ஒரு ரகசிய குற்றம் 8

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
கைக்குழந்தையுடன் ஓர் இளம் பெண் கதவைத் திறந்தாள்.‌ புருவங்களில் கேள்விக்குறி அமைத்துக்கொண்டு பார்த்தாள்.



"நான் எத்திராஜ்ங்கிறவரை தேடிட்டு வந்தேன். அவர் இறந்து விட்டதா ஒரு பெரியவர் சொன்னார்."



"ஆமா, நீங்க யாரு?"



பெரியவரிடம் சொன்ன அதே பொய்யை அவளிடமும் சொன்னேன். அந்த பெண்ணின் கண்களில் கண் மையும், நம்பிக்கையின்மையும் தெரிந்தது.



"குணசேகரன்ங்கிறவர் அவரோட பையனா?" என்றேன்.



"ஆமா. அவர் எங்க வீட்டுக்காரர் தான்."



"அவர்கிட்ட நான் பேச முடியுமா?"



"அவர் நைட் ஷிப்ட் முடிந்து தூங்கிட்டு இருக்காரு." என்று சொல்லும்போதே, "கலைவாணி யாரு?" என்று உள்ளே இருந்து ஓர் ஆண் குரல் கேட்டது.‌ "உங்க அப்பாவை தேடிட்டு வந்திருக்காங்க." என்றாள் அவள்.‌ "அப்பாவை தேடிட்டா?" என்ற ஆச்சரியத்துடன் லுங்கி பனியனில் ஒருவன் வெளியே வந்தான். தொப்பை அவனுக்கு முன்பு வந்தது.



"யார் நீங்க?" என்றான்.



நான் மீண்டும் 'எங்கப்பாவும் உங்க அப்பாவும்' என்று பெரியவரிடமும் வந்து நின்ற குணசேகரனின் மனைவியிடமும் சொன்ன அந்தக் கதையை மீண்டும் சொன்னேன்.



"சரி, இப்ப என்ன?" என்றான்.



"இந்த போன் நம்பர் உங்க அப்பாவுடையதுதானே?" என்று ஒரு காகிதத்தில் குறித்து வைத்திருந்ததை அவனிடம் காட்டினேன். "இந்த போன் நம்பர் தான் உங்க அப்பா எங்க அப்பாகிட்ட கொடுத்திருக்கார். இந்த நெம்பருக்கு பலமுறை ட்ரை பண்ணி பார்த்துட்டு, ஸ்விட்ச் ஆப்னு வந்ததாம். அதனால, நீ சென்னைக்கு போனா எத்திராஜ் எப்படி இருக்கான்னு பார்த்துட்டு வான்னு அட்ரஸ் கொடுத்தார். அதான் கேட்டேன்."



"அப்படியா?" என்று அவன் நெகிழ்ந்து போனான். "உள்ள வாங்க!" என்று அழைத்தான். மனைவியை காபி போடச் சொன்னான். நான் வேண்டாம் என்று மறுத்து விட்டு, "இப்போ, இந்த நம்பரை நீங்க யாரும் யூஸ் பண்றது இல்லையா?" என்று கேட்டேன்.



அவன் அந்த செல்போன் நம்பரை பார்த்து விட்டு, "ஒரு வேளை எங்க அப்பா இந்த நம்பரை யூஸ் பண்ணி இருக்கலாம். ஞாபகமில்லை. அதுக்கு காரணம், அவரோட உடலை நாங்க மூட்டையா கட்டிய நிலையில்தான் வாங்கினோம். நீங்க சொல்ற மாதிரி அவர் செல்போன் வெச்சிருந்தாலும் அது என்னாச்சுன்னு தெரியலை." என்றான்.



நான் அவனிடம் விடைபெறும்போது, "உங்க அப்பா செத்துப் போனது தெரிஞ்சா எங்க அப்பா ரொம்ப வருத்தப்படுவார்!" என்றேன். குணசேகரனும் மிகவும் வருத்தப்பட்டான்.



யமஹாவில் திரும்பும்போது செத்துப் போன ஒருவரின் பெயரில் ஒரு செல்போன் நம்பர் உயிருடன் பேசுகிறது என்றால், ஏதோ ஒரு பெரிய விபரீதமாகத்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு மீண்டும் என்னை எச்சரித்தது.



இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. நீரஜா கண்டுபிடிக்கச் சொல்லிக் கொடுத்தது இரண்டு செல்போன் எண்கள். இரண்டையும் கண்டு பிடித்தாயிற்று. ஒன்று, விக்ரம் குமார். விக்ரம் என்று சுருக்கமாக அழைக்கப்படுபவன். ஆதார் அட்டை சமர்ப்பிக்கப்பட்டு வாங்கிய செல்போன் நம்பர்! அந்த எண்ணிலிருந்து நீரஜாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.



இதில், இன்னொரு ஆச்சரியமான செய்தி; இதே எண்ணிலிருந்து விக்ரமின் இன்னொரு செல்போன் எண்ணுக்கு போன் செய்து, விக்ரமிடமும் மிரட்டும் தொனியில் பேசியது. இதுதான் என்னைக் குழப்பியது. விக்ரம் ஒரு ஆளை ஏற்பாடு செய்து அவன் மூலமாக இந்த மிரட்டல் நடந்திருக்கிறது என்று நான் யூகித்தேன்.



நான், என் சிந்தனையின் ஓட்டத்துக்கு ஏற்றாற்போல் யமஹாவின் வேகத்தைக் குறைத்து மிதமாக ஓட்டினேன்.



நீரஜாவை மிரட்டியது உண்மை. அதே போல் விக்ரமுக்கு போன் செய்து மிரட்டியது ஒரு பாசாங்கு. 'என்னை ஒருவன் போனில் மிரட்டுகிறான் என்று நீரஜா விக்ரமிடம் சொன்னதும், 'அப்படியா? உன்னை மிரட்டியவன் என்னையும் மிரட்டினான்' என்று விக்ரம் திருப்பிக் சொல்லலாம். அதுதான் நடந்திருக்கிறது. உண்மையில் நீரஜாவிடம் விக்ரம் இப்படித்தான் சொல்லி இருக்கிறான். நீரஜாவை நம்ப வைப்பதற்காக விக்ரம் செய்த ஏற்பாடாகக் கூட இது இருக்கும்.



இதில், இன்னொரு குழப்புகின்ற சூடான செய்தி: எத்திராஜ்! இரண்டு வருடங்களுக்கு முன்பு எத்திராஜ் செத்துப் போய்விட்டான். செத்துப் போனவன் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் நம்பர். இந்த நம்பர் எப்போது வாங்கப்பட்டது என்று தெரியவில்லை. ஷாலினியிடம் இதைப்பற்றி நான் சொல்லவும் இல்லை. சொல்லி இருந்தால், இந்த நம்பர் எப்போது வாங்கப்பட்டது என்று ஷாலினி சொல்லி விட்டு இருப்பாள். தேவை இருந்தால் கேட்டுக் கொள்ளலாம். இந்த நம்பரில் இருந்து உங்கள் 'நலம் விரும்பி' என்று நீரஜாவுக்கு ஏன், எதற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்?



நீரஜாவின் நலம் விரும்புபவன் தன் சொந்த செல்போனில் இருந்து மெசேஜ் அனுப்பி இருக்கலாம். ஏன், செத்துப்போன எத்திராஜ் பெயரில் இருக்கும் நம்பரில் மெசேஜ் செய்ய வேண்டும்?



அடுத்து, நீரஜாவின் கணவன் சுவாமிநாதனுக்கு விக்ரம் பெயரில் வாங்கப்பட்ட நம்பரில் இருந்து போன் செய்து, 'நீங்க விக்ரம்தானே?' என்று விசாரிப்பு வேறு! சுவாமிநாதன் ரொம்ப இயல்பாக, 'இல்லை; ராங் நம்பர்!' என்று வைத்துவிட்டார்.



நீரஜாவை மிரட்டுவதற்காக வும் பயப்படுத்துவதற்காகவும் சுவாமிநாதனுக்கு போன் செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.



ஆனால், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தான் புரியவில்லை.



நான், என் அலுவலகத்துக்கு வந்து மாலை வரை நீரஜாவுக்காக காத்திருந்தேன். ஆனால், அவள் வரவில்லை. அவளின் அழைப்பு மட்டும் வந்தது.



"மாதவன் சார்!"



"சொல்லுங்க நீரஜா!"



"இன்னைக்கு நான் விக்ரமை நேரில் சந்திக்க முடியலை. அவனோட வெட்டிப் பசங்க கூட சேர்ந்துட்டு ஊர் சுத்தப் போயிருக்கான்.‌ போன்ல கூட பிடிக்க முடியலை!"



"சரி, நான் உங்க பதிலுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்."



"விக்ரமுக்கு நான் மெசேஜ் அனுப்பி இருக்கேன். அவசரமா உன் கூட பேசணும்னு."



"சரி, நாளைக்கு நீங்க எனக்கு தகவல் சொல்லுங்க!"



"நீங்க போன் நம்பர் கண்டுபிடிச்சீங்களா?"



"நாளைக்கு நீங்க என்னைப் பார்க்க வரும்போது கண்டிப்பா கண்டுபிடிச்சி இருப்பேன். மறுபடியும் போன் ஏதாவது வந்ததா?"



"இல்லை. அவன்தான் ரெண்டு நாள் டைம் கொடுத்திருக்கானே, அதனால ரெண்டு நாள் கழிச்சு தான் போன் பண்ணுவான்."



"ஓகே! மனசைப் போட்டு ரொம்ப குழப்பிக்காதீங்க. உங்க பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அதற்கு நான் உத்தரவாதம் தர்றேன்."



"ரொம்ப தேங்க்ஸ் மாதவன் சார்!"



செல்போனைத் துண்டித்தாள் நீரஜா. நீரஜாவின் முகம் திரையில் தெரிவதுபோல் நான் செல்போனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இனி, இந்த கேசில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, இரண்டு செல்போன் எண்களைக் கண்டுபிடித்து, பெயர், விலாசம் சேகரித்து தருகிற மிக மிக அற்ப வேலை! அதை செய்தாயிற்று. இனிமேல் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் நீரஜா விக்ரமை சந்தித்து பேசிய பிறகுதான்! சந்தித்த பிறகு, என்னிடம் அவள் விவரித்த பிறகுதான்…



***



"நான் பலமுறை முயன்ற பிறகு விக்ரம் கிடைத்தான். மீண்டும் ஒரு புயல் சென்னையில் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது. சுவாமி இன்றைக்கு மும்பை செல்வதால் அதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக மதியம் வரை வீட்டில் இருப்பான். பிறகு, கிளம்பிச் செல்வான். அவன் கிளம்பிச் சென்றதும் நான் விக்ரமை வந்து சந்திப்பதாக விக்ரமிடம் சொல்லி இருக்கிறேன். நான் கிளம்பும் போது விக்ரமுக்கு போன் செய்தால் போதும்.



"என்ன நீரஜா, ரொம்ப டென்ஷனா இருக்கிற மாதிரி தெரியற?" மூன்று நாளைக்குத் தேவையான உடைகளையும் சேவிங் செட், டூத் பேஸ்ட், சோப்பு என்று அனைத்தையும் சூட்கேசில் எடுத்து வைத்துக் கொண்டே கேட்டான் சுவாமிநாதன்.



"நான் நல்லாத்தானே இருக்கேன்." என்றேன்.



"மூணு நாள் எப்படி தனியா இருக்கிறதுன்னு கவலைப்படறியா?"



"அதெல்லாம் இல்லை. அடிக்கடி நீங்க இப்படி வெளியூர் போறது வழக்கம்தானே!?"



"நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய் இரேன்." சுவாமிநாதன் வெளியூர் செல்லும் போது வழக்கமாக இப்படித்தான் கூறுவான். விக்ரமை சந்திப்பதற்கு முன்பு வரை நான் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன். பிறகு சுவாமிநாதன் திரும்பியதும் தான் வருவேன். என்றைக்கு விக்ரமை சந்தித்தேனோ அன்றிலிருந்து நான் அம்மா வீட்டிற்குச செல்வதில்லை. அம்மா வீட்டிற்குச் செல்வதாகப் பொய் சொல்லி விட்டு விக்ரமை பார்க்கப் போய்விடுவேன். வீணையின் நரம்புகளில் புதைந்து கிடக்கும் மீட்டப்படாத பல இன்ப ராகங்களை விக்ரம் மீட்டினான். அந்த மீட்டலுக்காக நான் காத்துக் கிடப்பேன் - சுவாமி எப்போது வெளியூர் செல்வான் என்று.



"என்ன யோசனை நீரஜ்?" சுவாமிநாதன் கேட்டான். என்னை உறுத்துப் பார்த்தான்.



"ஒண்ணும் இல்லை." என்றேன்.



"பொம்பளைங்க ஒண்ணும் இல்லைன்னு சொன்னாவே ஏதோ இருக்குன்னுதான் அர்த்தம்!"



நான் எழுந்தேன். எழுந்த வேகத்தில் முந்தானை சரிந்தது. சுவாமியை வீழ்த்தும் வேகத்தில் அவனைக் கட்டியணைத்தேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 8
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.