ஒரு ரகசிய குற்றம் 27

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
தூக்கத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் தூக்கம் வந்தது. அந்தத் தூக்கத்தில் வந்த கனவில் நான் தண்ணீருக்கு அடியில் விழுந்து கிடந்தேன். லேசாக தலைமுடி அசைந்தது. ஏதேதோ தண்ணீர் ஜீவன்கள் பாசிகள் போலவும், சிறு சிறு கொடிகள் போலவும் எனக்கு அருகில் அசைந்து கொண்டிருந்தன. மீன்கள் செதிலை விரித்து சுவாசித்தபடி, சிறிய பின்பக்க துடுப்பை அசைத்தபடி என் முகத்தை முகர்ந்து விட்டுச் சென்றன. நான் கண்கள் மூடி மிகவும் ஆழமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தேன்.‌ தண்ணீருக்கு அடியில் எப்படி சுவாசிக்க முடிகிறது என்று எனக்கு சந்தேகம் தோன்றவில்லை. நன்றாக சுவாசித்துக் கொண்டிருந்தேன். யாரோ தண்ணீருக்கு மேலே இருந்து, பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சினிமா படத்தின் ஸ்லோமோஷன் காட்சிகள் போல் வார்த்தைகள் என்னை மெது மெதுவாக வந்தடைந்தன.



"ஏஏஏலேஏஏஏ..ஒஒஒனனனக்குஉஉஉ…எஎத்தஅன தடஅவம்லஅ சொஒஒல்ல்றதுஉஉஉ…போஒன்ன்ன் வேஏஏனாஆஆம்ம்னுஉஉட்டுஉஉ?"



அலை அலையாக தண்ணீருக்குள் அமுங்கி வந்த வார்த்தைகள் என் மூளையைத் தாக்கியது.



நான் விழித்துக் கொண்டேன். பொழுது விடிந்து, வானக்கூரையின் பொத்தல் வழியாகச் சூரியன் பூமியில் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.



கோயம்புத்தூர் வட்டார வழக்கு மொழியும் திருநெல்வேலி மொழியும் கலந்து, டிரைவர் போனில் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக என்னைப் பாதித்தது.



'ஏலே! ஒனக்கு எத்தன தடவம்ல சொல்றது, போன் வேணாம்னுட்டு?'



எனக்கு ஏதோ ஒன்று புரிந்தது. நான் எழுந்து முகம் கழுவி, அம்மா கொடுத்த காப்பியை குடித்து விட்டு, யோசித்தேன்.



எல்லாமும் எங்கெங்கோ துண்டு துண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இதை எல்லாவற்றையும் எப்படி ஒன்றிணைப்பது? 'ட்ரீம் ஏஞ்சல்' ரெஸார்ட் முன்பு யாரோ ஒரு டிரைவர் பேசிய கொங்கு வட்டார மொழியும், நீரஜா என்னிடம் சொன்ன - நீரஜாவை எச்சரிக்கை செய்தவன் பேசிய - தமிழும் எப்படி ஒன்றிணையும்? நீரஜா அவனிடம் பேசியதை ரெக்கார்ட் செய்திருந்தால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க தோதாக இருந்திருக்கும். இப்போது, நீரஜா சொன்னதை வைத்து சரிபார்க்க முடியாது.



நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அலெக்ஸ் போன் செய்தான்.



"சொல்லு அலெக்ஸ்!"



"விக்ரம் மேல போட்டிருக்கிற எஃப்ஐஆர் பத்தி நீ கேட்டே இல்லை?"



"ஆமாம்."



"நீரஜாவை பிளாக்மெயில் பண்ணி, திட்டம் போட்டு அவளை ஓட்டல் அறைக்கு வரவழைத்து கொலை செய்ததாத்தான் எஃப்ஐஆர் பதிவாகியிருக்கு."



"அது, நான் எதிர்பார்த்ததுதான் அலெக்ஸ்! வேற என்ன?"



"அதுக்கு வலு சேர்க்கிற மாதிரிதான் இன்வெஸ்டிகேட்டிங் ரிப்போர்ட்டும் இருக்கு. சாட்சி சொன்ன எல்லாருடைய வாக்குமூலமும் ப்ராப்பரா சுதர்சனம் பதிவு பண்ணியிருக்கார்!"



"யார் யாரையெல்லாம் விசாரிச்சிருக்காங்க?"



"முதல்ல உன்னோட வாக்குமூலம் பிரதானமா இருக்கு. அடுத்து, ஓட்டல்ல வேலை செய்யற, அன்றைக்கு வேலை செய்த எல்லாரோட வாக்குமூலமும் பதிவு செய்திருக்கார்!"



"ஓட்டல்ல சாட்சி சொன்னவங்கள்ல எலெக்ட்ரீஷியன் சந்திரனின் வாக்குமூலம்…"



"பதிவு பண்ணியிருக்காங்க!"



"எனக்கு சந்திரன் மேல கொஞ்சம் டவுட் இருக்கு அலெக்ஸ்!"



"என்ன டவுட்?"



"கொலை நடந்த பிறகு - குறிப்பிட்ட ஒரு பத்து, பதினொரு நிமிஷம் சிசிடிவி கேமரா ஒர்க் ஆகலை! அது ஏன் திட்டமிட்டு செயலிழக்கச் செய்திருக்கக் கூடாது?"



"நீ நினைக்கிற கோணத்துல சுதர்சனமும் யோசிச்சிருக்கார். அன்னிக்கு லீவ் போட்ட விநாயகம் பத்தி தேடிப்பிடித்து, 'நீ ஏன் அன்னைக்கு லீவ் போட்டே? என்ன காரணம்?'னு விசாரிச்சிருக்காங்க!"



"விநாயகம் என்ன சொன்னான்?"



"அடுத்த வாரத்தில் சந்திரன் வீட்ல ஏதோ விசேஷம் இருக்காம்; அதுக்கு, குறிப்பிட்ட அன்னைக்கு எனக்கு லீவ் தரமாட்டாங்க; அதனால, நான், இன்றும் நாளையும் உனக்குப் பதிலா வேலை செய்யறேன். அடுத்த வாரத்தில் எனக்குத் தேவையான நாள்ல லீவ் எடுத்துக்கிறேன்'னு சொல்லி, விநாயகத்துக்கு பதிலா கொலை நடந்த அன்னிக்கு சந்திரன் வேலையில் இருந்திருக்கான்!"



"சந்திரன் வீட்ல அடுத்த வாரம் நடக்கிற விசேஷம் உண்மைதானான்னு விசாரிச்சாங்களா?"



"அது தெரியலை! அவனுக்கு பதில் இவன்; இவனுக்கு பதில் அவன்னு மாத்தி மாத்தி லீவ் எடுத்துக்கிறது சகஜம்ங்கிறதால விசாரிக்காம விட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்."



"சந்திரனை கொஞ்சம் கடுமையா விசாரிச்சா உண்மையைச் சொல்வான் இல்லை?"



"ஸ்ட்ராங்கான்னா எப்படி? தேர்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்ங்கிறியா?"



"ஆமாம். நடந்திருக்கிறது ஒரு கொலை. கேமிரா சரியா ஒர்க் ஆகியிருந்தா கொலைகாரனோட முகம் தெரிஞ்சிருக்கும். இதை யாரோ ஒருவர் பணம் கொடுத்து அவனை செய்ய வெச்சிருக்கலாம் இல்லையா? குறிப்பிட்ட அந்த பத்து நிமிஷத்துக்கு கேமிரா வேலை செய்யாம இருக்கிற மாதிரி செய்திருக்கலாம் இல்லையா?"



"நீ சொல்ற எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கு. ஆனா, இந்த கேமிரா ஒர்க் ஆகாம போன அதே நேரத்தில், அதே ஓட்டல்ல இன்னொரு கேமிராவும் வேலை செய்யலை. இது மாதிரி அப்பப்போ நடக்கிறதுதான்னு சொல்றாங்க. சந்திரன் சொல்றதை சுதர்சனம் அப்படியே முழுசா நம்பவும் இல்லை. அவனை பல விதத்தில் கேள்விகள் கேட்டு பதிவு செய்திருக்கார். சந்திரனுக்கும் வேற யாராவது ஒருத்தருக்கும் தொடர்பு இருக்கான்னு ஒரு கான்ஸ்டபிளை போட்டு கண்காணிக்க வெச்சிருக்கார். பலன் பூஜ்ஜியம்தான்!"



"அடுத்து, நீரஜாவை எச்சரிக்கை செய்யறதுக்கு பயன்படுத்திய போன் நெம்பர் பத்தி?"



"செத்துப் போன எத்திராஜ் போன்ல இருந்து மெசேஜ் பண்ணதுதானே கேக்கறே?"



"ஆமாம் அலெக்ஸ்! நான் அந்த எத்திராஜோட மகன், அவன் பேர் மறந்துப் போச்சு; அவர் மகன் கிட்ட பேசினேன். அந்தப் போன் இப்போ யார் கிட்ட இருக்கு? யார் அதை தற்சமயம் யூஸ் பண்றாங்கன்னு விசாரிச்சாங்களா?"



"விசாரிச்சிருக்காங்க; அது பத்தி சொன்னா நீ ஆச்சர்யப்படுவே!"



"எங்க, ஆச்சர்யப்படுத்து பார்க்கலாம்."



"எத்திராஜ் வேலை செய்தது யாரோட ஃபேக்டரியில தெரியுமா?"



"யாரோட ஃபேக்டரி?"



"சுவாமிநாதனோட 'நீரஜா ஸ்டீல்ஸ்!"



நான் உண்மையில் அதிர்ந்தேன்.



"அலெக்ஸ், நீ என்ன சொல்ற?"



"உண்மைதான் மாதவன். சுவாமிநாதன் ஃபேக்டரியில வேலை செய்யும் போதுதான், அவன் மேல கிரேன் விழுந்து செத்துப் போனான். அவனுடைய மகன்தான் குணசேகரன்."



"ஆமாம். அவன் பேர் இப்ப ஞாபகத்துக்கு வந்துடுச்சு. குணசேகரன்! கருணை அடிப்படையில அதே ஃபேக்டரியில மகனுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க! அந்த எத்திராஜோட செல்போனை இப்போ யார் யூஸ் பண்றாங்கன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா?"



"இன்னும் இல்லை. ஆனா, தீவிரமா விசாரிச்சாங்க! இப்போ, அதே தீவிரமா விசாரிப்பாங்களான்னு தெரியலை!"



"ஏன் விசாரிக்க மாட்டாங்க?"



"அதை சொன்னா நீ இன்னும் ஷாக் ஆயிடுவே?"



"என்ன அலெக்ஸ், புதுசு புதுசா அதிர்ச்சியான தகவல்களே தந்துகிட்டு இருக்கே!"



"ஆமாம் மாதவன்! இந்த கேஸை விசாரிக்கிற சுதர்சனத்தை ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க!"



"என்னது, ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்களா?"



"ஆமாம். இந்தக் கொலை வழக்குல பெரிய கை இருக்கும் போல! சுதர்சனம் கரெக்ட்டா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டிருந்தார். அவரை மாத்திட்டாங்கன்னா என்ன அர்த்தம்? ஏதோ ஒரு பெரிய கை இந்தக் கொலை வழக்குல சம்பந்தப்பட்டு இருக்குன்னுதானே அர்த்தம்?"



"என்னால நம்பவே முடியலையே அலெக்ஸ்!"



"நீரஜா கொலை வழக்கில் இன்னொரு விஷயம் நம்பமுடியாததா இருக்கு, மாதவன்!"



"வேற என்ன அலெக்ஸ்?"



"விக்ரமுக்காக இந்த கேஸ்ல வசந்த் ஆஜராகிறார் போல் தெரிகிறது!"



"வசந்தா? யார் அது?"



"வசந்த் தெரியாதா? சென்னையில் ஃபேமஸ் லாயர் கணேஷோட ஜூனியர்தான் வசந்த்! கணேஷ் வசந்த்துன்னு நீ கூட கேள்விப்பட்டிருப்பியே? அந்த வசந்த்!"



"அப்படியா? என்னால நம்பவே முடியலை இதை!"



"ஒருபக்கம் சுதர்சனம் ட்ரான்ஸ்பர்; இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஆஜராக பெரிய வக்கீலோட ஜுனியர் என்ட்ரீ! நேத்து வந்து விக்ரம் கிட்ட பேசிட்டு போனார் வஸந்த்!"



"என்னன்னு?"



"கேஸ்ல பெரிய ஓட்டை இருக்குன்னு சொன்னார். நீ கவலைப்படாதே, உன்னைக் காப்பாத்த முடியும்னு ஆறுதல் சொல்லிட்டு போனார்!"



"கேஸ்ல பெரிய ஓட்டையா?"



"ஆமாம். விக்ரம் சொல்ற எல்லாமும் உண்மையா இருக்கும். கொலை செய்தது வேற ஆள்; அந்த நேரத்துக்கு திட்டம் போட்டு, போன் செய்து என்னைக் கூப்பிட்டாங்கன்னு விக்ரம் சொல்றதை வஸந்த் நம்பறார்."



"விக்ரமுக்கு யார் போன் பண்ணது?"



"412-ம் நெம்பர் ரூம்ல இருந்தவன்!"



"அதாவது, கொலை செய்தவன்!"



"ஆமாம். நீரஜாவை கொன்னுட்டு, விக்ரமுக்கு போன் செய்ததும் விக்ரம் பதறிப் போய் ரூமுக்குள்ள போயிருக்கான். அங்கே நீரஜா செத்துக் கிடந்ததைப் பார்த்ததும் பயந்து போய் ஓடிட்டான்! கொலை நடந்த இடத்துக்கு விக்ரமை வரவழைச்சு அவனை கொலை கேஸ்ல மாட்ட வைக்கிறதுதான் திட்டம்!"



"விக்ரமை என்னன்னு சொல்லி ரூமுக்குள்ள கூப்பிட்டாங்களாம்?"



"நீரஜாவுக்கு ஆபத்து! உடனே வரவும்! ட்ரீம் லேண்ட் ஓட்டல்! ரூம் நெம்பர் 412! அவ்வளவுதான்! இப்படி சொல்லித்தான் என்னைக் கூப்பிட்டாங்கன்னு சொல்றான்."



"அந்த நெமபரை விக்ரம் போன்ல செக் பண்ணீங்களா?"



"சுதர்சனம் எல்லாம் செக் பண்ணியிருக்கார். பிளாக்மெயில் பண்ணவனோட போன்ல இருந்துதான் விக்ரம் போனுக்கு தகவல் போயிருக்கும்!"



"விக்ரம்தான் பிளாக்மெயில் பண்ணி ரூமுக்கு வர வெச்சு கொலை செய்தான்னு கேஸ் பதிவாகியிருக்கு! அப்புறம் எப்படி விக்ரமே, விக்ரம் போன்ல இருந்து… "



"அதைத்தான் சுதர்சனம் நம்பலை! பிளாக்மெயில் பண்ணி, நீரஜாவை கொலை செய்ததே நீதானே! இப்ப வேற யாரோ பிளாக்மெயில் பண்ண மாதிரியும், அவன் உனக்குப் போன் பண்ண மாதிரியும் சொல்றியான்னு கேக்கறார்! இந்தக் கதை எல்லாம் சுதர்சனம் நம்பத் தயாரில்லை மாதவன்."



"யாரை நம்பறது? யார் சொல்றது உண்மை? இந்த மாதிரி சூழ்நிலையில் சந்தர்ப்ப சாட்சிகளையும் ஆதாரங்களையும்தான் போலீஸ் நம்பும்; கோர்ட்டும் அதைத்தான் ஏத்துக்கும். சரி, கேஸ்ல பெரிய ஓட்டை இருக்குன்னு வஸந்த் சொன்னதா சொன்னியே அலெக்ஸ், அது என்ன?"



"முக்கியமா, நடந்த கொலையை கண்ணால பார்த்த சாட்சி யாருமே இல்லையே! இப்படி நடந்திருக்கலாம்; அப்படி நடந்திருக்கலாம்ங்கிறது எல்லாமே யூகத்தின் அடிப்படையில்தானே! சிசிடிவி கேமிராவில் விக்ரம் ரூமுக்குள்ள போறது என்னவோ உண்மைதான். ஆனா, விக்ரம்தான் கொலை செய்தான்கிறதுக்கு கண்ணால பார்த்த சாட்சி யாருமில்லையே! ஒருவேளை விக்ரம் சொல்றது உண்மையாவும் இருக்கலாம். கொலை நடந்த பிறகு, போன் வந்து, ரூமுக்குள்ள போய் பார்க்கும் போது நீரஜா ஏற்கனவே கொல்லப்பட்டு இருக்கலாம். கேமிரா சாட்சி பிரகாரம் விக்ரம்தான் கொலைகாரனாகவும் இருக்கலாம். ஆனா, கோர்ட்டும், போலீஸும் சாட்சிகளையும் ஆதாரங்களையும்தான் நம்பும்."



"சரி அலெக்ஸ்! ரொம்ப தேங்க்ஸ்! மறுபடியும் ஏதாவது தகவல் வேணும்னா போன் பண்றேன். இப்ப விசாரிக்கிற இன்ஸ்பெக்டர் பேர் என்ன அலெக்ஸ்?"



"ரவிக்குமார்!"



"அலெக்ஸ்! உன்னுடைய பர்சனல் ஒபீனியன் என்ன? போலீசா இல்லாம ஒரு ஃப்ரண்ட்டா சொல்லு!"



"என்னைக் கேட்டா, சுவாமிநாதனுக்கு நீரஜாவை கொல்றதுக்கு அதிக சான்ஸ் இருக்கு. தனக்கு துரோகம் செய்த மனைவியைக் கொன்னுட்டு பழியை கள்ளக்காதலன் மேல போடப் பார்க்கிறாரோன்னு! மனைவிக்கும் தண்டனை! கள்ளக்காதலனுக்கும் தண்டனை! ஆனா, சுவாமிநாதன் மும்பையில் கம்பெனி விஷயமா இருந்ததற்கான ஏராளமான சாட்சிகள் இருக்கு."



"கூலிப்படை வெச்சு கொலை செய்திருக்கலாம் இல்லையா?"



"அப்படி ஒரு கோணத்திலும் போலீஸ் விசாரிக்குது. சுதர்சனம் அதையும் செய்தார். ஆனா, அதுக்கான ஆதாரம் சுதர்சனத்துக்கு கிடைக்கலை. எல்லா வழியிலேயும் முயற்சி செய்து பார்த்துட்டுதான் விக்ரம் மேல எஃப்ஐஆர் போட்டிருக்கார். எஃப்ஐஆர் போட்டு வழக்கு பதிவு பண்ண கையோடு அவரை மாத்திட்டாங்க!"



"சரி, அலெக்ஸ், ரொம்ப நேரம் பேசிட்டோம்னு நினைக்கிறேன். மறுபடியும் தேங்க்ஸ்!"



நான் செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டு யோசனையில் ஆழ்ந்தேன்.



ஒரு பக்கம் விக்ரம் மீது ஸ்ட்ராங்காக கேஸ் பதிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் விக்ரமை காப்பாற்ற கணேஷோட ஜுனியர் வக்கீல் வஸந்த் வருகிறார். அவர் வந்தால் நான் அம்பேல்! வஸந்தின் அனுபவத்துக்கு முன்பாக நான் எல்லாம் தூசு! எப்பேர்ப்பட்ட ஆள் வஸந்த்! அவர் இந்தக் கேஸில் ஆஜராகிறாரா?



அவருக்கு போன் செய்து பார்க்கலாமா? அவருடைய போன் நெம்பர் எப்போதோ டைரியில் குறித்து வைத்த ஞாபகம் இருக்கிறது. டைரி என் அலுவலகத்தில் இருக்கிறது. நான் குளித்து விட்டு, டிபன் சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி விட்டு, யமஹாவை உதைத்துக் கிளப்பி, ட்ராஃபிக்கில் தூள் பறந்து, "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?" "ஆமாடா, உங்க வீட்ல!" அலுவலகத்தில் நிறுத்தி, கதவு திறந்து, டைரி திறந்து, நெம்பரை என் செல்போனில் நுழைத்து, "ஹாலோ! வஸந்தா?" என்றேன்.



"யா! மே பீ யூ ஆர் மாதவன்?"



என்றதும் நான் அதிர்ந்து போய் நின்றேன்.



"அய்ய்ய்ய்யோ! எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"



"அதை விடுங்க! நீங்க போன் பண்ணுவீங்கங்கிற ஒரு சின்ன கெஸ்ஸிங்தான்!"



"ஸார், நீங்க விக்ரம் கேஸ்ல ஆஜராகிறதா…"



"இன்னும் முடிவு பண்ணலை. கணேஷ் டில்லி போயிருக்கார். அவர் வந்ததும்தான் கேஸை எடுத்துக்கிறதா, இல்லையான்னு முடிவு பண்ணணும்."



"விக்ரமை வந்து பார்த்துட்டுப் போனதா சொல்றாங்களே ஸார்?"



"என்னை வரச் சொல்லி ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணி, நான் வந்து, பார்த்து, பேசி… இந்த மாதிரி நானும் கணேஷும் நிறைய க்ரைம் கதையைப் பார்த்திருக்கோம். என்னோட யூகம் வேற!"



"ஸார், செத்துப் போன நீரஜா கூட கடைசி வரைக்கும் நான்தான் இருந்தேன் ஸார்! அவளைக் காப்பாத்த முடியாம போனது எனக்கு இன்னமும் மனசுக்குள்ள உறுத்தலாவே இருக்கு ஸார்! நீரஜாவை கொலை செய்தவனை எப்படியாவது கண்டுபிடிக்கணும்! உங்க யூகம் என்ன ஸார்?"



"சொல்றேன். நான் சொல்ற மாதிரி செய்யறீங்களா?"



"செய்யறேன் ஸார், சொல்லுங்க!



வஸந்த் சொல்லச் சொல்ல என் காது வழியாக மூளைக்குச் சென்று பளிச்சென்று எல்லாமும் வெளிச்சம் பரவுவது போல் இருந்தது.



"ஓகே, ஸார்!" என்றேன். செல்போனைத் துண்டித்தேன். உற்சாகமாக விசிலடித்தேன். நானே வஸந்தாக மாறிவிட்டது போல் இருந்தது.



அன்றைக்கு இரவு, அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள அந்த வீட்டுக்குக் கதவை திறந்து பார்த்து விட முடிவு செய்தேன். இரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 27
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.