ஒரு ரகசிய குற்றம் 26

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
சுவாமிநாதன் போதையிலும் என்னை இமைக்காமல் ஒரு கணம் பார்த்தான். பிறகு, மெல்லிய புன்னகையைத் தவழ விட்டு, "நல்ல ஜோக்! நீ டிடெக்டிவ்ங்கிறதால உன் இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் கற்பனைப் பண்ணிக்கிறதா? நான் ஏன் நீரஜாவை கொலை செய்யணும்? இதையே இன்ஸ்பெக்டர் சுதர்சனமும் கேட்டுட்டார். எல்லார் பார்வையிலும் இந்தக் கேள்வி நியாயமானதுதான். கணவனுக்கு துரோகம் செய்யற மனைவி! கோடிக்கணக்கான சொத்து! பணம்! ஒரு மனைவி கணவனுக்கு துரோகம் பண்ணா எந்தக் கணவனுக்குத்தான் கோபம் வராது? அவன் என்ன புத்தனா? அது மாதிரிதான் எல்லாரும் யோசிப்பாங்க! நீ கேட்ட கேள்வியும் கரெக்டுதான்! நான் ஏன், எனக்கு துரோகம் செய்த நீரஜாவை கொன்றிருக்கக் கூடாது?" நானும் மனுஷன்தானே!? சரி, நீரஜாவை நானே கொன்னதா இருக்கட்டும்…"



"சார்! நீங்க உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க!" என்று எச்சரிக்கை செய்தான் தங்கராஜ்.



"நீ சும்மா இரு தங்கராஜ்! அவன் கேக்கறதும் கரெக்டுதானே! ஆனா, நான் எப்படி அவளைக் கொல்ல முடியும்? அவளை நான் உயிருக்குயிரா நேசிச்சேனே! எனக்கு அவ துரோகமே பண்ணியிருந்தாலும் அவளைக் கொல்றதுக்கு எனக்கு மனசு வராது! அவ.. அவ…" சுவாமிநாதன் தடுமாறினான். தூரத்து கடலைப் பார்த்து வார்த்தைகளைத் தேடினான்.



"சார்… இதெல்லாம் நீங்க ஏற்கனவே இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிட்டீங்க. திரும்பத் திரும்ப அதையே நினைச்சு உடம்பைக் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம்!"



"என்னால முடியலை தங்கராஜ்! அவ.. ஒரு ஜெம்! அவளை நான் மன்னிச்சிருப்பேன்." தன்னை சுதாரித்துக் கொண்டு, வியர்த்த முகத்தை டர்கி டவலால் துடைத்து கொண்டு, "ஆனா, இதுல எனக்கு ஒரு நல்ல விஷயம் என்னன்னா… நான் மும்பை போயிருக்கும் போது இந்தக் கொலை நடந்திருக்கு. நான் கம்பெனி மீட்டிங்ல கலந்துகிட்டது, ஓட்டல் ரூம்ல தங்கி இருந்ததுன்னு ஏராளமான சாட்சிகள் இருக்கு. அதனால நான் இந்த சந்தேகத்துல இருந்து தப்பிச்சேன்." என்றான். கால்களை நீட்டி நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.



"மாதவன்! வாங்க போகலாம். நீங்க கேக்கிற எல்லா கேள்வியும் போலீஸும் கேட்டாச்சு! அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ண வேணாம்." என்றான் தங்கராஜ்.



"அவனுக்கு உண்டான பணத்தை செட்டில் பண்ணிடுங்க தங்கராஜ்!" என்றான் சுவாமிநாதன், கண்களை மூடிக் கொண்டே.



நான் எழுந்து கொண்டேன். சுவாமிநாதன் உண்மையிலேயே கவலைப்படுகிறானா, இல்லை நடிக்கிறானா? நடிக்கிறான் என்றால், கேள்வி கேட்காமல் ஆஸ்கர் வழங்கலாம்.‌



"வாங்க மாதவன்!"



நான், "வர்றேன் சார்!" என்று சொன்னதை சுவாமிநாதன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கராஜ் பின்னால் நடந்தேன். வெளியே வந்தோம்.



"உங்க ஃபீஸ் எவ்வளவு மாதவன்?" நடந்து கொண்டே கேட்டான் தங்கராஜ்.



"நான்தான் ஃபீஸ் எதுவும் வேணாம்னு சொன்னேனே சார்!"



"நோ! நோ! நீங்க எவ்வளவுன்னு சொல்லுங்க. நீங்க வாங்காம போயிட்டீங்கன்னா அவர் என்னைக் கோவிச்சுக்குவார்."



"ஃபீஸ் வாங்கினா என் மனசாட்சி கோவிச்சுக்கும் சார்!"



"அவருக்கு என்னால பதில் சொல்ல முடியாது."



அப்போது தங்கராஜின் செல்போன் மீண்டும் ஒலித்தது.



"எக்ஸ்க்யூஸ் மீ!" என்றான் தங்கராஜ்.



"நீங்க பேசுங்க. நான் கிளம்பறேன்."



"இருங்க மாதவன், அவர் கோபப்படுவார்!"



"அவர் கோபத்துக்கு நீங்க வேணா பயப்படுங்க!"



வெளியேறி வந்த போது, லேசான இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது. சாம்பலும் கறுப்பும் செம்பொன் நிறமுமாக யாரோ பெயிண்ட்டைக் கரைத்து வானத்தில் இறைத்தது போல், ஒரு விநோத மாடர்ன் ஆர்ட் போல் காட்சியளித்தது.



நான் என் யமஹாவை இயக்கினேன். திரும்பி கிளம்பும் போது, பின்னால் ஒரு அவசர கார், ஹாரனைப் பிளிறியது. 'டேய்! வாயை மூடிட்டு வாடா!' என்று மனதில் திட்டிக் கொண்டு நகர்ந்த போது… நகர்ந்த போது…



"ஏலே! ஒனக்கு எத்தன தடவம்ல சொல்றது போன் வேணாம்னுட்டு.. மறுக்கா மறுக்கா எனக்கு போன் போட்டு உசிர வாங்குத! இன்னொருக்கா எனக்கு போன் போட்டு, இந்த போன் நல்லாருக்கும் அந்த போன் நல்லாருக்கும்னுட்டு, வாங்கிக்கோனு தொல்ல பண்ணேனு வையே.. எனக்கு வார கடுப்புக்கு.. அம்புட்டுதே ஒனக்கு மருவாத! வைல போன!''



இதை, இந்தக் குரலை எங்கேயோ கேட்ட மாதிரி.. யாரோ என்னிடம் சொன்ன மாதிரி..! எங்கே? பின்னால் கார் ஹாரன் துரத்தியது. 'டேய்! இர்ரா டாய்!' திரும்பி கார்க்காரனை முறைத்து விட்டு, எங்கே கேட்டேன்? சட்டென்று ஞாபகம் வந்துவிட்டது. நீரஜா இந்த செல்போன் உரையாடல் பற்றி சொல்லி இருக்கிறாள். ஏதோ, கோயம்புத்தூர், திருநெல்வேலி பாஷை மாதிரி இருந்தது என்று. நான் பைக்கைத் திருப்ப முயன்றேன். பின்னால் கார்க்காரன் என்னைப் போகச் சொல்லி தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தான். முன்னால் ஒரு காரும், பக்கவாட்டில் பைக்குகளும் இருந்ததால் என் பைக்கைத் திருப்ப முடியவில்லை. முடிந்தவரை கழுத்தைத் திருப்பி பார்த்தேன். போன் பேசிய ஆசாமி ஒரு காரில் ஏறி அமர்ந்தான். ஆளை சரியாக பார்க்க முடியவில்லை. பால் வெள்ளை நிறத்தில் இருந்த காரும், பின் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஒரு ஸ்டிக்கரும் என் மனதில் பதிய, நான் யமஹாவை ஒன்வேயில் ஓட்டிக் கொண்டு, அரை கி. மீட்டர் சென்று மீண்டும் திருப்பிக் கொண்டு வந்து பார்த்த போது, அந்த வெள்ளை நிற காரை ஏதோ ஒரு காக்காய் வந்துத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.



நான் பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, பார்த்தேன். சாலையிலும் கட்டிடங்களிலும் விளக்குகள் மலர்களாய்ப் பூத்திருந்தன. ஏவுகணைகளாய் வாகனங்களின் ஹெட் லைட் வெளிச்சம் குறுக்கும் மறுக்குமாகச் சீறிக் கொண்டு சென்றன. இந்த சமுத்திரத்தில் அந்தக் காரை எப்படி கண்டுபிடிப்பது? இந்நேரம் அது எங்கே போயிற்றோ?



எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டு, போக்குவரத்தில் நீச்சலடித்து, வீட்டிற்கு வந்தேன்.



"எங்கேடா போயிருந்தே நேத்தெல்லாம்?" அம்மாவின் பாசம் கேள்வியாய் வழிந்தது.



நான் என்ன சொல்வது? எடுத்துக் கொண்ட வேலையில் தோற்றுப் போய்த் திரும்பியதைச் சொன்னால் எந்தத் தாய்தான் பெருமிதம் கொள்வாள்?



"வேலை இருந்ததும்மா!" என்று மட்டும் சொன்னேன்.



"சாப்பிட்டியா?"



"இன்னும் இல்லை. எடுத்து வை!" என்று உடை களைந்து, சிக்கனமாக ஒரு குளியல் போட்டுவிட்டு, டிவி பார்த்துக் கொண்டே, சப்பாத்தியைக் குருமாவில் நனைத்து சாப்பிட்டு கொண்டே, ட்ரீம் ஏஞ்சல் ரெஸார்ட்டின் வாசலில் அந்தக் காரை, அந்த டிரைவர் போனில் பேசியதை யோசித்துக் கொண்டே… என்ன பேசினான்?



"ஏலே! ஒனக்கு எத்தன தடவம்ல சொல்றது போன் வேணாம்னுட்டு...மறுக்கா மறுக்கா எனக்கு போன் போட்டு உசிர வாங்குதே! இன்னொருக்கா எனக்கு போன் போட்டு, இந்தப் போன் நல்லாருக்கும் அந்தப் போன் நல்லாருக்கும்னு தொல்லை பண்ணுனேன்னு வையே… எனக்கு வார கடுப்புக்கு...அம்புட்டுதே ஒனக்கு மருவாத! வைல போன!"



அவ்வளவுதான் அவன் பேசியது!



நான் வேகமாகச் சாப்பிட்டு, யோசனையோடு கைக்கழுவிக் கொண்டு, அம்மா, "என்ன அவசரம்டா! வீட்ல சாப்பிடறது ஒரு வேளை சாப் - " மாடிப்படி ஏறி, என் அறைக்குள் நுழைந்து முதல் வேலையாக என் செல்போனை எடுத்து, ஹெட் போன் மாட்டிக் கொண்டு, அந்த பதிவு செய்யப்பட்ட உரையாடலை மீண்டும் கேட்டேன்.



நீரஜாவும், பிளாக்மெயில் செய்து மிரட்டிய ஆசாமி - விக்ரம் நியமித்த ஆள் என்று நம்பப்படும் ஆசாமியும் - பேசிய உரையாடல்!



"ஹலோ!" நீரஜாவின் குரல்!



"என்ன பேபி! எப்படி இருக்க? நீ போன் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன். ஏன் பண்ணலை?"



"நான் போன் பண்ணிணேன். ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது."



எதிர்முனையில் சிரிப்பு.



"அது என்னோட ஸ்டைல்!"



"எது? சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதா?"



-உரையாடலைக் கேட்டுக் கொண்டே வந்த நான், என்னையும் அறியாமல் துள்ளிக்குதித்தேன். "ஹூர்ரே!" என்று கத்தினேன்.



"டேய்! என்னடா ஆச்சு? எதுக்கு அப்படி கத்தறே?" அம்மாவின் குரல் கீழிருந்து வந்தது.



"ஒண்ணும் இல்லை மம்மி!" என்று திரும்பக் கத்திவிட்டு, யோசித்தேன். எனக்கு இப்போது கொஞ்சமாக ஏதோ ஒரு பாதை புலப்பட்டது. புரை நீக்கியதும் கண்பார்வை தெளிவடைவது போல், பனி நீங்கி பசும் சோலையில் பைங்கிளிகள் தெரிவது போல், ஒரு பெண்ணின் மர்மப் புன்னகைக்குப் பின் மறைந்திருக்கும் மனதின் ஆழம் காண முடிவது போல்…



நான் அந்த உரையாடலை மீண்டும் மீண்டும் போட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்.



ஒரு விஷயத்துக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன். நீரஜாவின் செல்போனில் இருந்த இந்த உரையாடலை, அவள் போனில் இருந்து என் போனுக்கு அனுப்பி சேகரித்து வைத்துக் கொண்டது எத்தனை மகத்தான புத்திசாலித்தனம்! இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று நான் எதிர்பார்த்தேனா? நினைத்துப் பார்த்தேனா? ஏதோ என் செல்போனில் சேமித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான்! ஓ, மை கடவுளே! என் கையை முதுகு பக்கம் திருப்பிச் செலுத்தி என்னை நானே தட்டிக் கொடுத்து கொண்டேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 26
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.