ஒரு ரகசிய குற்றம் 28

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
யாழனி எனக்கு போன் செய்தாள். யாழினி பற்றி நான் உங்களிடம் இதுவரை சொல்லவேயில்லை அல்லவா? அதற்கு காரணம், அவள் இதுவரை எனக்குத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்ததுதான். அதுமட்டுமின்றி, வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று இரவுதான் அவள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினாள். நீரஜா கொலை வழக்கில் எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து சில உத்தரவுகளை அவளுக்குக் கொடுத்திருந்தேன்.



"மாதவன், நான் யாழினி!"



"சொல்லு. தெரியுது."



"நீங்கள் சொன்னபடி காலையில் இருந்து உங்களை நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்."



"சரி!"



"நான் உங்களை ஃபாலோ பண்றது உங்களுக்கே தெரியக்கூடாதுன்னு சொன்னீங்க இல்லையா?"



"ஆமாம்."



"உங்களுக்கே தெரியாமதான் உங்களை ஃபாலோ பண்றேன்."



"சரி, அப்புறம்?"



"உங்களை யாராவது ஃபாலோ பண்றாங்களான்னு கவனிக்கச் சொன்னீங்க! நீங்க சந்தேகப்பட்டு சொன்ன மாதிரி உங்களை ஒருத்தன் ஃபாலோ பண்ணினான்!"



"எப்படி கண்டுபிடிச்சே?"



"சிம்பிள்! நான் உங்களை ஃபாலோ பண்றதுக்காக உங்க வீட்டுக்கு வர்ற வழியில, தெரு முனையில் இருக்கிற டீக்கடையில் நின்னுகிட்டு இருக்கும் போது, அவனும் அங்கதான் நின்னுகிட்டு, டீக்குடிச்சுக்கிட்டு இருந்தான். காலைல நீ பைக்ல போனதும் உன்னை அவன் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சான். நான் என் ஸ்கூட்டியில அவனை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்."



"வெரிகுட்! அப்புறம்?"



"நீ உன் ஆபீசுக்கு வந்ததும் அவனும் உன்னை பின்தொடர்ந்து வந்தான். நீ ஆபீசுக்கு உள்ளே போனதும், அவன் கிளம்பினான். நான் அவன் பின்னாலேயே போனேன்."



"நீ இப்போ எங்கேயிருந்து பேசறே?"



"நுங்கம்பாக்கத்துல ஏதோ ஒரு வீடு. வீடுன்னு சொல்ல முடியாது. பெரிய பங்களா! 'நீரஜா மாளிகை'ன்னு…"



நான் அவள் சொல்லி முடிப்பதற்குள், "என்ன சொன்னே? நீரஜா மாளிகையா?" என்றேன்.



"ஆமாம்."



"நல்லா தெரியுமா?"



"பளபளன்னு தங்க எழுத்துல மெட்டாலிக் போர்டு இருக்கு - 'நீரஜா மாளிகை' ன்னு!"



"சரி, நீ திரும்பி வந்துடு. வஸந்த் சொன்னது சரியாத்தான் போச்சு!"



"திரும்பி எங்க வரட்டும்? உள்ளே போய் அவங்க என்ன பேசறாங்கன்னு தெரிஞ்சுட்டு வரட்டுமா?"



"அதெல்லாம் வேணாம், யாழினி. ரொம்ப டேஞ்சர்! நீ என் ஆபிசுக்குத் திரும்பி வா!"



"சரி! வஸந்த் யார்?" என்றாள் யாழினி.



"அவர் ஒரு ஜீனியஸ்!"



அரை மணி நேரத்தில் யாழினி என் ஆபீசில் இருந்தாள்.



"சொல்லு, என்னை ஃபாலோ பண்ணவன் எப்படி இருந்தான்?"



யாழினியை எந்த நடிகையுடனும் ஒப்பிட முடியாது. வேண்டுமானால், யாழினி மாதிரி நயன்தாரா இருந்தாள் என்று சொல்லலாம்.



"உனக்கு எதுக்கு சிரமம். செல்போன்ல போட்டோ எடுத்திருக்கேன், நீயே பார்த்துக்க!"



நான் அவளை வியந்து பார்ப்பதற்குள் - நெற்றியில் புரண்ட சில சுருள் முடிகள் யாழினியின் செழிப்பான கன்னத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தன - மூன்று போட்டோக்களைக் காட்டினாள்.



போட்டோக்களைப் பார்த்ததும் நான் விசிலடித்தேன்.



"அவனேதான்!" என்றேன்.



"எவனேதான்?" என்றாள் யாழினி.



"உனக்கு சொன்னா புரியாது! நான் ஒரு விஷயம் சொல்றேன். அது மாதிரி செய்! மறுபடியும் இவனை நீ போய் சந்திக்கணும் யாழினி!"



"சந்திச்சு?"



"என்னுடைய கணிப்பு சரியா இருந்தா நாம குற்றவாளியை நெருங்கிடலாம்."



"சரி, நான் என்ன செய்யணும்னு சொல்லு."



"உனக்கு ஒண்ணும் பயம் இல்லை, இல்லை?"



"பயமா? எனக்கா?" மோகனமாகச் சிரித்தாள். "இதைப் பார்!"



மேலும் சில படங்களைக் காட்டினாள்.



சுவாமிநாதனும் இன்னொருவனும் ஒரு சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.



"ஏய்! என்ன இது?" நான் உற்சாகக் கூச்சலிட்டேன்.



"நீரஜா மாளிகை! நான் ஃபாலோ பண்ணி போனவன் உள்ள போய் இவன் கூடத்தான் பேசிட்டிருந்தான்." என்று சுவாமிநாதனை காட்டினாள்.



"வீட்டுக்கு உள்ளே போனியா?"



"காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் ஜன்னல் வழியா செல்போன்ல எடுத்தேன்."



"ரொம்ப துணிச்சல்தான் உனக்கு!"



"இது எதுக்காகவாவது உனக்கு உபயோகப்படுதா?"



"உபயோகப்படுதாவா? வீட்டுக்குள்ள எப்படி போகணும்னு நினைக்கிறவனுக்கு வீட்டோட அமைப்பைத் தெரிஞ்சுக்கிறதுக்கு இந்த போட்டோ உதவும். என் செல்லுக்கு அனுப்பி விடு!"



"சரி, அனுப்பி விடறேன்."



என் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது - அவள் அனுப்பிய புகைப்படங்கள்.



"சரி, கிளம்பட்டுமா?"



"இரு. அவன் இப்போ எங்க இருப்பான்னு தெரியணுமே! இந்நேரம் அவன் அந்த வீட்டை விட்டு கிளம்பிப் போயிருப்பான்! அவன் போகக் கூடிய இடம்னு பார்த்தா, ஒண்ணு, மவுண்ட் ரோட்டில் நீரஜா ஸ்டீல்ஸ் ஆபீசுக்கு போயிருக்கணும். அப்புறம், சுவாமிநாதனுக்கு நிறைய பிஸினஸ் இடம் இருக்கு. அத்தனையும் தெரியலை.. இரு, அலெக்ஸை கேட்கலாம்." என்று நான் அலெக்ஸுக்கு முயற்சி செய்ய, யாழினி தடுத்தாள்.



"அதுக்கு அவசியமே இல்லை, மாதவன்!"



"நீ என்ன சொல்ற, யாழினி?"



"அதோ பார், அவனே மறுபடியும் உன்னைத் தேடி வர்றான்." ஜன்னலில் காட்டினாள்.



ஆச்சரியமாக ஜன்னலில் பார்த்து விட்டு, "இவன் எதுக்கு என்னைத் தேடி வரணும்? என்னைத் தொடர்ந்து கண்காணிக்கச் சொல்லி அவனுக்கு உத்தரவு போலிருக்கு!" என்றேன்.



நான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால், வஸந்த் இதை எதிர்பார்த்தார் போலிருக்கிறது. சுவாமிநாதனை நான், 'ட்ரீம் ஏஞ்சல்' ரெஸார்டில் போய் சந்தித்துப் பேசிவிட்டு வந்த பிறகு, 'ஏன் நீங்களே உங்க மனைவி நீரஜாவை கொலை செய்திருக்கக் கூடாது?' என்ற கேள்விக்கு ஒரு கணம் சுவாமிநாதனின் கண்களில் பயத்தைப் பார்த்தேன்; அதன் பிறகு, நான் சுவாமிநாதனால் கண்காணிக்கப்படலாம் என்று யூகித்திருக்க வேண்டும்.



எதற்கு என்னைக் கண்காணிக்க வேண்டும்? நீரஜா கேஸில் நான் எந்தளவு தீவிரமாக இறங்குகிறேன் என்று சுவாமிநாதனுக்கு தெரிய வேண்டும். அதற்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்திருக்கிறான். இவன் ஒருவன்தானா, இல்லை, இவனைப் போல் இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா? தெரியவில்லை.



"சரி, யாழினி! இப்ப நீ, இந்த ஆபீஸ்ல இருந்து வெளியே போற மாதிரி அவனுக்குத் தெரியக் கூடாது. பின்பக்கமாய் போய், நான் சொன்னதை மட்டும் அவன்கிட்ட விசாரிச்சுட்டு வந்துடு!"



நான் சொன்னதும் யாழினி என் அலுவலகத்திற்கு பின்புறம் - அதை பெரும்பாலும் உபயோகப்படுத்துவது இல்லை; நிறைய குப்பைகளாக இருந்தது - அதன் மீது நடந்துச் சென்றாள்.



நான் காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் அலெக்ஸுக்கு போன் செய்தேன்.



"என்னடா, ஏதாவது தகவல் சேகரிச்சியா? ஏதாவது புது ஐடியா கிடைச்சுதா?" அலெக்ஸ் கேட்டான்.



"கிடைச்சிருக்கு அலெக்ஸ். சுவாமிநாதன் மேல் சந்தேகம் அதிகமாகிற விஷயம் இருக்கு."



"என்ன விஷயம்?"



"நான் சுவாமிநாதனை எலியட்ஸ் பீச் ரிசார்ட்டில் போய் பேசிவிட்டு வந்த பிறகு, காலையில் இருந்து என்னை ஒரு ஆள் கண்காணிக்க ஆரம்பிச்சிருக்கான்."



"ஓ.. அப்படியா? யார் அவன்? அவனை உனக்கு அடையாளம் தெரியுதா?"



"சுவாமிநாதன் கிட்ட வேலை செய்யறவன். அதே சமயம், எத்திராஜ் போன் நெம்பரில் இருந்து நீரஜாவுக்கு எச்சரிக்கை மெசேஜ் செய்தவனும் அவன்தான்!"



"எப்படி சொல்றே?"



"அவன் பேசற தமிழ் மொழி, கோயம்புத்தூர், திருநெல்வேலி பக்கம் பேசற வட்டார வழக்கு மொழி! நீரஜா அவன் கிட்ட பேசியிருக்கா."



"இது முரண்பாடா இல்லையா மாதவன்?"



"எது முரண்பாடா இல்லையான்னு கேக்கறே?"



"சுவாமிநாதன்தான் நீரஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி, அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டு, மும்பை போயிருக்கணும்னு அவன் மேல சந்தேகம் இருக்கு, இல்லையா? சுதர்சனமும் இந்த கோணத்தில் விசாரிச்சார். ஆனா, அவருக்கு சரியான ஆதாரம் கிடைக்கலை. இப்போ, சுவாமிநாதன் கிட்ட வேலை செய்யற ஆளே நீரஜாவுக்கு எச்சரிக்கை செய்து மெசேஜ் அனுப்பியிருக்கலாம்னு சொல்றது எப்படி? பொருந்தலையே?"



"இது எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு. ஒரு பக்கம் பிளாக்மெயில்; இன்னொரு பக்கம் எச்சரிக்கை; இன்னொரு பக்கம் நீரஜா கொலை; அந்தக் கொலையை விக்ரம் பேர்ல திருப்பி விடறது... ஒண்ணும் புரியலை அலெக்ஸ்! ஆனா, ஏதோ ஒரு நுனியைப் பிடிச்சிக்கிட்டு போகலாமேன்னு போய்கிட்டு இருக்கேன்."



"நடுவுல வஸந்த் வேற விக்ரமுக்காக ஆஜராகிறார்னா… "



"இல்லை, அலெக்ஸ்! இந்த கேஸை எடுத்துக்கிறதா வேண்டாமான்னு அவங்க இன்னும் தீர்மானிக்கவே இல்லை."



"ஏன்?"



"கணேஷ் ஊர்ல இல்லை. டில்லி போயிருக்கார். அவர் திரும்பி வந்த பிறகுதான் தெரியும். அலெக்ஸ் எனக்கு இன்னொரு உதவி நீ செய்யணுமே?"



"செய்யக்கூடிய உதவியா இருந்தா செய்யறேன், சொல்லு."



"நீரஜா கொலையான, 'ட்ரீம் லேண்ட்' ஓட்டல்ல அந்த சிசிடிவி கேமரா புட்டேஜை மறுபடியும் ஒரு முறை பார்க்கணுமே! நீ நினைச்சா அதை மறுபடியும் போட்டுக் காட்டச் சொல்லலாம்."



"சரி, நான் ஓட்டலுக்கு போன் பண்ணி விசாரிச்சுட்டு உனக்குத் தகவல் சொல்றேன்."



அலெக்ஸின் இணைப்பைத் துண்டித்து விட்டு, வெளியே வந்து சிறிய பால்கனியில் நின்று தெருவை நோட்டம் விட்டேன். யாரையும் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் உள்ளே வந்த போது, யாழினி மீண்டும் பின்பக்க வழியாக உள்ளே வந்தாள்.



"என்ன யாழினி?"



அவள் ஒரு துண்டுச் சீட்டை என்னிடம் அலட்சியமாக நீட்டினாள். பிளந்த கோவைப்பழ அதரங்களில் வெற்றிச் சிரிப்பு மினுங்கியது. சீட்டை வாங்கிப் பார்த்தேன்.



அருள்ராஜ்! 6383---- என்று ஒரு போன் நெம்பர்!



"வெரிகுட்! வெரிகுட்!" என்று அவளை மகிழ்ச்சி பொங்க பார்த்தேன். "எப்படி வாங்கினே?"



"உன்னை ஃபாலோ பண்ணவன் முன்னாடி போய் நின்னேன். அவன் பெயர் ரகுநாதன்."



"ஓ… அப்படியா?"



"ஸார், வணக்கம் ஸார்!' ன்னேன். அவன் என்னை சந்தேகமாய்ப் பார்த்தான். 'உங்களை இங்க நான் சந்திப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை, ஸார்!'ன்னேன்."



"என்ன?' ன்னான்.



"எலியட்ஸ் பீச் ரோட்ல 'ட்ரீம் ஏஞ்சல்' ரிசார்ட் முன்னாடி நீங்க ஒரு பையன் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டப்பவே உங்களைக் கேக்கணும்னு வந்தேன். நீங்க அதுக்குள்ள அவசரமா கார்ல ஏறிப் போயிட்டீங்க" ன்னேன்.



"என்ன பேசிட்டிருந்தேன்? யாருகிட்ட பேசிட்டிருந்தேன்? புரியலை." ன்னான்.



"ஒரு பையன் கிட்ட, போன் வேணாம்னு பேசிட்டிருந்தீங்களே ஸார்!'ன்னு ஞாபகப்படுத்தினேன்."



"அதுக்கு என்ன?" ன்னான்.



"அவசரமா எனக்கு ஒரு பழைய போன் தேவைப்படுது ஸார்! அந்தப் பையன் நெம்பர் கொடுத்தீங்கன்னா நான் விசாரிச்சுக்கிறேன். ப்ளீஸ்! ப்ளீஸ் ப்ளீஸ்!"ன்னேன். அந்தப் பையன் போன் நெம்பர் கொடுத்துட்டான்."



"செம்ம கில்லாடிதான் நீ!" என்றேன்.



"இவ்வளவு இன்ட்ரஸ்ட் இருந்தும் இவ்வளவு நாள் நீ என்னை உன் கூட சேர்த்துக்கவே இல்லை!"



"இது கொஞ்சம் ஆபத்தான வேலைன்னுதான் வேணாம்னு நினைச்சேன். அதில்லாம உங்க அப்பா அம்மாவும் கூட இந்த டிடெக்டிவ் வேலை வேணாம்னு சொன்னதாலதானே நீயும் என்னை மாதிரி ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி திறக்கிற முயற்சியைக் கை விட்டுட்டே!"



"ஆமாம். அவங்க கொஞ்சம் சப்போர்ட் பண்ணியிருந்தா, நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சிருப்பேன். நீரஜா கேஸ் என்கிட்ட தான் வந்திருக்கும். நீரஜா கேஸை நான்தான் விசாரிச்சிருப்பேன்." என்றாள்.



நான் சிரித்துக் கொண்டேன்.



"சரி, இந்த ரகுநாதன், சுவாமி கிட்ட என்னவா வேலை செய்யறான்னு கேட்டியா?" என்றேன்.



"கேட்டுட்டேன். டிரைவரா இருக்கான்."



"சரி, இந்த நெம்பருக்கு போன் பண்ணி நீயே அந்தப் பையன் கிட்ட பேசு!"



"என்னன்னு?"



"நீ டிடெக்டிவ்வா இருந்தா என்ன பேசுவே? எப்படி பேசுவே? அது மாதிரி பேசு!"



யாழினி சற்றும் தயங்காமல் அந்த சீட்டில் உள்ள செல்போனை தொடர்பு கொண்டாள். அழைப்பு ஏற்கப்பட்டதும், "அருள்ராஜ், எப்படி இருக்கே? நல்லா இருக்கியா? என்னைத் தெரியலையா? உன் மரமண்டை! நான் யாருன்னு உனக்குத் தெரியும். கண்டுபிடிச்சுக்கோ! சரி, எனக்கு உன் கிட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணும். என்னவா? நேத்து ஒருத்தர் கூட நீ பேசிட்டிருந்தியே, ரகுநாதன்னிட்டு.. போன் வேணுமான்னு நீ கேட்டதுக்கு திருநெல்வேலி பாஷையில் உன்னைத் திட்டிட்டிருந்தாரே.. அவரேதான்! அவருக்கு நீ ஒரு போன் வித்தியா? எவ்வளவுக்குன்னு வித்தே? எவ்வளவு நாளாச்சு வித்து? சரி! சரி! வெச்சடறேன்." என்று பேசிவிட்டு வைத்தாள்.



"என்னவாம்?" என்றேன்.



"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு போன் வித்திருக்கான். திருட்டுப் போன்! ஏமாந்தவங்க கிட்ட திருடி, வந்த விலைக்கு விக்கிறது அருள்ராஜோட தொழில்!"



நான் யோசித்தேன். இது போல்தான் விக்ரம் புது சிம்கார்டு வாங்கிய போது, அவன் போன் திருடு போயிற்று. திருடியவன் அருள்ராஜ் என்கிறவன். திருடப்பட்ட போனை வாங்கியவன், ரகுநாதன். ரகுநாதன் சுவாமிநாதனிடம் டிரைவராய் வேலை செய்கிறான். சுவாமிநாதன் விக்ரமை கொலைகாரனாக சித்தரிக்க முயல்கிறான். அவனிடம் வேலை செய்யும் டிரைவர், நீரஜாவுக்கு எச்சரிக்கை செய்து அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்!



என்ன குழப்பம் இது! எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எல்லா முடிச்சுகளையும், சிக்கல்களையும் அவிழ்ப்பது?



அதே நேரம் அலெக்ஸ் போன் செய்தான்.



"என்ன அலெக்ஸ்?"



"இப்ப வர்றீயா, மாதவன்? ட்ரீம் லேண்ட் மேனேஜர் கிட்ட பேசிட்டேன். கேஸுக்குத் தேவைங்கிறதால இன்னொரு முறை சிசிடிவி பதிவை பார்க்கணும்னு சொல்லி இருக்கேன். வர்றீயா?"



"ஓகே அலெக்ஸ்! நேரா ஓட்டலுக்கு வந்துடறேன்."



போனை வைத்துவிட்டு, "யாழினி! நீ இப்போ மறுபடியும் பின்பக்கமா வெளியே போய் நில்லு. நான் எக்மோர் ட்ரீம் லேண்ட் ஓட்டலுக்கு கிளம்பிப் போறேன். அந்த ரகுநாதன் என்னை ஃபாலோ பண்ணுவான்.‌ நீ அவனை ஃபாலோ பண்ணு! எந்த காரணத்தைக் கொண்டும் நீ அவனைப் பின்தொடர்ந்து போறது தெரியக் கூடாது! ஓகேவா?" என்று யாழினி பின்புறம் வெளியே சென்றதும் கதைவைப் பூட்டிக்கொண்டு, மாடிப்படி இறங்கி, சுவரோரம் இருந்த யமஹாவை எடுத்துக் கொண்டு விரைந்தேன்.



கொஞ்சம் தள்ளி இடைவெளி விட்டு, ரகுநாதன் என்னைப் பின் தொடர்ந்தான்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 28
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.