ஒரு ரகசிய குற்றம் 22

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
"நான் பேசிப் பார்க்கிறேன் சார்!"



"சரி, சரி, சீக்கிரம் பேசிட்டு வரணும். இன்ஸ்பெக்டர் வந்தா என்னைக் கோவிச்சுக்குவார்!"



"அவரை ஜிஎச் ல பார்த்தேன் சார்! அவர்தான் அனுப்பி விட்டார் - செல்போனை வாங்கிக்கச் சொல்லி!"



"தெரியுது. அதனால்தான் பேச அனுமதிக்கிறேன். நல்லதனமா எடுத்துச் சொல்லு அவனுக்கு. குற்றத்தை ஒத்துக்கிட்டா உடம்பு புண்ணாகாம தப்பிக்கும்!"



"சொல்றேன் சார்!"



காவல் நிலையத்தின் இரக்கமற்ற தன்மையை உணர முடிந்தது. காவல் நிலைய கட்டடத்துக்குள் நுழையும் யாரும் இதை உடனடியாக மனதில் உணர முடியும். பிக்பாக்கெட் அடிப்பவர்கள், சங்கிலி பறிப்பவர்கள், வீடு புகுந்து கொள்ளை அடிப்பவர்கள், கற்பழிப்பு, சிறுமிகள் பலாத்காரம், கொலை செய்பவர்கள் என்று ஒவ்வொரு நாளும் இரக்கமற்ற மனிதர்களின், இரக்கமற்ற எண்ணங்கள், காவல் நிலைய கட்டிடங்கள் முழுக்க சூழ்ந்து நிரம்பிக் கிடப்பதை உணர முடியும்.



நான் விக்ரமை நெருங்கி, ''விக்ரம்!" என்றேன்.



அவன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். முகம் கவலைகளாலும் வேதனைகளாலும் பயத்தாலும் கலைக்கப்பட்டிருந்தது.



"எதுக்குங்க நீரஜாவை கொன்னீங்க?"



என் கேள்வியால் அவன் கண்களில் ஒரு திடுக்கிடல் மின்னி உறைந்தது.



"யார் நீங்க?" என்றான்.



"மாதவன்! பிரைவேட் டிடெக்டிவ்! நீரஜா எல்லாத்தை பற்றியும் என்கிட்ட சொன்னாங்க. உங்களைப் பத்தி, உங்க இல்லீகல் காண்டாக்ட் பத்தி, யாரோ போன்ல மிரட்டுவது பத்தி எல்லாம் சொன்னாங்க.



"உங்ககிட்ட சொன்னது பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலையே அவ?"



"அவங்க எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்? நீங்க போன்ல மிரட்டியதை உங்ககிட்டேயே சொல்வாங்களா?"



"வாட் நான்சென்ஸ்! நான் மிரட்டினேனா? என்ன பைத்தியக்காரத்தனம் இது! நீரஜாவும் இதையேதான் சொன்னா. உனக்கு பணம் வேணும்னா நேரா கேட்டிருக்கலாமே, எதுக்குடா போன்ல மிரட்டி பிளாக்மெயில் பண்றேன்னு. நான் அப்பவே அவளுக்கு தெளிவா சொன்னேன். உன்னை மிரட்டினவன் எனக்கும் போன் பண்ணி மிரட்டினான்னு. அதுக்கு அப்புறம் அவ அதுபத்தி எதுவும் பேசலை. இப்ப நீங்கதான் மறுபடியும் சொல்றீங்க! நான் எதுக்கு அவளை பிளாக்மெயில் பண்ணனும்? அவதான் எனக்கு சுலபமா கிடைக்கிறாளே!"



"நீரஜா வேணா உங்களுக்கு சுலபமா கிடைக்கலாம்; அவளுடைய கோடிக்கணக்கான சொத்து அவ்வளவு சுலபமா உனக்கு கிடைக்காது!"



"பிளாக்மெயில் பண்ணா கிடைச்சுடுமா? சுத்தி வளைச்சு நீங்க என்ன சொல்ல வர்றீங்க? போலீஸ் என்னடான்னா நீரஜாவை கொலை பண்ணதை ஒத்துக்கோன்னு அடிக்கிறாங்க. செய்யாத கொலையை நான் எப்படி ஒத்துக்க முடியும்?"



"நீங்கதானே நீரஜாவை மிரட்டி பணமும் வேணும்; நீயும் வேணும்னு சொன்னீங்க?"



"திரும்பத் திரும்ப நான் போன் பண்ணி மிரட்டியதாக சொல்றீங்களே சார்! நீங்க சொன்னதை நீரஜா என்கிட்டயும்தான் சொன்னா. எனக்கு பிளாக்மெயில் பண்ணவன் மேல கோபம் வந்துச்சு! சாதாரண கோபமில்லை! அவனைக் கொலை செய்யற அளவுக்கான கோபம்! அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்லி அவனைக் கொலை பண்ணிடலாம்னு சொன்னேன். நீரஜாதான் அதுக்கு ஒத்துக்கலை!"



"நீங்க சொன்னதை என்கிட்டயும்தான் சொன்னாங்க. நீரஜாவை ஏமாத்தின மாதிரி நீங்க போலீசை ஏமாத்த முடியாது விக்ரம்! உண்மையை ஒத்துக்கோங்க; தண்டனையை வேணா குறைப்பதற்கு வழி இருக்கான்னு பார்க்கலாம். நீங்கதான் நீரஜாவை கொலை பண்ணீங்கங்கிறத்துக்கு போலீஸ் கிட்ட ஆணித்தரமான ஆதாரம் இருக்கு! சிசிடிவி கேமரா பதிவு இருக்கு! நீங்க நீரஜாவை பிளாக்மெயில் பண்ணின செல்போன் உரையாடல் இருக்கு."



"நீரஜாவுக்கு நான் போன் பண்ணவே இல்லையே!?"



"அப்போ, யார் பண்ணது?"



"தெரியாது!"



"உங்க நம்பர்ல இருந்துதானே போன் பண்ணியிருக்கு!"



"என் நம்பரில் இருந்தா?"



"ஆமாம்!"



"எப்படி சார்? எனக்கு புரியலை!"



"சும்மா நடிக்காதீங்க விக்ரம்! உங்க பேர்லதான், உங்க ஆதார் எண் கொடுத்துதான் நம்பர் வாங்கி இருக்கு! அதை எப்படி உங்களால மறுக்க முடியும்? போலீசை இல்லை; என்னை கூட உங்களால முட்டாளடிக்க முடியாது!"



"என் பேர்ல வாங்கி இருக்கா? என்ன சார் உளர்றீங்க?"



"நான் உளறலை! நீங்கதான் இப்ப உளர்றீங்க! எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்க!"



"சத்தியமா நான் நடிக்கலை ஸார்! இது எப்படின்னு எனக்கே குழப்பமா இருக்கு." என்ற விக்ரம் சிறிது நேரம் யோசித்துவிட்டு, திடீரென்று ஞாபகம் வந்தவனா, "இப்ப ஞாபகம் வருது. மூணு நாலு மாசம் இருக்கும்... சிம் ஃப்ரீயா கொடுக்கிறேன்; ரெண்டு மாசம் ஃப்ரீன்னு ஒரு 'சிம்' வாங்கினேன்; ஆமா, நல்லா ஞாபகம் இருக்கு! அதுக்கு என் ஆதார், போட்டோ எல்லாம் கொடுத்தேன். ஆனா, அந்த போன் தொலைஞ்சு போச்சு சார்!" என்றான்.



நான் கோபமாக அவனை முறைத்தேன்.



"போன் தொலைஞ்சு போச்சுன்னா சிம்மை பிளாக் பண்ண வேண்டியதுதானே? நீங்க ஏன் அந்த நம்பரை பிளாக் பண்ணலை?



"சிம்' வாங்கி ரெண்டு நாள் கூட ஆகலை. நம்பர் மறந்து போச்சு! அதான் பிளாக் பண்ண முடியலை!"



"நீங்க சொல்ற கதையை போலீஸ் நம்பும்னு நினைக்கிறீர்களா? முதல்ல நீங்க சொன்னதை நானே நம்பலை!"



"நம்பலைன்னாலும் அதான் சார் உண்மை!"



"உண்மையை யாரும் நம்பறதில்லை. நம்பறதுக்குத் தேவை ஆதாரம்! சாட்சி! எவிடன்ஸ்! எல்லாத்துக்கும் எவிடன்ஸ் வேணும்! உங்க போன் தொலைஞ்சி போனா உடனே நீங்க புகார் கொடுத்து இருக்கணும்; புகார் கொடுத்திருந்தா அது எவிடன்ஸ்! அந்த எவிடென்ஸ் போலீஸ்கிட்ட இப்ப உங்களுக்கு எதிரா இருக்கு. போன் நம்பர் உங்க பேர்ல இருக்கு. நீங்க நீரஜாவுக்கு போன் பண்ணி மிரட்டின உரையாடல் எல்லாம் நீரஜா செல்போன்ல பதிவாகி இருக்கு. இன்னும் நிறைய எவிடன்ஸ் போலீஸ் கிட்ட இருக்கு. நீரஜா பேர்ல, ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி இருக்கீங்க! அதை நீரஜாவுக்கு தெரியாம மறைச்சு வெச்சுட்டு ஹோட்டலுக்கு வந்த பின்னாடி, 'நான் உன் ரூமுக்கு வர மாட்டேன்; நீ என் ரூமுக்கு வா'ன்னு சொல்லி அவளை ரூமுக்கு வர வெச்சு, கொலை பண்ணிட்டு, ரூம்ல இருந்து தப்பிச்சுப் போயிருக்கீங்க! சிசிடிவி கேமராவுல நீங்க ரூமுக்குள்ள போறது; வெளியே வர்றது எல்லாம் பதிவாகியிருக்கு!"



"ஐயோ! நான் கொலை செய்யலை சார்! நான் ரூமுக்குள்ள போனது உண்மைதான்! நான் போகும் போது நீரஜாவை வேற யாரோ கொலை பண்ணியிருந்தாங்க! அவ கழுத்துல ஆழமா வெட்டுக் காயம் இருந்துச்சு! ரத்தம் வழிஞ்சுட்டு இருந்துந்துச்சு! அதைப் பார்த்து நான் பயந்து போய் வெளியே போயிட்டேன் சார்!"



விக்ரம் தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான். அவன் பேச்சில், கண்ணீரில் பாசாங்கு இருப்பதாகத் தோன்றவில்லை.



"நீங்க கொலை பண்ணலைன்னா ஏன் ஓடினீங்க? போலீஸ்ல சொல்லி இருக்கலாமே!" என்று அவனைப் பார்த்தேன்.



"நான் நீரஜாவை அந்த நிலையில் பார்த்ததும் பயந்துட்டேன் சார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. பயந்து போய் ஓடி வந்துட்டேன். சிசிடிவி கேமராவில் மாட்டிக்குவேன்னு நினைக்கவேயில்லை." என்றான்.‌



"அவ்வளவு பயந்திருக்கிறவனுக்கு பின்பக்க வழியா போற ஐடியா மட்டும் எப்படி வந்துச்சு?"



"அய்யோ! யாராவது பார்த்துடுவாங்களோன்னு பயந்துட்டேன் சார்! வரும் போது நேராத்தானே வந்தேன்! நீரஜாவை அந்த நிலையில் பார்த்ததும் பயந்துட்டேன் சார்! எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது சார்!"



விக்ரம் புலம்பிக் கொண்டிருக்கும் போதே சுதர்சனம் வந்து விட்டார். என்னைப் பார்த்து, "யோவ், ஜேம்ஸ் பாண்டு! அவன் கிட்ட என்னய்யா பேசிக்கிட்டு இருக்கே?" என்றார்.



நான், "சும்மா சார்!" என்றேன்.



"சரி வா, பேசினது போதும். அவன்கிட்ட பேசினா நம்பமுடியாத நிறைய கதையை வண்டி வண்டியா சொல்லுவான்.‌ அவன்கிட்ட எங்களுக்கு நிறைய பேச வேண்டிய வேலை இருக்கு!"



சுதர்சனிடம், "இதோ வந்திடறேன் சார்!" என்று சொல்லி விட்டு, விக்ரமை பார்த்து, "பார்த்தியா, எவ்வளவு வேகமா இருக்காருன்னு! நீ சொல்ற எதையும் யாரும் நம்ப போறதில்லை! பேசாம குற்றத்தை ஒத்துக்கோ! அதுதான் உனக்கு நல்லது." என்ற போது செய்வதறியாமல் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வை என்னை என்னவோ செய்தது.



"அப்போ, நீ கொலை செய்யலைன்னா வேற யார் கொலை பண்ணாங்க?"



"தெரியலையே…" அவன் பரிதாபமாகச் சொல்லி விட்டு என்னைப் பார்த்தான்.



"நீதானே ரூமுக்குள்ள போற? ரூமுக்குள்ள இருந்து வெளியே வர்றே? நான்தான் ஓடி வரும்போது உன்னைப் பார்க்கிறேனே! நீ ரூமுக்குள்ள இருந்து வெளியே வந்து, நடந்து, பின்பக்க வழியா போறியே! இல்லைன்னு சொன்னா யார் நம்புவாங்க?"



"ஐயோ சார்! நான் அப்போதுதான் ரூமுக்குள்ளவே போறேன். நீரஜா கொலையானதைப் பார்த்துட்டு, பயந்து போய் நான் ஓடி வந்தேன். அதைத்தான் நீங்க பார்த்திருக்கீங்க!"



"அப்போதுதான் ரூமுக்குள்ள போறேன்னா… அதுக்கு முன்னாடி நீ ரூமுக்குள்ள இல்லையா?"



"இல்லை சார்!"



"அப்படின்னா… ரூமுக்குள்ள இருந்தது யார்?"



"தெரியலை சார்!"



"தெரியலைன்னா என்ன அர்த்தம்? அந்த நேரத்துக்கு நீ ஏன், எப்படி கரெக்டா அந்த ரூமுக்கு வரணும்?"



"எனக்கு ஒரு போன் வந்துச்சு சார்!" என்றான் விக்ரம்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 22
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.