ஒரு ரகசிய குற்றம் 31

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
"ஓ, காட்!" என்றேன், என்னை அறியாமல்.



"என்ன மாதவன்?" யாழினி என்னைப் பார்க்க, நான் சூட்கேஸில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்க்க சமயமில்லாமல் கேமிராவை வைத்துப் பூட்டி சூட்கேஸை எடுத்துக் கொண்டு, "வா, முதல்ல இங்கிருந்து வெளியே போயிடலாம். நீரஜா கேஸ் ஓவர்! என்னால நம்பவே முடியலை. வா போயிடலாம்." என்று அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கதவில் சாய்ந்து காது கொடுத்து கேட்டுவிட்டு, மெல்ல கதவைத் திறந்து வெளியே தலையை மட்டும் கொஞ்சமாக நீட்டி இரண்டு புறமும் பார்த்தேன்.



சோம்பேறித்தனமான ட்யூப் லைட் வெளிச்சத்தில் அந்த ஹால் சுத்தமான அமைதியில் இருந்தது. காதுகளும் கண்களும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் உயிர் பயத்தில் பூனையைக் கண்காணிக்கும் எலியைப் போல் கண்களை உருட்டி மெல்ல நடந்து செல்ல பின்னால் யாழினி பதட்டமுடன் தொடர்ந்தாள்.



கீழே இறங்கும் படிக்கட்டுகளில் தாழ்ந்து, "யாழினி, நீ முதல்ல வெளியே போய்ப் பார்!" என்றேன். யாழினி க்ரில் கேட்டை மெல்ல திறந்து வெளியே போய், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கையால் வா என்று சைகை செய்தாள். நான் சூட்கேசுடன் வெளியே வந்து, "நீ முதல்ல போய் வண்டியை எடுத்துட்டு வா!" என்றேன். அவள் மிக வேகமாக தெருவில், கட்டிட நிழல் இருட்டில் நடந்தோடினாள். நான் அவள் பின்னால் வேகமாக நடந்த போது சரேலென்று ஒரு கார் வெளிச்சத்தைப் பீய்ச்சி அடித்த படி அந்தத் தெருவில் நுழைந்து என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. யாழினி அந்த பேக்கரி சந்தில் திரும்பி யமஹாவை எடுப்பதற்கு ஓடினாள். நான் தப்பிக்கும் நோக்கத்தில் அவள் பின்னால் ஓடினேன். கார் என்னைத் துரத்தியது.



கார் எங்கே இருந்து என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தது என்று தெரியவில்லை. இத்தனை நேரம் எங்கிருந்தது? யாழினி வண்டியை எடுப்பதற்குள் கார் என்னை நெருங்க, நான் நீளமான தெருவில் ஓடினேன். ஏதோ ஒரு சந்தில் திரும்பினேன். காருக்கு போக்குக் காட்ட குறுக்குச் சந்தில் திரும்பி எந்த இடம் என்று தெரியாமல் ஓடி ஒரு மைதானத்தை அடைந்தேன். தூரத்தில் ஏதோ ஒரு ஸ்கூல் கட்டிடம் தெரிய மைதானத்தில் ஓடுவது அத்தனை உத்திரவாதமானதாகத் தோன்றவில்லை. மீண்டும் திரும்புவதற்குள் கார் அத்தனை சிறிய சந்துகளிலும் புகுந்து என்னை மோப்பம் பிடித்துத் துரத்தியது. நான் திசை தெரியாமல் ஓடினேன். கிடைத்த இன்னொரு சந்தில் திரும்பவும் ஓட, கார் பின்னால் சளைக்காமல் என்னைத் தொடர்ந்து வந்தது.



அபாரமான வேகத்தில் அந்தக் காரை நான் எதிர் கொண்டேன். அது, கரும்பச்சை டொயோட்டா இல்லை; கரும்பச்சை பிசாசு! டிரைவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் காற்றை அறைந்து கொண்டு காட்டுத்தனமாக அப்படி காரை செலுத்த முடியாது. உள்ளே இருக்கும் டிரைவரை என்னால் பார்க்க முடியவில்லை. காரினுள் காரிருள்! பூனையின் இரண்டு பிரகாசமான கண்கள் போல் அந்த காரின் இரண்டு முன் விளக்குகளும் வெளிச்சத்தை வாரி இறைத்த படி என்னை நெருங்கியது.



அடிபட்ட நாயொன்று 'ஈஈஈய்ய்ய்ங்ங்ங்' என்று மரண ஓலமிடுவது போல் விநோதமான சத்தத்துடன் அந்தக் கார் என்னைக் குறிவைத்து வந்தது. தார்சாலையில் காரின் நான்கு டயர்களிலும் தீப்பொறி கிளம்பியது. நான் தப்பிக்க வழி தேடினேன். சுற்றிலும் கண்களுக்கு புலப்படாத இருட்டு. காரின் ஹெட் லைட் துப்பிய வெளிச்ச வெள்ளத்தில் எனக்கு பின்னால் இருந்த கட்டடம் தெரிந்தது.



தப்பிக்க அது ஒரு வழிதான்.



நான் அந்த கட்டடத்தை நோக்கி புயல் போல் ஓடினேன். கட்டடம் பத்து மைல் தூரம்… இல்லை; நூறு மைல் தூரம் இருப்பது போல் இருந்தது. என் கால்களின் ஷுக்களுக்கு அடியில் அனல் பறந்தது. நான் கையில் வைத்திருக்கும் சூட்கேஸ் வேறு கனமாக என்னை துன்புறுத்தியது. அதைத் தூக்கிக்கொண்டு ஓடுவது சவாலான விஷயம். ஆனால், சூட்கேசை விட்டு விட்டு ஓட முடியாது. அந்த சூட்கேஸுக்காகத்தான் இத்தனை துரத்தல்களும்; இத்தனை சுவாரசியமான ஓட்டங்களும்!



ஓடு! ஓடு! ஓடு!



இல்லை என்றால், நிச்சயமாய்-



சாவு! சாவு! சாவு!



எனக்குள் ஒரு உசைன் போல்ட் புகுந்து கொண்டான்.



கார் வெளிச்சம் என்னை துரத்தியது. அந்த வெளிச்சத்தை பயன்படுத்தி ஓடினேன். கார் வெளிச்சம் ஒரு வெள்ளைப் படுதா போல் நீண்டு எதிர் கட்டடத்தின் அருகாமையை உணர்த்தியது. ஓடினேன். ஓடினேன்.



காற்று காற்று என்று இதயம் அடித்துக் கொண்டது. இரையை விழுங்கிய மலைப்பாம்பு போல் மூச்சு விட்டேன்.‌ கண் காது வாய் என்று எல்லாவற்றிலும் சுவாசிக்க வேண்டும் போலிருந்தது.



ஓடி வந்து வெற்றுச் சுவரில் முட்டிக் கொண்டேன்.



இப்போது என்ன செய்வது?



இரண்டு பக்கமும் பார்த்தேன்.



அது ஒரு கட்டடத்தின் பின்புறமாக இருக்க வேண்டும். காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் கசிந்த மிச்சத்தில் அந்தக் கட்டடத்தின் அமைப்பு நிழலாகத் தெரிந்தது.



நான் தப்பிக்க வழியின்றி திகைத்து நின்றதும் எனக்கு பத்தடி தொலைவில் வந்து கிரீச்சிட்டு நின்றது கார்.



ஒரு சிங்கத்தின் சிலிர்ப்புடன் கார் உறுமிக் கொண்டு நின்றது.



நான் இடது கையிலிருந்து வலது கைக்கு சூட்கேஸை மாற்றிக் கொண்டு, காரில் இருந்து யாராவது இறங்குகிறார்களா என்று பார்த்தேன். யாரும் இறங்கவில்லை. கியர் மாற்றி, பாய்வதற்குத் தயாராக இருந்தது, கார். நான் நகர்ந்தால் அடுத்த வினாடி கார் என் மீது மோதும். தப்பிக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை.



நான் லேசாக அண்ணாந்து பார்த்தேன். அந்த கட்டடத்தின் ஏதோ ஓர் அறையின், ஏதோ ஒரு ஜன்னலின் சன்சேடு தெரிந்தது. எம்பினால் எட்டாத உயரத்தில் இருந்தது அது. என் அதிர்ஷ்டத்தை நொந்து கொண்டேன்.



காரில் இருப்பவனுக்கும் பொறுமையில்லை. எருமை போல அதை உறும விட்டான். பாயப் போகிறான் என்று தெரிந்தது. நான் சட்டென்று சூட்கேசை மேலே தூக்கி எறிந்தேன். அது சுழன்று கொண்டு போய் சரியாக சன் ஷேடு மீது விழுந்தது, என் அதிர்ஷ்டம் என்றால், கார் என்னை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது என் துரதிஷ்டம்!



நான் செத்தேன்!



சுவரோரம் இப்படியும் அப்படியும் எப்படியும் நகர முடியவில்லை.



கார் என் மீது மோதியது!



அதே விநாடி நான், நின்ற இடத்தில் இருந்து மூன்றடி உயரத்துக்கு எகிறினேன். கார் சுவற்றில் மோதியது. நான் கார் பானெட் மீது குதித்தேன். குதித்த வேகத்தில் காரின் உச்சியில் தாவி, சன்சேடில் விழுந்த சூட்கேஸை பறித்துக் கொண்டு, காருக்கு பின்புறமாகக் குதித்து ஓடினேன். கார் நிலைகுலைந்து இருந்தது. டமார் என்ற அந்த சத்தம் கட்டிடத்தின் உள்ளே கேட்டிருக்கும். அது எந்த கட்டிடம்; உள்ளே யார் இருப்பார்கள் என்று எதையும் யோசிக்காமல் சூராவளி போல் சுழன்று ஒரு இலக்கை நோக்கி இலக்கில்லாமல் ஓட, வேப்பமரம் ஒன்று எனக்கு உதவியது. சற்று பெரிய மரம். அதன் மறைவில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டு பார்த்தேன்.



கார், இடித்த வேகத்தில் இருந்து மீண்டு திரும்பி வர சற்று நேரமானது. பக்கத்தில் நிழலான கட்டிடங்களில் வெளிச்சம் உற்பத்தியாயிற்று. கார் இடித்த சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்திருக்க வேண்டும். நான் இப்போது கொஞ்சம் நம்பிக்கை பெற்றவனாக மரத்தின் இருளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, கார் திரும்பி நான் இருக்கும் திசை தெரியாமல் வேறு பக்கம் பயணம் செய்தது. ஒரு தெருவில் திரும்பி மறைந்தது. அது மறைந்த அதே சமயம் இன்னொரு தெருவில் இருந்து ஒற்றைக் கண் வெளிச்சத்துடன் என் யமஹாவின் சத்தம் கேட்டது. நான் மரத்திலிருந்து விலகி வர, என்னைப் பார்த்து விட்ட யாழினி பைக்கை என் அருகே கொண்டு வந்ததும் நான் தாவி ஏறிக் கொண்டு, "இப்ப நீ வந்த வழியே போ யாழினி! கார்க்காரன் அடுத்த தெருவில் போயிருக்கான்." என்றேன்.



"கார்ல யார் இருக்காங்கன்னு தெரிஞ்சுதா?" பைக்கை யாழினி அனாயசமாக ஓட்டிக் கொண்டே கேட்டாள்.



"தெரியலை. அந்த ரகுநாதனாகத்தான் இருக்கணும். அவன்தான் நம்மை கண்காணிச்சுக்கிட்டு பின்னால் வந்திருப்பான். நாம கவனிக்காம விட்டுட்டோம்."



"பைக்கை எடுத்துட்டு வர்றதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சி! ஆனா, நீங்க எப்படியோ தப்பிச்சுட்டீங்க!"



"இன்னும் இல்லை யாழினி. அவன் நம்மைத் தேடி எந்த சந்திலிருந்தாவது மறுபடியும் வருவான். நீ முதல்ல மெயின் ரோடுக்கு வழியைக் கண்டுபிடிச்சு போ!"



பைக் சந்துகளில் இருந்து சற்று பிரதான சாலைக்கு வந்த போது, அந்த டொயோட்டா ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தது.



"யாழினி! அந்தக் கார்தான்! நம்மை பார்த்துட்டானா?"



"இல்லை!" என்றவள் சடனடியாக ஓர் அரை வட்டம் அடித்து, சாகசமாக வந்த தெருவிலேயே திருப்பி நிறுத்தினாள்.



நான் பைக்கை விட்டு இறங்கிச் சென்று பார்த்தேன். அந்த கார், திரும்பி வரவே நான் அவசரமாக, "யாழினி! பைக்கை இங்கே எங்கியாவது இருட்டில் நிறுத்து! அவன் மறுபடியும் வர்றான்." நான் சொல்ல, யாழினி முதலில் ஹெட் லைட்டை அணைத்து விட்டு பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடினாள்.



எல்லாம் கடைகள்! ஷட்டர்கள்! வீடுகள்! மூடிய கதவுகள்! ஒரு டீக்கடை தெரிந்தது. டீக்கடைக்கு முன்னால் அடுப்பு வைக்கும் மேடை தெரிந்தது. நான் அதை நோக்கி பாய்ந்தேன். மேடைக்கு பின்னால் டீ மாஸ்டர் நிற்பதற்கான இடம் இருந்தது. மேலே ஒரு லைட் வெளிச்சம் பரப்ப, யாழினி பைக்கை, கடையின் படிக்கட்டுகளில் ஏற்றினாள். நான் மைக்ரோ விநாடியில் பைக்கில் தாவி ஏறி, யாழினியின் தோளை ஒரு கையால் பற்றிப் பிடித்துக் கொண்டு, சூட்கேஸை ஒரு வீசு வீசி அந்த பல்பை சிலீரென்று உடைத்தேன். குதித்தேன். டீ மாஸ்டர் நிற்கும் சிறிய இடைவெளியில் பைக்கை நிறுத்தினாள் யாழினி. இறங்கினாள். இருவரும் அந்த சந்தில் பதுங்கிக் கொள்ள, கார் தெருவில் நுழைந்து ஹெட் லைட் வெளிச்சத்தில் தெருவைப் பெருக்கிக் கொண்டே மெல்ல ஊர்ந்தது.



நாங்கள் மூச்சு விடாமல் இருந்தோம். கார், எங்களைக் கடந்து சென்றது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன். தெருவின் கோடியில் சென்று திரும்பியது கார்.



நான், "யாழினி! சீக்கிரம்!" என்றேன். அவள் டீக்கடை சந்திலிருந்து பைக்கை வெளியே எடுத்து உதைக்க, கோபத்துடன் சீறியது அது. நான் பின்னால் அமர்ந்து கொள்ள, படிக்கட்டுகளில் தடதடத்து இறங்கி, மெயின் ரோட்டில் திரும்பி, விடுபட்ட அம்பு போல் பறந்தது யமஹா!



"இப்ப எங்க போகலாம் குருவே? நேரா நம்ம ஆபீஸ் போயிடலாமா?"



"வேணாம்."



"உங்க வீட்டுக்கு?"



"எங்க போனாலும் அவன் காத்திருப்பான். நேரா ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு விடு. அங்க போய், இந்தக் கேமிராவுல என்ன இருக்குன்னு பார்த்துட்டு, போலீஸ் கிட்ட போகலாம்."



அத்தியாயம்-32

-----------------------



காலைச் சூரியன் பிரகாசமாக, ப்ரிலியண்டாக ஆரஞ்சு கண்ணைத் திறந்து, தினசரி வேலையாக பூமிக்கு எட்டு நிமிடங்களில் வெளிச்சம் அனுப்பினான். நேற்று இரவு சுந்தரி லாட்ஜில் ரூம் எடுத்து (ரிசப்ஷனில் இருந்தவன் யாழினியை பார்த்த பார்வையில் நிச்சயம் கலையுணர்ச்சி இல்லை), அந்த டிஜிட்டல் கேமராவில் சுமார் அரை மணி நேரம் ஓடுவதை முழுவதுமாகப் பார்த்து, வியந்து, யாழினியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, மீண்டும் சுந்தரி லாட்ஜ் வந்து…



காலையில் அலாரம் வைக்காமலேயே சீக்கிரம் எழுந்து, குளித்துவிட்டு, யாழினிக்கு போன் செய்தேன்.



"வாங்க குருவே! நான் ரெடியா இருக்கேன்." என்றாள்.



"வீட்ல எதுவும் சொல்லலையே?"



"ம்ம். கேள்வி கேட்டாங்க. ரெண்டு கேள்வி!"



"என்னன்னு?"



"ஒண்ணு, 'ஏன்டி ஃப்ரெண்டு கல்யாண ரிசப்ஷனுக்கு போறேன்; கல்யாணம் முடிஞ்சு காலையில்தான் வருவேன்னு சொன்னே; இப்படி நடு ராத்திரியில் வந்து நிக்கறியேன்னு கேட்டாங்க."



"ரெண்டாவது கேள்வி, உன்னை ட்ராப் பண்ணிட்டு போறானே அவன் யார்னு கேட்டாங்களா?"



"ம்ஹூம். இல்லை."



"வேற என்ன?"



"இன்னிக்கு வெள்ளிக்கிழமை ராத்திரி ரிசப்ஷன் வெச்சுட்டு மறுநாள் காலைல யாராவது கல்யாணம் பண்ணுவாங்களான்னு கேட்டாங்க!"



"ஏன், நைட்டு ரிசப்ஷன் வெச்சுட்டு, காலைல முகூர்த்தம் யாரும் வைக்கறதில்லையா?"



"வைக்கிறாங்க."



"பின்ன என்ன?"



"சனிக்கிழமை யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா? இனிமேல் பொய் சொல்றதா இருந்தா செவ்வாய் கிழமையா, சனிக்கிழமையான்னு பார்த்துட்டு பொய் சொல்லச் சொன்னாங்க."



"சரியாப் போச்சு! இப்ப எங்க இருக்கே?"



"வீட்டிலேயிருந்து கிளம்பி, பாரதியார் நகர் சர்க்கிள் இருக்கில்ல, அங்க பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றேன்."



"இதோ, ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்." என்று போனை வைத்ததும் அது மீண்டும் அடித்தது. அம்மா செய்கிறாள். 'ஏன்டா இப்பெல்லாம் தினம் ராத்திரில வீட்டுக்கு வர்றதில்லை?' என்று கேட்பாள்.



"என்னம்மா?"



"எங்கடா போயிட்டே ராத்திரி பூரா? இங்க ஒருத்தன் பாதி ராத்திரில வீட்டுக் கதவைத் தட்டி, உங்க பையன் எங்கன்னு கேக்கறான்? நீ யாருப்பான்னு கேட்டா, பதில் சொல்லாம வீடு பூரா தேடிட்டு, உம்பையன் வந்தா சொல்லி வை கிழவி, பெரிய இடத்துல மோதறான். வேணாம்னு சொல்லு. இல்லேன்னா காணாம போயிடுவான்னு மிரட்டிட்டுப் போறான். எனக்கு பயமா இருக்குடா."



அம்மாவின் குரலில் அழுகையும் கவலையும் இருந்தது. வந்தது யார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.



"அம்மா! ரொம்ப பயந்துட்டியா, என்ன? இப்படி சொதப்பிட்டியேம்மா! உன்னை எவ்வளவு தைரியசாலி தாய்; புலியை முறத்தால விரட்டி புறமுதுகிட்டு ஓடச் செய்த வீரப் பரம்பரைன்னு நினைச்சிட்டிருந்தேன். உன்னை நம்பி பந்தயம் கட்டினா அவ்வளவுதான் போ!"



"என்னடா சொல்ற? பந்தயமா?"



"ஆமாம்மா. நீ பயப்பட மாட்டேன்னு சொல்லி பந்தயம் கட்டி இருந்தேன். சரி, விடு. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. பார்த்துட்டு வர்றேன். நாளைக்கு உன் பையன் போட்டோ பேப்பர்ல கொட்டை எழுத்துல பாராட்டி வரும். அப்ப தெரியும் உன் பையனைப் பத்தி."



"என்னடா சொல்றே? பேப்பர்ல போட்டோவா?"



"பெரிய பாராட்டே கிடைக்கப் போகுது. வை, வர்றேன்." என்று இணைப்பைத் துண்டித்து, 'ராத்திரி நான் அகப்பட்டிருந்தால் கசாப்பு போட்டிருப்பானுங்க போல!' என்ற கோபம் யமஹாவில் சீற, புறப்பட்டு வந்து, யாழினியை ஏற்றிக் கொண்டு, ஒரு சௌகரியமான ஓட்டலில் டிபனுக்கு ஆர்டர் செய்து விட்டு, "நான் ராத்திரி லாட்ஜ்ல தங்கினது நல்லதா போச்சு!" என்றேன்.



"ஏன், என்னாச்சு?" என்றாள் யாழினி.



"ராத்திரி யாரோ ஒரு விலைக்குப் பிறவி எடுத்தவன் எங்க வீட்டுக்கு வந்து அம்மாவை மிரட்டிட்டு, வீடு பூராவும் தேடிட்டுப் போயிருக்கான்."



"அய்யோ!" என்றாள் யாழினி. "அப்புறம் என்னாச்சு?''



"காலையில் அம்மா போன் பண்ணிச் சொன்னாங்க. அது ஒரு விளையாட்டுக்குன்னு சொல்லி மழுப்பியிருக்கேன்."



சூடான இட்லியும், மெதுவடையும் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே, "அடுத்து என்ன பண்றது?" என்று கேட்டாள் யாழினி.



"மசாலா தோசைக்கு ஆர்டர் பண்ணலாம்."



யாழினி புதிதாய்க் குளித்திருந்து, அழகாக முறைத்தாள். "நான் அதை கேக்கலை!" என்று லேசாக லிப்ஸ்டிக் உதடுகளில் சாப்பிட்டு, மை அடித்த கயல் விழியைச் சிமிட்டினாள்.



"தெரியும். டிபன் சாப்பிட்டு, ஒரு வசதியான இடத்தில் உக்கார்ந்துக்கிட்டு, சுவாமிநாதனுக்கு போன் பண்ணலாம்."



"போன் பண்ணி?"



"ஒரு பதினாலு வருஷம் ஆபீசுக்கு லீவ் போட்ருங்க சுவாமின்னு சொல்லலாம்."



"பதினாலு வருஷம் லீவா?"



"ஆயுள் தண்டனை பதினாலு வருஷம்தானே?"



அது ஒரு சிறிய சிறுவர் பூங்கா. ஆடி முடித்த ஊஞ்சலும், சறுக்கித் தேய்ந்த வழுக்கு சிமெண்ட் சாய்வு தளமும், பார்த்து ரசித்த பூச்செடிகளும், அமர்ந்து இளைப்பாறிய சிமெண்ட் திண்ணைகளும் அநாதையாக விடப்பட்ட நேரத்தில் நாங்கள் நுழைந்து ஓரிடத்தில் அமர்ந்து, "ஹலோ! தங்கராஜ்! நான் சுவாமிநாதன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு." என்றேன்.



"யார் நீங்க?" என்றான் தங்கராஜ்.



"மாதவன்!"



"எந்த மாதவன்?"



"பணக்காரங்களுக்கு ஞாபக மறதி அதிகம் போல! மாஸ் மாதவன்! ப்ரா டிடெக்டிவ்! உடனே அவரைப் பார்க்கணும்!"



"சுவாமிநாதன் பிஸியா இருக்கார். இப்ப யாரையும் அவருக்கு பார்க்க நேரமில்லை."



"சரி, உங்க பாஸ் கிட்ட சொல்லிடுங்க. இது மாதிரி மாதவன் உங்க கிட்ட பேசப் பிரியப்பட்டார். நீங்க பிரியப்படாததால கமிஷனர் ஆபீசுக்கு போயிட்டார்னு சொல்லிடுங்க. அப்புறம் கமிஷனர் கூப்பிட்டு நீரஜா கேஸை துருவித் துருவி கேள்விக் கேட்கும் போது, 'என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே!' அப்படின்னு என்னைக் கேட்கக் கூடாது. வெச்சுடறேன்.''



என்று போனை அணைத்த சிறிது நேரத்தில், தங்கராஜே என்னைக் கூப்பிட்டான்.



'தட்ஸ் இட்!' "நான் கமிஷனர் ஆபீசுக்கு புறப்பட்டுட்டேன் தங்கராஜ்!"



"வெயிட்! எதைப் பத்தி பேசணும்னு கேக்கறார்?"



"அதான் சொன்னேனே, நீரஜா கொலை கேஸ்!"



"அதுபத்தி இன்னும் என்ன இருக்கு? விக்ரம் மேல எஃப்ஐஆர் பதிவாகி இருக்கு. அவன்தான் கொலையாளின்னு கோர்ட்ல கேஸ் நடக்கப் போகுது… கேஸ் முடிஞ்சு போச்சு!"



"கேஸ் இன்னும் முடியலை தங்கராஜ்!"



"எதை வெச்சு சொல்றீங்க?"



"நேத்து ராத்திரியில இருந்து டொயோட்டாவுல ஒருத்தனை அனுப்பி, என்னைக் கண்காணிக்கிறதுல இருந்தே இந்த கேஸ் இன்னும் முடிவுக்கு வரலைன்னு தெரியலையா?"



"என்ன உளர்றே? வாய் இருந்தா என்ன வேணா பேசுவியா? நான்சென்ஸ்!"



"மரியாதை முக்கியம் தங்கராஜ்! இந்தக் கேஸை தன்னோட மூளை பலத்தினால அவர் நினைக்கிற மாதிரி நடத்தி முடிச்சுடலாம்னு நினைச்சிட்டு இருக்கார். கூடவே, அளவுக்கு அதிகமான பணம் இருக்கிறதால எப்படி வேணும்னாலும் திசைதிருப்பலாம்னு நம்பறார். ஆனா, அது நடக்காது. நான் இந்த கேஸ்ல தீவிரமா இருக்கிறதைப் பார்த்து உங்க பாஸுக்கு பயம் வந்துடுச்சு! அதான் என்னைக் கண்காணிக்க ஆள் அனுப்பறது; என் வீட்டுக்குப் போய் நான் இல்லாத நேரத்தில் எங்க அம்மாவை மிரட்டறதுன்னு தப்பு தப்பா பண்ண ஆரம்பிச்சிருக்கார். என் கிட்ட ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் இருக்கு. நான் சுவாமியைப் பார்த்து பேசணும். அவ்வளவுதான். பேசலைன்னாலும் எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை."



"ஒரு நிமிஷம்." என்றான் தங்கராஜ்... ...கழித்து, "வரச் சொல்றார்."



"எங்க வரணும்?"



கரைந்த மௌன சொற்ப நிமிடங்களுக்குப் பிறகு, "மௌண்ட் ரோடு ஆபீசுக்கு!" என்றான்.



மௌண்ட் ரோட்டில் எல்ஐசி க்கு சற்று தள்ளி மூன்று மாடியில் நீரஜா ஸ்டீல்ஸ் லிப்டில் பயணித்து, சுவாமிநாதன் அலுவலகம் பரந்து விரிந்து, அகலமான டேபிளுக்கு பின்னால் நாற்காலி சுழலில் நெர்வஸாக எங்களைப் பார்த்து, "உக்காருங்க!" என்றான் சுவாமிநாதன். என்னையும் யாழினியையும் மாறி மாறி, யாழினியை மிக அழுத்தமாகப் பார்த்தான். பக்கத்தில் தங்கராஜ் கோத்ரெஜ் பீரோவுக்கு முன்பு நின்றிருந்தான். இரண்டு பக்கம் முழுவதும் பெரும் பெல்ஜிய கண்ணாடிகளில் சென்னை நகரம் மௌனமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்தோம்.



"சொல்லுங்க, மாதவன். என் கிட்ட என்ன பேசணும்?"



"நீரஜாவை ஏன் கொன்னீங்க?"



கேட்ட என்னை மிக அழுத்தமாகப் பார்த்தான் சுவாமிநாதன். தங்கராஜ் பதட்டமாய் ஏதாவது பேசலாமா என்று துடிப்பது தெரிந்தது.



"நீரஜாவை நான்தான் கொன்னேன்னு எப்படி சொல்றீங்க? முடிஞ்சு போன ஒரு கேஸை என் மேல திருப்பி விடறதுக்கு யார் கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க? இப்படி என் ஆபீசுக்கு வந்து, என்னையே மிரட்ற உங்க மேல ஏன் நான் கேஸ் போடக்கூடாது? தங்கராஜ்!" என்றான்.



"சார்!" என்று தங்கராஜ் தயாரானான்.



"போலீசை கூப்பிடுங்க!" என்றேன் நான். சுவாமிநாதன் என்னைப் பார்க்க, தங்கராஜ் என்னை முறைக்க, "கூப்பிடுங்க! எப்படி இருந்தாலும் கடைசியில் போலீஸ் வந்துதான் ஆகணும். கடைசியில் வர்றதுக்கு முதல்லேயே வரட்டும். நான் உங்களை மிரட்டலை. உண்மையை சொல்றதுக்கு பேர் மிரட்டல் இல்லை. இதை எல்லாம் நிரூபிக்க ஒரு சின்ன கதை சொல்றேன் கேக்கறீங்களா சுவாமிநாதன்? உங்களுக்கு டைம் இல்லைன்னா பரவாயில்லை; நான் அந்தக் கதையை போலீஸ்ல சொல்லிக்கிறேன். அவங்க கேக்கறதுக்கு ஆர்வமா இருப்பாங்க!"



"என்ன கதை?" வேண்டா வெறுப்பாக கேட்டான். இன்டர்காம் ஒலித்தது. எடுத்து, "என்ன?" என்றான். முகம் நிறமிழந்து காணப்பட்டது. "நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே அனுமதிக்காதே, ஷிவானி!" என்று விட்டு, என்னைப் பார்த்து, "சொல்லு என்ன கதை?" என்றான். நெற்றியில் பய வியர்வை!



"கல்யாணத்துக்கு முன்னாடி சுவாமிநாதன்கிறவர் இவ்வளவு பணக்காரர் கிடையாது."



"யார் சொன்னது உங்களுக்கு?"



"கதை சொன்னா கேட்டுக்கணும். சின்னக் குழந்தை மாதிரி குறுக்க கேள்வி கேட்கக் கூடாது." என்று நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு, 'அவனுக்கு என்ன வேணுமோ கொடுத்து அனுப்பு தங்கராஜ்!' என்று என்னை எடுத்தெறிந்து பேசியது நினைவுக்கு வர தொடர்ந்தேன்.



"அந்த சுவாமிநாதனின் திறமையைப் பார்த்து, நீரஜாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறார் நீரஜாவின் அப்பா! சுவாமிநாதனின் அப்பாவும் நீரஜாவின் அப்பாவும் சிறு வயது நண்பர்கள்! நீரஜாவை கல்யாணம் பண்ணிக்கிட்டதில் ஏக சொத்து, கம்பெனி, ஷாப்பிங் மால், லட்சத்தில் மாச வாடகை வருமானம்…"



சுவாமிநாதன் என்னையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.



"ஆனா, நீரஜாவுக்கு இந்தக் கல்யாணத்துல திருப்தி இல்லை. பல சந்தர்ப்பங்கள்ல நான் ஏன் சுவாமியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கே தெரியலைன்னு சொல்ல ஆரம்பிக்க, அது, சுவாமிக்கு ஒரு உறுத்தலாவே மனசுக்குள்ள முள் மாதிரி குத்திக்கிட்டு இருக்கு. அது மட்டும் இல்லாம படுக்கையறையில் சுவாமிநாதனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்; அவமானங்கள்; எல்லாம் சேர்ந்து நீரஜா மேல ஒரு வெறுப்பை உருவாக்க, அதை வெளியில காட்டிக்காம நீரஜாவை உயிருக்குயிரா காதலிக்கிற மாதிரி நடிக்கிறார்."



சுவாமிநாதன் லேசாக புன்னகை செய்தார். தங்கராஜ் கையைப் பிசைந்து கொண்டு, சுவாமியையும் என்னையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டு நின்றான். யாழினி மௌனமாக இருந்தாள். மௌனமாக இருந்தாள் என்றால், அவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவள் மௌனமாக செய்துக் கொண்டிருந்தாள்.



"இந்த சமயத்தில் விக்ரம் ஒரு பர்த் டே பார்ட்டியில நீரஜாவுக்கு அறிமுகம் ஆகிறான். நீரஜாவும் விக்ரமும் முதல்ல நண்பர்களாகத்தான் பழகறாங்க. அவங்களுக்குள்ள எந்த விதமான - காதல் போன்ற சமாச்சாரங்கள் - அப்போதைக்கு இல்லை. அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள்! அவ்வளவுதான்! இந்த விஷயம் சுவாமிநாதனுக்கு தெரிய வர, அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் ஒரு விதமான நாடகம்! மூளையைப் பயன்படுத்தி, சுவாமிநாதன், விக்ரம், நீரஜா, டிடெக்டிவ் மாதவன், ரகுநாதன், சுவாமிநாதன் பேக்டரியில கிரேன் விழுந்து செத்துப் போன எத்திராஜ்... இப்படி எல்லாரையும் கதாபாத்திரமா மாத்தி மிகத் திறமையா எழுதப்பட்ட நாடகம்!"



"நாடகமா? வெரி இன்ட்ரஸ்ட்டிங்! நீ டிடெக்டிவ்வா இருக்கிறதுக்கு பதிலா நல்ல கதாசிரியனா போயிருக்கலாம். அவ்வளவு கற்பனை பண்ணி, கதை சொல்ற! மேலே சொல்லு!" என்று உதிர்ந்த மகிழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக வெற்றுப் புன்னகையை உதிர்த்தான்.



"நாடகமா, உண்மையான்னு கடைசியில சுவாமிநாதன்தான் பதில் சொல்லணும்; சொல்வார்!" என்றேன்.



சுவாமிநாதன் டேபிளின் மீது மூடி போட்டு வைக்கப்பட்ட தண்ணீர் டம்ளரை எடுத்துக் குடித்தான். குரலைக் கனைத்துக் கொண்டு, "அப்புறம்?" என்றான். என்னை, இயலாமையால் தன்னிடம் மாட்டிக் கொண்ட ஒரு மருண்ட மானைக் கடித்துக் குதறும் ஒரு சிங்கத்தின் பார்வையுடன் பார்த்தான். தங்கராஜின் பார்வையில் அதை விட மோசமான குரோதம் இருந்தது. அதை நான் புன்னகைத்து ரசித்ததை அவர்கள் இருவரும் ரசிக்கவில்லை என்று தெரிந்தது.



"பெட்ரூமில் சுவாமிக்கு ஏற்பட்ட அவமானங்களை விட, அதை நீரஜா குத்திக் காட்டியதில் சுவாமிக்கு கொலை வெறி ஆதிகமாயிடுச்சு. நீரஜாவை கொலை செஞ்சா மட்டுமே தன்னோட வெறி அடங்கும்ங்கிற அளவுக்கு போயிட்டார். நீரஜாவை கொலையும் செய்யணும்; ஆனா, போலீஸ் கிட்ட மாட்டிக்கவும் கூடாது. என்ன செய்யலாம்னு யோசிச்சார். பிஸினஸ்ல தன்னுடைய திறமையை, மூளையை உபயோகிச்ச சுவாமிக்கு இது ஒரு சவாலான விஷயமா இருந்தது. பிரமாதமான ஒரு திட்டம் தீட்டினார். அந்த திட்டத்துக்கு யாரைப் பயன்படுத்தலாம்னு யோசிச்சப்போ, சுவாமியோட வலையில ஒருத்தன் வசமா சிக்கிக்கிட்டான். அவன் யார் தெரியுமா சுவாமிநாதன்?"



கேட்டு விட்டு நான் சுவாமிநாதனை பார்த்தேன். அவன் முகம் வியர்த்திருந்தது. "யார்?" என்றான்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 31
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.