ஒழுக்கசீலன் 4

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
மகளிர் காவல் நிலையம்.
காஞ்சிபுரம்.

அந்தப் பெண் சற்றுமுன் அழுதிருக்கிறாள் என்று உறுதியாக நம்பவைத்த முகத்துடன் வாசலில் காத்திருந்தாள்.

கான்ஸ்டபிள் கனகாவின் பார்வையில் பட்டவளை கனகா ஏறிட்டாள்.

"யாரும்மா நீ? ரொம்ப நேரமா இருக்க? என்ன விஷயம்?"

"மேடத்தை பார்க்கறதுக்காக நின்னுட்டு இருக்கேன்"

விஷயம் என்ன?" கனகா கேட்க அவள் தயங்கினாள்.

அவள் விஷயத்தை சொல்ல விரும்பவில்லை என்பதை அறிந்த கனகா மேற்கொண்டு அவளிடம் பேச்சு ஒன்றும் வளர்க்காமல் அமைதியானாள்.

சற்று நேரத்தில் ஜீப் வந்து நிற்க ராஜேஸ்வரி இறங்கினாள். கனகா சல்யூட் அடிக்க தலையசைத்தவள் பார்வை நின்றுகொண்டிருந்தவள் மேல் பட்டது.

கனகாவிடம் கண்களால் என்ன விஷயம் என்று கேட்க

"உங்களப் பார்க்கணும்னு ரொம்ப நேரமா நின்னுட்டிருக்கு மேடம்"

"உள்ளே வரச் சொல்லு" என்றவள் தன் அறைக்குச் சென்றாள்.

தன் இருக்கையில் அமர்ந்தவள் வாசலில் தயங்கியபடி நின்று கொண்டிருந்த பெண்ணை கண்களால் உள்ளே அழைத்தாள்.

"உட்காரு"

"பரவாயில்ல மேடம்"

"உட்காரு" அந்தப் பெண் அமர்ந்தாள்.

அவள் விழிகளை கூர்மையாகப் பார்த்த ராஜேஸ்வரி கேட்டாள்.

"என்ன விஷயம்?"

"மேடம்"

"சொல்லு "

அவள் கண்கள் கலங்கின. தன்னை சுதாரித்துக் கொண்டவள் மெதுவாகப் பேசினாள்.

"என் பேர் அருணா"

"ம்"

"என் வீடு சின்னக்காஞ்சிபுரம். ராஜம் சில்க்ஸ்ல ரெண்டு வருஷமா இருக்கேன்."

"சரி"

"ஓனரோட பையன் என்னை லவ் பண்றேன்னு.." என்ற அருணா தயங்கினாள்.

"பண்றேன்னு?"

"என்னை எடுத்துக்கிட்டார்."

ராஜேஸ்வரிக்குப் புரிந்தது.

"உனக்கு விருப்பமில்லாமலா?"

அருணா தலைகுனிந்தாள்.

"கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதால ரொம்ப நம்பினேன் மேடம்."

"ஆம்பளைக்கு அவனோட காரியம்தான் பெருசு. அதுக்காக அவன் எது வேணாலும் சொல்லுவான். அது எல்லாத்தையும் நம்பறது கடைஞ்செடுத்த முட்டாள்தனம்."

ராஜேஸ்வரி சொல்ல அருணாவின் விழிகள் கலங்கின.

"தப்புதான் மேடம் நான் ஏமாந்துட்டேன்."

"அதைவிடு. கன்சீவ் ஆயிருக்கியா?"

"இல்ல மேடம்"

"தேங்க் காட்"

"மேடம்"

"சொல்லு"

"அவரை நான் ரொம்பவும் லவ் பண்றேன் மேடம்" சொன்ன அருணா அழ ஆரம்பிக்க ராஜேஸ்வரி அவளைப் பரிதாபமாய் பார்த்தாள்.

"நான் உனக்கு என்னம்மா பண்ணனும்?"

"மேடம்"

"ம்"

"எனக்கு அப்பா இல்ல மேடம். அண்ணன் தம்பிங்க யாரும் இல்ல மேடம். அம்மா மட்டும்தான். அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்க மாட்டாங்க மேடம்".

"ம்"

"எப்படியாவது என்னை அவரோட சேர்த்துவைங்க மேடம் உங்களைத்தான் நம்பிட்டிருக்கேன்."

சொன்ன அருணாவையே பார்த்த ராஜேஸ்வரி கேட்டாள்.

"கம்ப்ளெயிண்ட் ஒண்ணும் தர்ற மாதிரி ஐடியா இல்லையா?"

அருணா தலைகுனிந்தாள்.

"சரி போ நான் முயற்சி பண்றேன்"

"மேடம் உங்களை நம்பித்தான்"

"புரியுது. உன் மொபைல் நம்பர் அட்ரஸ் எழுதிக் கொடுத்துடு. உன்னை ஏமாத்தினவன் நம்பர் இருக்கா?"

"இருக்கு மேடம்"

"அவன் பேர் என்ன?"

"பாபு மேடம்."

"சரி கிளம்பு"

அருணா கும்பிட்டாள். வெளியேறினாள். அவள் போவதைப் பார்த்த ராஜேஸ்வரி பெருமூச்சு விட்டாள்.

"கனகா" அழைக்க

"மேடம்" என்றபடி உள்ளே வந்தாள் கனகா.

"ராஜம் சில்க்ஸ் எங்க இருக்கு?"

"தேரடி மேடம்."

"அங்க எங்க?"

"இண்டியன் காஃபி ஹவுஸ்ல இருந்து ரெண்டு கடை தள்ளி இருக்கு மேடம்."

"ம்"

"மேடம்"

"சொல்லு"

"எதுனா பிரச்னையா?"

"பிரச்னை தான். ஆனா கம்ப்ளெயிண்ட் இல்ல."

"புரியுது மேடம்"

"கனகா"

"யெஸ் மேடம்"

"ஏன் இந்தப் பொண்ணுங்க யார் என்ன சொன்னாலும் நம்பிடறாங்க? அயோக்கியனுங்களத் தேடிப் போய் லவ் பண்றாங்க? "

ராஜேஸ்வரி கேட்க கனகா புன்னகைத்தாள்.

"மேடம்"

"ம்"

"ஒண்ணு கேட்கலாமா?"

"கேளு"

"மேடம் யாரையும் லவ் பண்ணதில்லையா?"

கனகா கேட்க ராஜேஸ்வரி சிரித்தாள்.

"அதுக்கெல்லாம் எனக்கு எங்க நேரம்? கல்யாணத்துக்கப்புறம் பண்ணிக்க வேண்டியதுதான்."

"அதுவும் சரிதான் மேடம்."

***

அன்று மாலை டூட்டி முடிந்து வீட்டுக்கு சென்ற ராஜேஸ்வரியைப் புன்னகையுடன் பார்த்தாள் அம்மா.

காஃபி கொண்டு வந்து தர வாங்கிக்கொண்டாள்.

"என்னம்மா எதுவும் விஷயம் இருக்கா?"

"எப்படி சொல்ற?"

"உன்னோட மூஞ்சிலதான் நூறு வாட்ஸ் பல்ப் எரியுதே" ராஜேஸ்வரி சொல்ல அம்மா புன்னகைத்தாள்.

"போலீஸ் புத்திய என்கிட்டயே காட்டு"

"சரி விஷயம் என்ன?"

"வர்ற ஞாயித்துக்கிழமை உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க"

அம்மா சொல்ல ராஜேஸ்வரி எந்த உணர்வும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் இப்படி கேட்கும்பொழுது அவளையும் மீறி ஒரு பரபரப்பு ஒரு மகிழ்ச்சி உள்ளுக்குள் ஓடியது. வரும் வரன்கள் எல்லாமே ஜாதகப் பொருத்தம் பார்த்து தட்டிப் போய்விட ராஜேஸ்வரிக்கு அது ஒரு வழக்கமான சடங்காக மாறிவிட்டது.
அமைதியாக இருந்தவளை அம்மா ஏறிட்டாள்.

"ராஜி"

"அம்மா"

"ஒண்ணும் சொல்லாம இருக்கே?"

"நான் என்னம்மா சொல்ல? எதுவும் சொல்றபடியா இருக்கு என்னோட ஜாதகம்?"

"கவலப்படாத ராஜி. இந்த வரன் கூட ஜாதகப் பொருத்தம் பார்த்ததுக்கப்புறம்தான் பேசவே ஆரம்பிச்சோம்."

அம்மா சொல்ல ராஜேஸ்வரியின் மனதில் ஒரு சிறிய நம்பிக்கை கீற்று. அவள் முகம் பிரகாசிப்பது போல் அம்மா உணர்ந்தாள்.

காமாட்சி அம்மனை மனதார வேண்டிக் கொண்டாள்.

'அம்மா எப்படியாவது இந்த வரன் என்னோட பொண்ணுக்கு முடிச்சிக் கொடுத்துடும்மா. '

அம்மாவின் பிரார்த்தனையை உணர்ந்த ராஜேஸ்வரி புன்னகைத்தாள்.

"அம்மா"

"ம்"

"பையன் என்ன பண்றான்?"

"ப்ரைவேட் கம்பெனில மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ்"

"ம் பேர் என்ன?"

ராஜேஸ்வரி கேட்க அம்மா "ஒரு நிமிடம்" என்றபடி உள்ளே சென்றாள்.

ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"இந்தா போட்டோவும் பயோடேட்டாவும் இருக்கு."

ராஜேஸ்வரி போட்டோவைப் பார்க்க மனோகர் வசீகரமாய் புன்னகைத்தான். ராஜேஸ்வரி மகிழ்ந்தாள். பேர் என்னவென்று பார்த்தாள்.

மனோகர்.

'மனோ ராஜி' மனதிற்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

கொஞ்ச நாட்களாக இல்லாமல் இருந்த பரபரப்பு மீண்டும் வந்தது போல் உணர்ந்தாள்.

ராஜேஸ்வரியின் பார்வை தன்னையும் மீறி காலண்டரில் பட்டது. ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன?

மனம் கணக்குப் போட்டது.

***

வேறு உடைக்கு மாறிய ராஜேஸ்வரி தன் ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டார்ட் செய்தாள்.

ஹோட்டல் அண்ணாமலையாரைக் கடந்து இடதுபுறம் திரும்பினாள்.

ஐந்து நிமிடங்களில் தேரடி வந்தது.

ராஜம் சில்க்ஸ் முன் பார்க் செய்தாள்.

உள்ளே நுழைந்தவளை விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டு "என்ன வேண்டும் மேடம்?" என்று கேட்க அவர்களுக்கு புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.

"பாபு சார் இருக்காரா?"

"இருக்கார் மேடம்" ஒருவன் சொல்ல அவள் உள்ளே நுழைந்தாள்.

யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பாபு ராஜேஸ்வரியை திரும்பிப்பார்த்தான்.

'வாவ். செமயா இருக்கா. ரெட் சுடி இவளுக்குன்னே ரெடியான மாதிரி இருக்கு. செம்ம உடம்பு.'

தன்னையும் மீறி மேய்ந்தவனை ராஜேஸ்வரியின் "எக்ஸ்க்யூஸ்மி" நனவுலகத்திற்கு கொண்டு வந்தது.

"ஸாரி யார் வேணும்?"

"மிஸ்டர் பாபு?"

"நான்தான். சொல்லுங்க."

"நான் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி"

அதைக்கேட்ட பாபு அதிர்ந்தான். முகம் மாறியது.

"சொல்லுங்க மேடம்"

"உங்களுக்கு அருணாவைத் தெரியுமா? "

ராஜேஸ்வரியின் கேள்வியில் ஒரு நிமிடம் அவன் முகம் நிறம் இழந்தாலும் சுதாரித்துக்கொண்டான்.

"யெஸ் இங்க ஸ்டாஃப்"

"உங்களுக்கும் அவளுக்கும் வேற மாதிரி பழக்கம் இருக்கா?"

"நோ டெஃபினிட்லி நாட்"

"ம்"

"மிஸ்டர் பாபு"

"சொல்லுங்க மேடம்"

"நான் இங்க அஃபிஷியலா வரல. ஆனா நடந்தது எல்லாமே தெரிஞ்சுதான் வந்திருக்கேன்."

பாபு மௌனமாய் இருந்தான்.

"ஒரு பொண்ணுகிட்ட அதையும் இதையும் பேசி ஆசைகாட்டி அவள அனுபவிச்சிட்டு ஏமாத்தறது தப்பில்லையா?"

"மேடம்"

"நீங்க பண்றதோட தப்பு அது கொடுக்கிற வலி எதுவுமே இப்பத் தெரியாது. கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அந்தத் தப்பு உங்களை துரத்தித் துரத்தி அடிக்கும். ஆனா பாவம். அப்ப உங்களால சரி பண்ண முடியாது."

"மேடம்'

"ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையில விளையாடாதீங்க."

"நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல. ஐ திங் யூ ஹேவ் மிஸ்டேக்கன்."

பாபு சொல்ல ராஜேஸ்வரியின் முகம் மாறியது.

"டேய் ராஸ்கல். அவ மட்டும் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தா உன்னக் கொத்தாத் தூக்கிட்டு போய் உள்ள வச்சு மிதிச்சிருப்பேன். டீசண்டா பேசிட்டு இருக்கறதுக்காக நீ என்ன வேணாலும் பேசலாம்னு நினைக்காத."

பாபு அதிர்ந்துபோய் பார்த்தான்.

"மேடம்"

"சொல்லு"

"என்னால அருணாவைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது"

"ஏன்?"

"என்னோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு."

"என்ன சொல்றே?"

"உண்மையத்தான் மேடம் சொல்றேன்."

சொன்ன பாபு தன் திருமண அழைப்பிதழை எடுத்துக் காட்ட ராஜேஸ்வரி ஒன்றும் சொல்லாமல் அமைதியாகப் பார்த்தாள்.

இனி என்ன செய்வது? அவள் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் இவனை உள்ளே வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு மேல் இந்த விஷயமாக எதுவும் செய்ய இயலாது. இதுவே நாளை மேலதிகாரிகளுக்கு தெரிந்தால் எனக்குத்தான் தொந்தரவு.

ராஜேஸ்வரி பெருமூச்சு விட்டாள்.
வெளியே வந்தாள்.

ஏனோ அவளுக்கு அருணாவிற்கு அழைக்கத் தோன்றியது.

அலைபேசியில் அருணாவின் எண்ணிற்கு அடித்தாள்.

ரிங் போனது நீண்ட நேரத்திற்குப் பிறகு யாரோ எடுத்தார்கள்.

"ஹலோ அருணா இருக்காளா?"

"அந்தப் பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சுங்க"
 

Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 4
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.