சந்தியாவந்தனம் 3

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
"ஜி கே சொன்னா எல்லாமே ஓகேதான் சார். நீங்க கவலைப்படாம இருங்க நான் பார்த்துக்கறேன்" லாயர் கோகுல் கிருஷ்ணா மொபைலில் பேச அஸிஸ்டன்ட் பார்வதி அவர் முன் வந்து நின்றாள்.



பேசிவிட்டு மொபைலை கீழே வைத்தவர் கண்களால் என்னவென்று கேட்டார்.



"சார் உங்களப் பார்க்கறதுக்கு ஒரு கப்புள் வந்து வெயிட் பண்றாங்க"



"வரச்சொல்லு"



பார்வதி வெளியே போன அடுத்த நிமிடத்தில் ராகவ் சந்தியா இருவரும் உள்ளே நுழைந்தனர்.



"வணக்கம் சார்"



"வணக்கம் உட்காருங்க"



"என்னோட பேர் ராகவ். இது என்னோட மனைவி சந்தியா"



ராகவ் சொல்ல மேல சொல்லுங்க என்பது போல் பார்த்தார்.



"கொஞ்ச நாளா எங்களுக்குள்ள பிரச்னை. எங்களுக்குள்ள ஒத்துப்போகல அதனால நாங்க டைவர்ஸ் பண்ணலாம்னு "



"என்னைத் தேடி வந்துட்டீங்களா?"



"ஆமா சார்"



"ராகவ் ஊர்ல உலகத்துல ஆயிரம் ஜோடி இருந்தா அதுல தொள்ளாயிரத்து தொண்ணூத்தொன்பது ஜோடிக்கு ஒத்துப்போகாது. மிச்சம் ஒரு ஜோடி என்ன பண்ணுவாங்க தெரியுமா?"



"தெரியல சார்"



"அவங்க ஆதர்ச தம்பதின்னு அவங்கள அவங்களே ஏமாத்திக்குவாங்க "



சொன்ன ஜிகே இதுவரையும் உன்னிப்பாய் பார்த்தார்.



"நீ சொல்லும்மா. என்ன பிரச்னை?"



"அவர் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறாரு அதான் அவர் ஆசைப்பட்டபடி வாழ்ந்துட்டு போகட்டும்னு"



சந்தியா சொல்ல கோகுல் கிருஷ்ணா அதிரும்படி சிரித்தார்.



"அதானா விஷயம்? நீ உடனே விட்டுக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? தியாகமா?"



"இல்லை சார்"



"பின்னே?"



"என்னோட செல்ஃ ரெஸ்பெக்ட்ட காப்பாத்திக்கலாம்னு.." சந்தியா சொல்ல அதை எதிர்பார்க்காத கோகுல் கிருஷ்ணாவின் முகம் மலர்ந்தது.



"ராகவ்"



"சார்"



"நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா டைவர்ஸ் பண்ணித்தான் ஆகணுமா?"



"உண்மைய சொன்னா எனக்கு இதுல சம்மதம் இல்ல சார். இவளும் என் கூட இருக்கலாம். அதை நான் சொன்னேன். ஆனா இவ ஒத்துக்க மாட்டேங்கிறா" ராகவ் சொல்ல அவனை இகழ்ச்சியாய் பார்த்தவர் அவனிடம் கேட்டார்.



"இதே மாதிரி அந்த பொண்ணு இன்னொருத்தன கூட்டிட்டு வந்து ஒரே வீட்ல இருந்தா நீ என்னப்பா பண்ணுவ? நீயும் இருக்கலாம் அப்பப்ப என்கிட்ட வந்துட்டுப் போலாம்னு சொன்னா சரின்னு ஏத்துக்குவியா?"



ராகவ் கோகுல கிருஷ்ணாவை வெறுப்பாய் பார்த்தான்.



"சார் டைவர்ஸ்க்காக உங்ககிட்ட வந்திருக்கோம். உங்களுக்கு வாங்கித்தர விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க. நாங்க வேற வக்கீல் பார்த்துக்கறோம்"



"அவசரப்படாதப்பா அதுக்குன்னு ஒரு ஃபார்மாலிட்டி இருக்கு. நீங்க கேட்ட உடனே கிடைக்கிறதுக்கு அது என்ன கடையிலயா கிடைக்குது?"



கேட்டவர் சந்தியாவைப் பார்த்தார்.



"நீ உறுதியா இருக்கியாமா?"



"ஆமா சார்"



"உங்களுக்கு குழந்தைங்க இருக்கா?"



"ஆமா சார் ரெண்டு பேர்"



"அவங்க யார் கூட இருப்பாங்க?"



"அவர் கூடயே இருக்கட்டும் சார். எனக்கு பிரச்னை இல்ல."



"என்னம்மா சொல்ற?"



"யோசிச்சுத்தான் சார் சொல்றேன்"



இருவரையும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் பார்த்த கோகுல் கிருஷ்ணா யோசித்தார்.



"சரி நான் கேட்கிற டாக்குமெண்ட்ஸ் கொண்டு வாங்க. நாம ஃபைல் பண்ணலாம்." சொன்னவர் அவர்கள் இருவரும் கொண்டு வர வேண்டியவற்றைப் பட்டியலிட்டார்.



"ராகவ் நான் ஒண்ணு சொல்லலாமா?"



"சொல்லுங்க சார்"



"ஒண்ணை விட இன்னொண்ணு பெட்டர்னு தேடிட்டே இருந்தா லைஃப்ல நிம்மதி இருக்காது"



"சார் எனக்கு தெரியும் சார் "



"செக்ஸ் நைட்ல வெச்சுக்கறதுனாலதான் மக்கள்தொகைல நாம முன்னால இருக்கோம். யார் வேணாலும் யாரை வேணாலும் நினைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்கிறதுக்கு நைட்டுதான் முடியும். பகல் பொழுதுலதான் எல்லாரும் வெச்சிக்கணும்னு சொல்லிப் பாரு மக்கள் தொகை சட்டுன்னு குறைஞ்சிடும். இதை நான் ஏன் சொல்றேன்னா பிரச்னைகள் இல்லாத இடமில்லை. இன்னிக்கு பிரச்னை இல்லன்னா கண்டிப்பா நாளைக்கு பிரச்னை இருக்கும். எந்த பிரச்னை வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கணும். அதுதான் லவ். சந்தோசமா இருக்கும்போது சேர்ந்திருக்கிறது காதல் இல்ல. சங்கடமான நேரத்திலயும் ஒரு புரிதல் இருக்குல்ல? அதுதான் லவ். அது இருந்தா எந்த பிரச்னையும் பெரிய பிரச்னையா தெரியாது. அது இல்லன்னா ஒண்ணும் இல்லாத பிரச்னை கூட பெரிய பிரச்சனையா மாறி நாம அதுல தொலைஞ்சு போய்டுவோம். லாயரா இல்லாம ஏதோ வயசுல பெரியவன்னு சொல்லத் தோணுச்சு. ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்க. அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். யாருமே இல்லாதப்ப நீ மட்டும் தனியா ரூம்ல யோசிச்சுப் பாரு ஜிகே சொல்றது ஓகேன்னு தோணும். சீக்கிரமா கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணலாம். "

"சரிங்க சார்"



"கோர்ட்டுக்குன்னு சில நடைமுறைகள் இருக்கு. ஒரு மூணு மாசம் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் இருக்கணும் அந்த காலகட்டத்தில் உங்களுக்குள்ள ஏதாவது புரிதல் இருந்தா…"



கோகுல் கிருஷ்ணா சொல்வதற்குள் ராகவ் இடைமறித்தான் "அதுக்கு வாய்ப்பே இல்லை சார்"



"அவசரப்படாதப்பா வாழ்க்கையில எதுவுமே நிலையானது இல்ல. நீ நினைச்சுப் பார்த்திருக்கியா? இந்தப் பொண்ண நீ கூட்டிட்டு டைவர்ஸ்க்கு வந்து உட்காருவேன்னு?"



"அது…வந்து…"



"இல்லைதானே? இப்ப நடக்குதா இல்லையா?"



அவர் கேட்க அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தான்.



"அதுக்குத்தான் சொல்றேன் மூணு மாசம் ரெண்டு பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கணும்"



"சரிங்க சார்" இருவரும் அவரிடமிருந்து விடைபெற்று எழுந்தனர். வீட்டுக்கு வரும்வரை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை.



***



"வர்ஷா"



"என்னம்மா?"



"உனக்கு அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா?"



"அம்மா"



"கிருஷ்ணா உனக்கு?"



"அம்மா"



சந்தியாவின் கண்களில் நீர். இருவரையும் அணைத்துக் கொண்டாள்.



கடவுளே ஏன் இப்படியொரு சோதனை?



"வர்ஷா"



"என்னம்மா?"



"அம்மா உன்ன விட்டுட்டுப்போனா அப்பா கூட சமத்தா இருப்பியா?"



"நீ எங்கம்மா போறே?"



கேட்ட வர்ஷாவை ஊடுருவிப் பார்த்தாள் சந்தியா.



'அது எனக்கே தெரியலம்மா. என்னோட வாழ்க்கையில என்னென்ன நடக்கப் போகுதுன்னு அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.'



"அம்மா" வர்ஷா சந்தியாவை உலுக்கினாள்.



"ம் சொல்லும்மா"



"நீ எங்கம்மா போறே?"



"தெரியலம்மா"



"என்னையும் தம்பியையும் உன்கூடவே கூட்டிட்டுப்போமா. விட்டுட்டுப் போய்டாதமா ப்ளீஸ் " வர்ஷா சொல்ல அதற்கு மேல் சந்தியாவால் தாங்க முடியவில்லை அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.



"கண்டிப்பா நான் உங்கள விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன் "



சந்தியா உணர்ச்சிகரமாய் சொல்ல அதை அறைக்கு வெளியில் நின்றபடி கேட்ட ராகவ் தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.



***



"ராகவ்"



"சொல்லு புனிதா"



"நான் சந்தியாவை ஒரு தடவை பார்த்துப் பேசணும்" புனிதா சொல்ல ராகவ் எச்சரிக்கையானான்.



"என்ன பேசணும்?"



"அவங்க சமாதிச்சிட்டாங்கன்னு சொல்ற. அப்ப நான் அவங்க கூட ஏன் பேசக்கூடாது?"



"நான் அப்படி சொல்லல. என்ன பேச போறேன்னு இயல்பா கேக்கறேன்"



"உன்கிட்ட சொல்லிட்டுத்தான் பேசணுமா?" சிரித்தபடி கேட்ட புனிதா மீது ராகவிற்கு ஆத்திரம் வந்தது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்தான்.



"அப்படி சொல்லல"



"எனக்கு தெரியும் ராகவ். நீ கூட இருக்கிறவங்கள ரொம்ப பாசமா மரியாதையா பார்த்துக்குவேன்னு. சும்மா விளையாண்டேன்"



"ம்"



"என்ன கோபமா?"



"என்னோட புனிதா மேல எனக்கு எப்பவுமே கோவம் வராது."



"ராகவ்"



"சொல்லு புனிதா"



"என்ன தப்பா நினைக்காத இப்படி நான் சொல்றதனால"



"நினைக்கல சொல்லு"



"பல தடவை நீ பேசறது என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக மட்டும்தானோன்னு எனக்குத் தோணுது. உன்னோட இயல்பான கேரக்டர் இது இல்லையோன்னு ஒரு சந்தேகம் உள்ளே ஓடிட்டே இருக்கு " புனிதா அவன் கண்களைப் பார்த்தபடி சொல்ல ராகவ் உஷார் ஆனான்.



'இவள் சாதாரணமானவள் இல்லை இவளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'



அவள் பேச்சை திசை திருப்ப விரும்பிய ராகவ் சட்டென்று எழுந்து அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான்



"என்ன புனிதா என் மேல நம்பிக்கை இல்லையா?"



"நிறைய இருக்கு. அதான் கொஞ்சம் பயம்"



"என்ன பயம் என்னோட புனிதாக்கு?"



"அளவுக்கு அதிகமாக உன்னை நம்பிட்டு ஒருவேளை நாளைக்கு நீ என்னோட நம்பிக்கைக்கு பாத்திரமா இல்லைனா நான் என்ன பண்றதுன்னு…" சொன்ன புனிதாவை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்.



"கவலையேபடாத அந்த மாதிரி ஒரு நிலைமை எப்பவுமே உனக்கு வராது" சொன்னவன் மேற்கொண்டு அவள் ஒன்றும் பேசாமல் இருப்பதற்காக அவள் இதழ்களைகவ்வினான். அவன் உறுதியான அணைப்பும் இதழ் முத்தமும் அவன் எதிர்பார்த்தபடியே அவள் கவனத்தை சிதற வைத்தது. அவன் வலது கை அவள் இடையைப் பிடிக்க அவள் பூங்கொத்தாய் அவன் மீது சரிந்தாள்.



"புனிதா"



"ம்"



"என்னை நம்பறியா?"



"ரொம்ப"



"கல்யாணம் பண்ணிக்கலாமா?"



"எப்ப?"



"சீக்கிரமா"



"நிஜமாவா?"



"நிஜமா"



சொன்னவன் அவளை அணைத்துக் கொள்ள அவள் அவன் அணைப்பில் நிம்மதியாக உணர்ந்தாள்.



***



"கோர்ட்ல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கே. இந்த நேரத்துல கல்யாணம் பண்றத விட தீர்ப்பு வரட்டும் அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணு அதுதான் உனக்கு நல்லது" நண்பன் கணேசன் சொல்ல ராகவ் யோசித்தான்.



"சந்தியா எப்படியும் பிரச்னை பண்ண மாட்டா. அப்புறம் என்ன?"



"அப்படி இல்ல. ஒருவேளை அவள் சார்பா அவளோட அண்ணனே கம்ப்ளைன்ட் கொடுத்தா நீ ஜெயில்ல இருக்க வேண்டியது வரும்."



ராகவிற்கு திக்கென்றது. அந்த கோணத்தில் அவன் யோசிக்கவில்லை. சந்தியாவின் அண்ணன் அப்படி ஒன்றும் பிரச்னைக்குரியவன் அல்ல என்றாலும் தங்கச்சியின் வாழ்க்கைக்கு ஒரு ஆபத்து என்றால் தட்டிக் கேட்காமலா இருப்பான்? அவன் புகார் கொடுத்தால் நிச்சயம் கணேசன் சொன்னது போல் என் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துவிடும். எல்லாம் நான் நினைத்தது போல் நடக்க வேண்டும் என்றால் இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்க வேண்டும். புனிதா எங்கே போய் விடப் போகிறாள்? என்றைக்கு இருந்தாலும் அவள் எனக்குத்தான்.



யோசித்தவன் சிகரட்டைப் பற்ற வைத்து இழுத்தான்.



மணி பார்த்தான். இரவு ஒன்பது மணி. வீட்டிற்குக் கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தான்.



உள்ளே நுழைய சோபாவில் அமர்ந்திருந்த சந்தியா எழுந்தாள். டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைக்க அவள் முகத்தைப் பார்த்தான்.



எப்படி இவளால் ஒன்றுமே நடக்காதது போல் இயல்பாக முகத்தை வைத்துக் கொள்ள முடிகிறது? யோசித்தவனைப் பார்த்து புன்னகைத்த சந்தியா



"என்ன நான் ரொம்ப நார்மலா இருக்கேன்னு பார்க்கறீங்களா? கவலைப்பட்டா வாழ்க்கை மாறிடும்னு சொல்லுங்க. கவலைப்படலாம். முடியாதுல்ல? அதான். இன்னும் கொஞ்ச நாள் இந்த வீட்ல இருப்பேன். இருக்கிற இந்த கொஞ்ச நாள்ல ஒருத்தரை ஒருத்தர் பார்த்து எரிஞ்சு விழறது வேண்டாம். சாப்பிடுங்க"



சந்தியா சொல்ல ஒன்றும் பேசாமல் மௌனமாய் சாப்பிட்டான்.



மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தூங்கியவன் தாமதமாய் எழுந்தான்.



சில மணி நேரம் கழித்து வாசலில் அழைப்பு மணி அடித்தது.



யார் என்று பார்த்தான். எங்கேயும் பார்த்த மாதிரி நினைவில்லை.



"யார் நீங்க?"



"சார் என் பேர் மோகன். ஐடி ல வொர்க் பண்றேன். டேக் ஹோம் சேலரி ஒரு லட்சம்"



"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?"



"தமிழ் மேட்ரிமோனி டாட் காம்ல மறுமணத்துக்கான விளம்பரம் பார்த்தேன்.போட்டோ பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிடுச்சு. ப்ரொஃபைல் சேர் சந்தியான்னு…?" அவன் சொல்ல ராகவ் முகத்தில் ஈயாடவில்லை. சுரத்தின்றி சொன்னான்.



"என் வொயிஃப்தான்"



"கொஞ்சம் கூப்பிட முடியுமா சார்?" கேட்டவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாரிக்கொள்ள ராகவ் முகம் நிறமிழந்தது.
 

Author: gavudham
Article Title: சந்தியாவந்தனம் 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.