன்னா நடக்கறதே வேற"



"ஐயோ சார் உங்களுக்கும் இவங்களுக்கும் இப்ப எந்த விதமான சம்பந்தமும் இல்லை. ஏதாவது சொல்லணும்னா அவங்க சொல்லட்டும். நான் போறேன். மேடம். ப்ளீஸ் மேடம். நான் நல்லா சமைப்பேன் உங்களை நல்லா பார்த்துக்குவேன். எனக்கு சுத்தமா கோபமே வராது. ரொம்ப கூலா இருப்பேன். ப்ளீஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க."



சொன்ன மோகனை அமைதியாக ஏறிட்டாள் சந்தியா.



"ப்ளீஸ் நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன். என் நிலைமை தெரியாம பேசாதீங்க போங்க"



"புரியுது மேடம் இப்ப நீங்க ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்கீங்க. நான் உங்களுக்காக ட்ரை பண்ணிட்டே இருப்பேன்.எனக்கு பெஸ்ட் விஷ்சஸ் சொல்லுங்க."



சொன்னவனை ஏன் என்று புரியாமல் சந்தியா பார்க்க அவன் புன்னகைத்தபடி சொன்னான்.



"உங்கள கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எனக்கு பெஸ்ட் விஷ்சஸ் சொல்லுங்க "



ராகவ் அவன் மீது பாய முற்பட சந்தியா அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.



"வேண்டாம் ராகவ் சீன் கிரியேட் ஆயிடும். இப்பயே அக்கம்பக்கத்தில ஒரு மாதிரியா பார்க்கறாங்க"



ராகவ் மோகனை எரிக்கும் விழிகளால் பார்த்தபடி சொன்னான். "போடா முதல்ல இங்கிருந்து"



***



அரசு மதுபான விடுதி.



அங்கிருந்த தொலைக்காட்சியில் போதையற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்று முதல்வர் சூளுரைக்க ராகவ் தன் முன் இருந்த பீர்பாட்டிலை அப்படியே வாயில் சரித்துக்கொண்டான்.



'ராஸ்கல் யார் அவன்? எவ்வளவு தைரியம்?'



அவன் கோபம் அடைந்த அதே நேரத்தில் அவன் மனசாட்சி அவனை கேலி செய்தது.



'உனக்கு எதற்காக இவ்வளவு கோபம் வர வேண்டும்? எப்படி இருந்தாலும் நீ அவளை விவாகரத்து தானே செய்யப் போகிறாய்?'



'அதற்காக திடீரென்று எவனோ வந்து ஏதாவது பேசுவதா?'



'அது இனிமேல் சந்தியாவின் பிரச்னை நீ தலையிடுவதற்கு ஒன்றுமில்லை'



'அப்படி என்னால் சும்மா இருக்க முடியாது'



'நீ மட்டும் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டு அவளுடன் சந்தோஷமாக இருக்கும் பொழுது விவாகரத்துக்கு பின் சந்தியா யாரையும் திருமணம் செய்யாமல் அவள் வாழ்க்கையை அவள் அழித்துக் கொள்ள வேண்டுமா என்ன?'



'நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை'



'ஆண்கள் புத்தி அப்படித்தான். மனைவி என்பவள் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் உனக்கு விருப்பம் இருக்கும் பொழுது வந்து உன்னுடன் படுக்க வேண்டும். உனக்கு வேறு யாராவது விருப்பமாக இருந்தால் அவளை அழைத்துக் கொண்டு வந்து அவள் கண்முன் குடும்பம் நடத்துவாய். அதையும் பார்த்துக்கொண்டு அவள் உனக்கு பணிவிடைகளைத் தொடர வேண்டும். அப்படித்தானே?'



'சரி நான் அப்படித்தான் என்று வைத்துக் கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? உலகம் அப்படித்தானே இயங்குகிறது?'



'பெரும்பான்மையை காரணம் காட்டி தவறை நியாயப்படுத்துவதுதான் மிகப்பெரிய தவறு.



அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?



அவளை விட்டு விலக வேண்டும் என்று நீ நினைத்தால் அவளுக்கும் உனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் நீ ஏற்க வேண்டும் அவள் வாழ்க்கையில் உன் தலையீடு எங்கும் இருக்கக் கூடாது.



அதற்காக அவள் வேறு யாரையாவது மணந்து கொண்டால் என் குழந்தைகள் கதி?



குழந்தைகள் உன் மனைவிக்கு மட்டும் சொந்தமானவையா என்ன?



என்னால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது.



ஏன்?



தெரியாது.



தெரிந்து கொள்ள நீ முயற்சிக்கவில்லை. கடமையை வேறு யாராவது செய்யும்பொழுது அதை பகிர்ந்து கொள்ளாமல் அவர் தலையில் சுமத்தி விட்டு உன் கைகளை கழுவிக்கொண்டாய். இப்பொழுது நீ தான் செய்ய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது உனக்கு முடியாமல் போகிறது. ஏனென்றால் நீ கற்றுக் கொள்ளவில்லை.



இதில் என் தவறு ஒன்றும் இல்லை.



ஏன்?



உலகம் இப்படித்தான் இயங்குகிறது.



இனிமேல் உலகம் இப்படி இயங்காது. அன்பு செலுத்துதல் வேறு. அன்பின் பெயரால் அடிமைப்படுத்துவது வேறு அன்பே செலுத்தாமல் அவமானப்படுத்தி அடிமைப்படுத்துவதும் வேறு.



நீ உன் மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கொடுக்காமல் எப்பொழுதும் மட்டம் தட்டுவதும் அவள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதுமாக அவளை ஓர் அடிமையாக நடத்தினாய். அதையும் தாங்கிக் கொண்டு அவள் உன் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் செய்து கொண்டுதான் இருந்தாள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல உனக்கும் தேவையானவற்றை செய்து கொண்டிருந்தாள். ஓட ஓட விரட்டினால் அவள் எதுவரை தான் ஓடுவாள்? பாவம் இல்லையா?



குடும்ப வாழ்க்கையை பரிதாபத்தில் நடத்த முடியுமா?



முடியாதுதான். ஆனால் அவள் ஒரு சக மனுஷி முறையில் குறைந்தபட்ச மதிப்பைத் தந்திருக்கலாம் அல்லவா?



ஆம், தந்திருக்கலாம்.



நீ தப்பானவன். தவறு செய்வது அதை நியாயப்படுத்துவது உன் இயல்பாகப் போய்விட்டது. நீ திருமணம் செய்து கொள்ள போகும் புனிதாவிடம் உன் இயல்பை வெளிக்காட்டாமல் நடித்துக் கொண்டிருக்கிறாய். அவள் நீ சொல்வதெல்லாம் உண்மை நீ ஒரு அப்பாவி என்று நம்பி கொண்டிருக்கிறாள். என்று அவள் நம்பிக்கை பொய் என்று தெரிகிறதோ அப்பொழுது உன் மீதான பாசம் அவளுக்கு விட்டுப் போய்விடும். பொய் சொல்லி ஏமாற்றி விட்டான் என்று அவளுக்குத் தெரிந்தால் உன் மீதான மரியாதை போய்விடும். மரியாதை போய்விட்டால் குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிலவத்தான் செய்யும். அப்பொழுது என்ன செய்வாய்? நிம்மதி இல்லை என்று வேறு யாரையாவது முயற்சி செய்வாயா?



ராகவ் கோபமானான்.



இனிமே தண்ணி அடிக்கக்கூடாது. தண்ணி அடிச்சாவே கண்டபடி யோசிக்கத் தோணுது.



"சர்வர்" உரக்க அழைத்தான்.



அவர் அருகில் வந்து "சொல்லுங்க பாஸ்" என்றார்.



"முட்டை போண்டா ஒரு பிளேட்"



ராகவ் சொல்ல "ரெண்டு பிளேட்டா சொல்லுங்க பாஸ்" என்று இன்னொரு குரல் கேட்டது .



ராகவ் திரும்பிப் பார்க்க மோகன் புன்னகைத்தான். ராகவ் கோபமாய் பார்க்க அதை சட்டை செய்யாமல் எதிரில் அமர்ந்தான்.



"சார் முடிச்சிட்டீங்களா?"



"உனக்கு என்ன வேணும்?"



"ஒரு ஹாப் வி எஸ் ஓ பி சார்"



"நான் அதக் கேக்கல. எதுக்கு திரும்ப என்கிட்ட வந்து உக்காந்திருக்கே?"



"சார் முடியல சார் இன்னைக்கு பௌர்ணமி சார்"



"அதுக்கு?"



"மோகன்னு பேர் இருக்கிறதாலயோ என்னவோ நிலாவப் பார்த்தா காதல் பாட்டா ஞாபகம் வருது சார் "



"டேய்"



"அவசரப்பட்டு திட்டாதீங்க சார் நான் சொல்றத கொஞ்சம் முழுசா கேளுங்க சார்"



அவனைப் பார்த்த ராகவ் ஒன்றும் சொல்லாமல் முறைத்தான்.



"என்னடா சொல்லப் போறே? சொல்லு"



"சார் உங்க பொண்டாட்டிய நான் லவ் பண்றேன் சார் எங்களை நீங்கதான் சேர்த்து வைக்கணும் ப்ளீஸ் " மோகன் சீரியஸாக சொல்ல ராகவ் நொந்து போய் பார்த்தான்.



"ஏன்டா? பார்ல நிம்மதியா தண்ணி அடிக்கக்கூட விட மாட்டேங்கிற? யார்றா நீ? எதுக்குடா இப்படி டார்ச்சர் பண்ற?"



"ப்ளீஸ் சார் நீங்களும் ஒரு பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணப் போறீங்க. அதுவும் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிட்டு. காதலோட மகத்துவத்தைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லணும்னு ஒண்ணும் இல்ல"



"இன்னும் கொஞ்ச நேரம் என் முன்னாடி உட்கார்ந்து இப்படி உளறிட்டு இருந்தா உன்ன கொன்னு போட்டாலும் போட்ருவேன். மரியாதையா ஓடிப் போயிடு"



"சார் நீங்க அடிச்சாலும் சரி கொன்னாலும் சரி. என்னோட பீலிங்க்ஸ நான் உங்ககிட்டத்தானே சார் சொல்ல முடியும்? நீங்கதானே சார் அவங்களுக்கு இப்ப கார்டியன்?"



"ஷ்ஷ் என்னால முடியல. அவதான் உன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொன்னாளே? இன்னும் எதுக்கு பின்னாடி வந்துட்டு இருக்கே?"



"என்ன சார் பேசறீங்க? உங்க கூட பத்து வருஷம் வாழ்ந்த பொண்ணு. உடனே என்னோட லவ்வ ஏத்துக்கிட்டா அப்புறம் உங்க கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன சார் அர்த்தம்?"



பிராந்தியை எடுத்து குடித்தபடி மோகன் கேட்க ராகவ் அவனையே இமைக்காமல் பார்த்தான்.



"எனக்கு நம்பிக்கை இருக்கு சார் என்னோட லவ் அவங்க ஏத்துக்குவாங்க எனக்கு ஒன்னே ஒண்ணு மட்டும் சொல்றீங்களா?"



"என்னடா சொல்லு?"



"உங்க பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பண்றதுன்னு கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க முடியுமா?"
 

Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.