ஒரு ரகசிய குற்றம் 24

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
சுதர்சனம் இந்த கொலை வழக்கில் விக்ரமுக்கு எதிரான எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தினார். ஆனால் எனக்கு, விடை தெரியாத கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டும்; அதன் பிறகு விக்ரமை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்.



"கடைசியா ஒரே ஒரு சந்தேகம் சார்!" என்றேன்.



சுதர்சனம் முகத்தில் அலுப்பு தொனித்தது.



"இன்னும் என்னய்யா?" என்றார்.



"நீரஜாவை கொலை பண்ணணும்னு இவ்வளவு தூரம் துல்லியமா திட்டம் போடறவன் ஓட்டல்ல சிசிடிவி கேமரா இருக்கிறதை யோசிக்க மாட்டானா?"



சுதர்சனம் முகத்தில் லேசான கலவரம் படிந்தது. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தார். புத்திசாலித்தனமாக கேள்வி கேட்ட என்னை நானே மெச்சிக்கொண்டு அவரை நோக்கி நான் வீசிய சிறு புன்னகை வெகு நேரம் நீடிக்கவில்லை.



சுதர்சனம் தன் இறுக்கமான முகத்தைத் தளர்த்திக் கொண்டு, இப்போது, என்னைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தார்.



"போய்யா ஜேம்ஸ் பாண்டு!" என்றார். பிறகு சொன்னார். "நீரஜாவை கொலை செய்யற எண்ணம் முதல்ல அவனுக்கு இருந்திருக்காது. ஓட்டல் ரூமுக்கு வந்த பிற்பாடு தன்னைக் காப்பாத்திக்கக் கொலை செய்திருக்கலாம்." என்றார்.



"தன்னைக் காப்பாத்திக்கன்னா… எப்படி சார்? எதுக்கு? எனக்குப் புரியலை." என்றேன்.



"பிளாக்மெயில் பண்ணவன் ஒரு நாளைக்கு என் கூட இருக்கணும்னு சொன்னானா?"



"ஆமாம்."



"அப்படின்னா என்ன அர்த்தம்? தன்னைக் காப்பாத்திக்க, தன் உடம்பை இன்னொருத்தனுக்கு கொடுக்கிறதுக்கு சம்மதிச்சு வந்ததாத்தானே அர்த்தம்?"



"நீரஜாவுக்கு இதுல சம்மதம் இல்லையே சார்!"



"அது பிளாக் மெயில் பண்றவனுக்குத் தெரியுமா? தெரியாது. அதனால, தன்னைக் காப்பாத்திக்க தன் உடம்பைக் கொடுக்க முடிவெடுத்து வந்தவ, வேற எதுக்கு வேணும்னாலும் துணிஞ்சுடுவான்னு நினைச்சிருக்கலாம். நீரஜாவை பார்த்த உடனே கோபம் தலைக்கு ஏறி, ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல அவளை கொலை செய்திருக்கலாம். அவ்வளவுதான். புரிஞ்சுதா ஜேம்ஸ் பாண்டு? இந்த கேஸ்ல விக்ரம் என்ன நினைச்சான்கிறதெல்லாம் இல்லை. விக்ரம் நீரஜாவை கொன்னுட்டான். அதுக்குண்டான காரணம் எல்லாம் சரியா பொருந்துது. இதையெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீ ஒரு முக்கியமான, முதல்தர சாட்சிங்கிறதால கோர்ட்ல வந்து குழப்பம் இல்லாமல தெளிவா சொல்லணும்ங்கிற காரணத்துக்காகத்தான் இவ்வளவும் விளக்கமா உன்கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கு. புரிஞ்சுதா"



சுதர்சனம் எழுந்து கொண்டார்.



நான் எழுந்து கொண்டேன்.



சுதர்சனம் மேற்கொண்டு அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். நான் சிறிது நேரம் நின்று விட்டு, "ஏ, போம்மே கய்தே!" என்ற லுங்கியும் சட்டையும் தலைமுடியும் அழுக்கான ஒருவன், தன் கூட வந்த திமுசுக்கட்டையிடம் சொல்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தேன். என் யமஹாவை எடுக்கும் போது, "டேய், மாதவன்!" என்று குரல் கேட்டுத் திரும்பினேன்.



அலெக்ஸ் வந்து கொண்டிருந்தான்.



"அட, அலெக்ஸ்! இங்கே எப்படி?" கேட்ட பிறகுதான் அவன் காக்கி யூனிபார்மை கவனித்தேன். அலெக்ஸும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள். நான் படித்து முடித்து விட்டு துப்பறிவதில் போதையேறி அதற்காகப் பயிற்சி எடுத்து, முறைப்படி பதிவு செய்து கொண்டு, இந்த "BRA" (Black Rose Agency) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஆனால் கல்லூரி நாட்களுக்குப் பிறகு, அலெக்ஸ் என்ன ஆனான் என்று பலமுறை யோசித்ததுண்டு. அதற்கு விடை இப்போதுதான், அவன் காக்கிச் சீருடையைப் பார்த்த போதுதான் கிடைத்தது.



அலெக்ஸ், ஹிருத்திக் ரோஷனின் தம்பி மாதிரி இருந்தான். சற்றே பூனைக் கண்கள்! உடம்பைக் கச்சிதமாக வைத்திருந்தான். ஓடிப்போய் ஒரே தாவலில் காவல் நிலைய காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கும் சுறுசுறுப்பும் உயரமுமாக இருந்தான்.



"அலெக்ஸ் நீயா? எப்படி இருக்கே?" என்றேன்.



"நான் நல்லா இருக்கேன் மாதவன். நீ எப்படி இருக்கே? இங்கே எதுக்கு வந்தே?"



நான் இங்கு வந்த வரலாற்றை ஆரம்பத்திலிருந்து சொல்லி முடித்தேன்.



"சுவாமிநாதனா! பிக் ஷாட் ஆச்சே! பல தொழில் மன்னன். கோடிக்கணக்கான சொத்து! அவரோட மனைவியா?"



"ஆமாம். அந்த நீரஜாவோட கொலை சம்பந்தமாதான் விக்ரம்ங்கிறவனை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க. உனக்குத் தெரியாதா?"



"இல்லை. நான் வேற ஒரு கேஸ் சம்பந்தமா சேலம் போயிட்டு இப்பதான் வர்றேன். சுதர்சனம் கரெக்ட்டா பண்ணுவார். ஒருத்தனை அரெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி எல்லா எவிடன்ஸையும் கலெக்ட் பண்ணிடுவார். அதுக்கப்புறமா தான் குற்றவாளி மேல கை வைப்பார்!"



"சரி, அலெக்ஸ்! இந்த கேஸ் எப்படி போகுதுன்னு எனக்குத் தெரியணும். சுதர்சனத்தை கேட்டா நிச்சயம் சொல்ல மாட்டார். நீ கொஞ்சம் உதவி பண்ணி சொன்னேன்னா நல்லா இருக்கும்."



"எப்படிப்பட்ட உதவின்னு சொல்லு."



"எப்ஐஆர் ல எப்படி கேஸை பதிவு செய்திருக்காங்கன்னு தெரியணும். என்ன மாதிரியான கோணத்துல கேஸை மூவ் பண்றாங்கன்னு தெரியணும்."



"அது தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே?"



"இதுக்கு மேல நான் ஒன்னும் பண்ணப் போறதில்லை. நான் அந்த பொண்ணு கூட கொலையாகிற கடைசி வரைக்கும் இருந்தேன் என்கிற காரணத்தினால் ஜஸ்ட் தெரிஞ்சுக்க விரும்புறேன். கடைசியில் அவளைக் காப்பாத்த முடியாம போயிட்டது எனக்கு ஒரு குற்ற உணர்வாவே இருக்கு. நான்தான் அவளுக்கு யோசனை சொன்னேன். என் யோசனைப்படிதான் ஓட்டலில் ரூம் எடுத்தது, எல்லாம். கடைசி நிமிஷத்துல என்னுடைய எல்லா திட்டமும் தோல்வி அடைஞ்சிடுச்சி. அந்தப் பொண்ணைத் தனியா அனுப்பிட்டேன். அப்பவும் சில பாதுகாப்பு நடவடிக்கை செஞ்சேன். எதுவும் உபயோகம் இல்லாமல் போச்சு. அதனால கேஸ் எந்த ரூட்டில் போகுதுன்னு தெரிஞ்சுக்கணும். அவ்வளவுதான்."



"சரி, நான் சொல்றேன். உன் போன் நம்பர் கொடுத்துட்டுப் போ!"



நான் எனது விசிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.



***



அடுத்த நான்கு நாட்கள் சுவாரஸ்யமில்லாமல் கழிந்தது. நான் வழக்கமாக காலையில் எழுந்து, கொட்டாவி விட்டு, அம்மா கொடுத்த காப்பியை, 'கொஞ்சம் சர்க்கரை சேர்த்துதான் போடேம்மா, சுத்தமா உறைகலை!' குடித்து விட்டு, குளித்து விட்டு, ஆபீசுக்குப் போய், பேப்பர் படித்து, டீக் குடித்து, சட்டப் புத்தகத்தில் 302-ல் சிறிது நேரம் மூழ்கி, தலை வலித்ததும் மூடி வைத்து விட்டு, நாற்காலியிலேயே தூங்கி வழிந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து, மீண்டும் ஆபிசுக்குப் போய்... அன்றைக்கு காலை பத்து மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது.



"ஹலோ மாதவனா?"



"ஆமாம்."



"ப்ரா டிடெக்டிவ் ஏஜென்சி?"



"ஆமாம். நீங்க?"



"உங்களை சுவாமிநாதன் பார்க்கணும்னு சொல்றார்."



"எந்த சுவாமிநாதன்?"



"கொலை செய்யப்பட்ட நீரஜாவோட ஹஸ்பண்ட்!"



நான் அதற்குள் சுவாமிநாதனை மறந்து விட்டிருந்தேன்.



"என்ன விஷயமா பேசணும்கிறார்?"



"சுவாமிநாதன் உங்ககிட்ட பேசப் பிரியப்படறார். நீங்க நேர்ல வாங்களேன்."



"நேர்லனா எங்க?"



"நேரா ஆபீசுக்கு வந்துடுங்க!"



"ஆபிஸ் எங்க இருக்கு?"



"ஆபீஸ் தெரியாதா உங்களுக்கு?"



எதிரே போனில் வியப்பது இங்கே போனில் தெரிந்தது.



"இல்லை. உண்மையில் தெரியாது."



"மவுண்ட் ரோடில் எல்ஐசிக்கு அடுத்து பெயர் பெற்ற நிறுவனம் நீரஜா குரூப்ஸ்தான்! யாரையும் கேட்கவே வேண்டியதில்லை. எப்போ வர்றீங்க?"



"எனக்கு இப்போ ஒரு சின்ன அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு - சின்னதாய் ஒரு பொய் - சாயங்காலம் வரட்டுங்களா?"



எதிரே சிறிய தயக்கம். சில நொடிகள் மௌனம்.



"சரி அஞ்சு மணி வரைக்கும் சுவாமிநாதனுக்கு மீட்டிங் இருக்கு. அது முடிச்சுட்டு அவர் கிளப்புக்குப் போயிட்டு, அங்கிருந்து அவர் வீட்டுக்குக் கிளம்பிடுவார். நீங்க ஒண்ணு செய்யுங்க. நேரா கிளப்புக்கு வந்துடறீங்களா?"



"சரி, எந்த கிளப்புன்னு சொல்லுங்க, வந்துடறேன்."



"ஓகே. நான் எந்த கிளப்புன்னு மறுபடியும் போன் பண்ணிச் சொல்றேன். ஏன்னா, இந்த நாலு நாளா அவர் மனசு சரியில்லாம வழக்கமா போற கிளப்பை விட்டுட்டு இஷ்டத்துக்கு எங்கெங்கோ போறார். அவரை சமாளிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு போறது கொஞ்சம் சிரமமா இருக்கு. நான் உங்களுக்கு மறுபடியும் போன் பண்ணிச் சொல்றேன்."



"சரி." என்றேன். மறுபடியும் போன் வருவதற்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் போது குட்டியாய்த் தூங்கினேன். தூங்கி விழித்ததும் சுவாமிநாதன் என்னை எதற்காகப் பார்க்க வேண்டும் என்று யோசித்தேன்.



அடையாறு தாண்டி எலியட்ஸ் பீச் அருகில் ஒரு சொகுசான குடிலுக்கு வரும்படி எனக்கு போன் தகவல் வந்தது. பணம் கொழுத்த உல்லாசப் பிரியர்களின் சொர்க்கம் அது!



எலியட்ஸ் கடற்கரையை நோக்கி என் யமஹாவை உத்சாகத்துடன் விரட்டினேன்.



'Dream Angel' 'ட்ரீம் ஏஞ்சல்' என்று குறிப்பிட்ட அழகிய ரெஸார்ட்டை அடைந்து, யமஹாவை நிறுத்திவிட்டு பார்த்தேன்.



சுவாமிநாதனின் உதவியாளன் தங்கராஜ், என் பழைய யமஹாவை அடையாளம் கண்டு, "நீங்கதானே மாதவன்?" என்றான்.



நான் தலையசைத்தேன்.



தங்கராஜ் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடன் என்னை அந்த ரெஸார்ட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றான்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 24
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.