ஒரு ரகசிய குற்றம் 7

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
ஓர் உன்னதமான பொருளைக் கண்டுபிடித்தது போல் என் கண்கள் விரிந்தன. உடனே பிடிவாதமாக அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றேன். நீரஜா கொடுத்த இரண்டு செல்போன் எண்களின் பெயர் விலாசத்தை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று அவளுக்கு இப்போது தெரிய படுத்த விரும்பவில்லை. அவளிடம் இருந்து இன்னும் சில தகவல்களைப் பெற வேண்டும். செல்போனில் நீரஜாவுக்கு அழைப்பு வந்த எண் பளிச்சிட்டது. விக்ரம் குமார் எண்ணும் ஷாலினி வாட்ஸ் அப்பில் அனுப்பிய எண்ணும் ஒன்றாகவே இருந்தது.



"நேத்து உங்களை மிரட்டற மாதிரி பேசியவனும் இவனும் ஒருத்தன் தானா?" நான் கேட்டேன்.



"ஆமாம்; ஒருத்தன்தான்!" என்றாள் நீரஜா.



"அப்புறம், உங்க நலம் விரும்பின்னு ஒருத்தன் மெசேஜ் பண்ணிணானே?"



"இல்லை; இது அவன் இல்லை! அவன் குரல் வேற மாதிரி இருந்தது. அவன் வேற ஏதோ கோயம்புத்தூர் ஸ்லாங்ல பேசினான்."



"கோயம்புத்தூர் ஸ்லாங்கா?"



"ஆமாம். ஆனா, சரியா தெரியலை, அது எந்த ஊர் பாஷைன்னு."



"அவன் கூட பேசினதை நீங்க ரெக்கார்ட் பண்ணலையா?"



"இல்லை. ஏதோ பதட்டத்துல விட்டுட்டேன். அதையும் ரெக்கார்ட் பண்ணி இருந்தா உங்களுக்கு கண்டுபிடிக்கிறதுக்கு உதவியா இருந்திருக்கும்."



நான் யோசனையாய் அவளைப் பார்த்தேன். அவள் குழப்பத்திலும் பயத்திலும் இருந்தாள்.



"நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க நீரஜா?"



அவள் புருவங்கள் புழுவாய் நெளிந்து வளைந்து "எதைப் பத்தி?" என்றாள்.



"அவன் உங்ககிட்ட கேட்டது பத்தி... அவன் எதிர்பார்க்கிறது பத்தி…"



நான் பேச்சை முடிக்க வில்லை. அவள் கண்கள் கோபத்தில் தீப்பொறியை உமிழ்ந்தது.



"நான் என் ஹஸ்பண்டுக்கு தெரியாம விக்ரம் கூட பழக்கம் வெச்சிருக்கிறது உண்மைதான். அதுக்கு பர்சனலான காரணங்கள் இருக்கு. அதுக்காக அந்த தொடர்பை வெச்சு என்னை மிரட்டணுமா? அப்படி மிரட்டினா நான் பணிஞ்சு போகணுமா? நீங்களே சொல்லுங்க சார்! இப்ப இந்த விஷயம் உங்களுக்கு கூடத்தான் தெரியும். ஒரு பேச்சுக்கு சொல்றேன்; நீங்களும் மிரட்டினா நான் ஒப்புத்துக்கணுமா? அப்புறம் இன்னொருத்தன் மிரட்டுவான். அப்புறம் இன்னொருத்தன்... அதுக்கப்புறம் இன்னொருத்தன்னு போய்கிட்டே இருக்கும். நான் என்ன மனுஷியா? இல்லை, மெஷினா?"



ஒரு பைத்தியக்காரனின் கையில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கியில் இருந்து வெறித்தனமாய் வெளியேறும் தோட்டாக்களைப் போல் நீரஜா வார்த்தைகளை உமிழ்ந்தாள். படபடப்பாக இருந்தாள். உடல் லேசாக நடுங்கியது. அவள் படபடப்பு அடங்க சிறிது நேரமானது.‌ நான் காத்திருந்தேன்.



"அப்படின்னா நீங்க அவனுக்கு ஒத்துழைக்க போறதில்லை?"



"ஆமாம். செத்தாலும் நான் அதை செய்ய மாட்டேன்!"



"சரி, இப்ப வந்த போன் கால் பத்தி விக்ரம் கிட்ட பேசினீங்களா?"



"இல்லை."



"குட். வெரி குட்!"



நீரஜா, "நீங்க அந்த போன் நம்பர் யாரோடதுன்னு கண்டுபிடிச்சீங்களா?" என்றாள்.



"இன்னும் இல்லை." நான் தெரிந்தே பொய் சொன்னேன். "நீங்களே உங்க போன்ல ட்ரூ காலர் ஆப் டவுன்லோட் பண்ணி கண்டுபிடிச்சு இருக்கலாமே?"



"கண்டு பிடிச்சிருக்கலாம். ட்ரூ காலர்ல பேர் மட்டும் தான் வரும். அவன் யார், என்னங்கிற விவரம் தெரியாதே! அதெல்லாம் எனக்கு பெரிய தலைவலி சார். அதனாலதான் பொறுப்பை உங்க கிட்ட கொடுத்தேன். உங்களால முடியும் இல்ல?"



"நிச்சயம் முடியும்!" என்றேன். "சரி, விக்ரமோட பெயர் வெறும் விக்ரம் தானா, இல்ல…"



நான் பேச்சை முடிக்கும் முன்பாக, "விக்ரம் குமார், அவன் முழுப்பெயர்!" என்றாள் நீரஜா. "ஏன் கேக்கறீங்க?



"தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். விக்ரமோட அட்ரஸ் தெரியுமா உங்களுக்கு?"



"தெரியும். எதுக்கு கேக்குறீங்க?"



"இல்லை. தெரிஞ்சுக்க தான் கேட்டேன்."



விக்ரமின் விலாசம் சொன்னாள் நீரஜா. அவள் சொன்ன விலாசத்தையும், ஷாலினி அனுப்பிய விலாசத்தையும் மனதுக்குள்ளேயே ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். மிகச் சரியாக பொருந்தியது.



ஷாலினி என்னையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கேட்டாள்.



"சரி, இப்ப நான் என்ன செய்யட்டும்னு சொல்லுங்க. வழக்கமா இந்த மாதிரி சமயத்துல நான் விக்ரம் கிட்ட தான் பேசுவேன். இப்போ அவன் மேலேயே சந்தேகம் வர்றதால எனக்கு குழப்பமா இருக்கு. யோசிக்க முடியலை. உங்களை மாதிரி ஒருத்தர் உதவி தேவையா இருக்கு. அதனாலதான் கேக்கறேன்."



நான் ஆழமாக நீரஜாவை பார்த்தேன். அவள் இன்னும் பயத்தில் இருந்தாள்.



"என்னை நீங்க முழுசா நம்பறீங்களா?" நான் கேட்டேன்.



"நம்பித்தானே ஆகணும்!" என்றாள் நீரஜா.



"ரெண்டும் கெட்டான் மனநிலையில் சொல்லாதீங்க. என்னை உறுதியா நம்பறதா இருந்தா நான் உங்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்றேன்."



"சரி, நான் உங்களை உறுதியா நம்புறேன்."



"அப்படின்னா, நான் சொல்ற மாதிரி செய்யறீங்களா?"



"நிச்சயம் செய்கிறேன்."



"தட்ஸ் குட்! உங்களுக்கு போன் கால் வந்ததை பத்தி விக்ரம் கிட்ட சொல்லுங்க!"



நீரஜா ஆச்சரியப்பட்டாள்.



"விக்ரம் கிட்டயா? நீங்க என்ன சொல்றீங்க?"



"ஆமாம். நான் சொல்றதை செய்யுங்க. விக்ரம் கிட்டே இது பத்தி பேசுங்க. என்னைக் கேட்ட மாதிரி, 'நான் என்ன பண்றது'ன்னு அவன் கிட்டேயும் கேளுங்க. விக்ரம் என்ன சொல்றான்னு கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்லுங்க.



"இது எதுக்குன்னு எனக்கு புரியலை."



"இப்ப உங்களுக்குப் புரிய வேணாம்."



"நீங்களும் விக்ரம் மேல சந்தேகப்படறீங்களா?"



"தெரியலை. நீங்க பேசிட்டு வந்து சொல்லுங்க."



நீரஜா எழுந்து கொண்டாள். ஓர் அழகிய சிற்பத்தின் மீது புழுதி படிந்தது போல் அவள் முகம் களையிழந்து போனது. அவள் உற்சாகம் இல்லாமல் கிளம்பிச் சென்றாள். நான் சிறிது நேரம் அவள் சென்ற பிறகும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.



ஓர் அழகான பெண் தன் கணவனுடன் ஒன்றாக இருக்கும் போதே, அவளை அடைவதற்கு பல முயற்சிகள் நடக்கும். ஆனால்,கணவனுக்கு தெரியாமல் வேறு ஒருவனுடன் தொடர்பில் இருக்கிறாள் என்று தெரிந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? பல பேர் பல விதமாக முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். பணியும் வரை விடமாட்டார்கள். மிரட்டியாவது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைப்பார்கள். அப்போது, அந்தப் பெண் கணவனுக்கு பயந்தே சாக வேண்டும். இல்லையெனில் பணிய வேண்டும். இப்படித்தான் பல பெண்கள் விபரீதச் சுழலில் சிக்கித் தவிக்கிறார்கள். அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைப்பதில்லை.



எனக்கு பசித்தது.



***



ஒரு சிறிய சிற்றுண்டிச் சாலையில் என் பசியை போக்கிக் கொண்டு யமஹாவை சீற விட்டேன். அது, ஒரு மானைத் துரத்தும் பசி எடுத்த சிறுத்தை புலியை போல ஆவேசமாகச் சீறிப் பாய்ந்தது. அரை லிட்டர் பெட்ரோலை ஜீரணித்த பிறகு நான் அந்த வீட்டின் முன் நின்றேன்.



வடபழனியில் நெருக்கமான வீடுகள் சூழ்ந்த பொன்னியம்மன் கோவில் தெருவில், 318 / 25 வீட்டைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. ஒரு மரத்தடியில் யமஹாவை ஓயப்படுத்தி விட்டு ஒரு பெரியவரை விசாரித்தேன்.



"என்ன பேர் சொன்னீங்க?" என்றார் அவர், பஞ்சுத் தலையைக் கோதி விட்டுக் கொண்டு.



"எத்திராஜ்!"



"எத்திராஜ் ஜா? தெரியலைங்க, தம்பி." என்றார். அவரை விட்டு விலகும் போது, "அடடே! தம்பி வாங்க!" என்றார். நான் திரும்பிச் சென்றதும் அவர் நின்றிருந்த இடத்தில் இருந்து மூன்றாவது வீட்டைக் காட்டி, "அந்த வீடுதான் தம்பி!" என்றார். "நான் மறந்து போயிட்டேன் தம்பி. அவர் செத்துப் போய் ரெண்டு வருஷம் ஆகுது." என்றார்.



நான் அதிர்ச்சியடைந்தேன்.



"நீங்க என்ன சொல்றீங்க? எத்திராஜ் செத்துப் போயிட்டாரா?"



"ஆமா, தம்பி. ரெண்டு வருஷம் ஆகுது. கம்பெனியில் வேலை செய்யும் போது அவர் மேல கிரேன் விழுந்து ஸ்பாட்டிலேயே செத்துப் போயிட்டார். பொட்டலமா கட்டி தான் வீட்டுக்கு வந்தது பாடி!"



அதிர்ச்சி விலகாமல் நான் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். என் மனதுக்குள் எண்ண மின்னல்கள் தொடர்ந்து விளாசின.



"இப்போ வீட்ல யார் இருப்பாங்க?"



"அவருக்கு ஒரே மகன் தான் இருந்தான். அப்பா செத்துப் போனதும் அதே கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்துட்டாங்க. அவன் பேர் கூட…" என்று வானத்தை பார்த்து விட்டு, "ம்ம்..குணசேகரன்." என்றார்.



"இப்போ அவர் பையன் வீட்ல இருப்பாங்களா?"



"தெரியலை. அவன் பொண்டாட்டி இருக்கும்; கேட்டு பாருங்க! நீங்க யாரு?"



நான் சட்டென்று, "வேலூர்ங்க. எங்க அப்பாவுக்கு எத்திராஜ் ரொம்ப பழக்கம். சென்னைக்கு போனா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வான்னு சொன்னார்." என்று சொல்லிவிட்டு அவர் அடையாளம் காட்டிய வீட்டை அடைந்தேன்.



சிறிய காம்பவுண்ட் கேட்டுக்கு அடுத்து வீட்டுக் கதவு மூடியிருந்தது. காம்பவுண்டுக்கு உள்ளே தண்ணீர் பைப் மிக நீளமான பாம்பு போல் சுருண்டு இருந்தது. வெளியே குப்பையில் கொட்டுவதற்கான ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் குப்பைகள் நிறைந்திருந்தது.‌ இடது பக்கம் ஆசையாய் ஒரு மல்லிப்பூ செடி ஒரு தொட்டியில் பூக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் இருந்தது. நான் கதவை தட்டினேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 7
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.