ஒரு ரகசிய குற்றம் 17

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
கனமான ஷூக்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் தெரிய ஆரம்பித்தன.



அநேகமாக எழும்பூர் எஃப்-6 போலீஸ் ஸ்டேஷனில் இருந்துதான் அவர்கள் வரவேண்டும். ஐந்து பேர் புடைசூழ ஒரு பரிவாரமாய் அந்த ராத்திரியின் ஆரம்பத்தில், அந்த வராண்டாவில் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் சுதர்சனம்.‌



அவரை எனக்குத் தெரியும். சுதர்சனம் பற்றி கேள்விப்படிருக்கிறேன். டிபார்ட்மெண்டில் கடுமையான ஆசாமி. நேரில் பார்க்கும் போது இளைஞராக இருந்தார். வயிறு உள்ளடங்கி, மார்பு விரிந்து, தினசரி உடற்பயிற்சியின் உடம்புக்கு யூனிபார்ம் கன கச்சிதமாக பொருந்தியிருந்தது.



நேராக நீரஜாவின் உடல் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அவர் நடக்கும் போது கவனமாக ஓர் ஓரமாக நடந்து போனார். கீழே காலடித் தடங்கள் இருந்தால் அதை கலைக்காமல் இருக்க வேண்டும் என்பது அவர் உத்தேசம்.



சுதர்சனம் வெளியே வந்து, "இப்பதான் நடந்திருக்கு; இன்னும் ரத்தம் கூட உறையலை. கீழே ஃபுட் மார்க்ஸ் இருக்கு. கவனமா கலெக்ட் பண்ணுங்க. முதலில் கதவில் இருந்து ஆரம்பிங்க!"



பாரன்சிக் ஆட்களிடம் சொன்னதும் இரண்டு பேர் சுறுசுறுப்பானார்கள். மேனேஜரிடம் திரும்பி, "முதல்ல யார் பார்த்தது?" என்றார். மேனேஜர் என்னை கைக்காட்டினார். நான் இன்ஸ்பெக்டர் அருகே சென்றேன்.



"நீங்க இந்த ஓட்டல்ல தங்கியிருக்கீங்களா? நீங்க எதுக்கு இந்த ரூமை எட்டிப் பார்த்தீங்க?"



சுதர்சனம் குரலில் அதிகாரம் இருந்தது. கண்களில் கத்தி இருந்தது.



"சார்! என் பேர் மாதவன். பிரைவேட் டிடெக்டிவ்!"



என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர் கண்களில் மின்னல் வெட்டியது.



நான் ஆரம்பத்தில் இருந்து நீரஜாவின் கதையை ஒன்று விடாமல் சொன்னேன். இப்போது, இந்த விநாடி வரை அனைத்தும் சொல்லி விட்டு அவரைப் பார்த்தேன்.



எல்லாவற்றையும் கடுமையான முகத்துடன் கேட்டு விட்டு, "ஆக மொத்தம் போலீஸுக்கு போகக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்திருக்கீங்க! இப்ப என்னாச்சு? ஒரு அழகான பெண்ணை சாகடிச்சுட்டீங்க!"



நான் அதிர்ந்து, "சார்!" என்றேன்.



"எங்க கிட்ட வந்திருந்தா, அந்தப் பெண் உயிரோடவாவது இருந்திருப்பா! ராங் அட்வைஸ் பண்ணி சாகடிச்சிட்டீங்க!"



"ராங் அட்வைஸா? சார், என்கிட்ட வந்த க்ளைண்டுக்கு நான் நேர்மையா இருந்திருக்கேன். அவங்களை பிளாக் மெயில் பண்ணவனோட போன் நெம்பர் கண்டுபிடிச்சேன். கடைசி, நேரத்தில் இந்த ரூமுக்கு போக வேணாம்னு தடுத்தேன். அவங்கதான் இவ்வளவு பெரிய ஓட்டல்ல கூச்சல் போட்டா யாரும் வர மாட்டாங்களா, என்னன்னு கிளம்பி வந்தாங்க! இந்த ரூம் யார் பேர்ல எடுத்திருக்குன்னு பாருங்க! சிசிடிவி செக் பண்ணுங்க! எல்லாம் தெரிஞ்சுடும்!"



"அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம். நீங்க வெயிட் பண்ணுங்க. எங்கேயும் போகாதீங்க. புரிஞ்சுதா?"



"கீழே ரூம்ல என் ஹேண்ட் பேக்கும், இன்னொரு ரூம்ல காமிராவும் இருக்கு. அதை எடுத்துட்டு வர்றதுக்கு போகலாம் இல்லை?"



சுதர்சனம் என்னை வெறுப்பாய்ப் பார்த்தார்.



"என்ன அவசரம்? வெயிட் பண்ணுங்க!"



நான் அடிபட்டவன் போல் உஷ்ணமாகி விலகி நின்றேன். என் மீதே எனக்கு கோபம் வந்தது. நான் ராங் அட்வைஸ் கொடுத்தேனா? எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நான் துப்புரவாக செய்தேன். என் மூளையை உபயோகித்து அவளுக்கு உதவ முயன்றேன். கடைசியாய் என் உள்ளுணர்வு என்னை எச்சரித்தது. நான் நீரஜாவை எச்சரித்தேன். ஆனால், மிகவும் கண்டிப்புடன் எச்சரிக்கை செய்து அவளை போக விடாமல் செய்யவில்லை. உடனடியாக ரிரப்ஷனைத் தொடர்பு கொண்டு, 412-ம் அறையில் யார் இருக்கிறார்கள்; யார் பெயரில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரித்திருக்க வேண்டும். இதை நான் செய்யவில்லை. அதற்கு எனக்கு சமயமும் இல்லை.



அதுவும் இல்லாமல் நீரஜா சென்றது ஒரு பிளாக்மெயில் செய்பவனிடம் ஏற்படுத்தி கொண்ட ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக! அறையினுள் எந்த வாக்குவாதமும் நடைபெறவில்லை. நீரஜா அறைக்குள் சென்று சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு, "நீ...நீ…" என்றாள்.



அவ்வளவுதான்!



அதன் பிறகு அவள் எதுவும் பேசவில்லை. நான் நீரஜாவின் குரலுக்காக காத்திருந்தேன்.



பிறகு, "நீரஜா! நீரஜா!" என்ற ஆண் குரல் சன்னமாக கேட்டது. அதுவும் மிக மிக மெதுவாக கிணற்றின் ஆழத்தில் இருந்து கேட்டது.



அப்படியானால் என்ன அர்த்தம்?



அதற்குள் பத்து நிமிடங்கள் கடந்து விட்டது. கொலை செய்தவன் அவளை மார்பில் கத்தியால் குத்தி விட்டு, அவள் செத்த பிறகு, அதை உறுதி செய்து கொள்வதற்காக, "நீரஜா! நீரஜா!" என்று அழைத்தானா? அதன் பிறகு அவன் அறையை விட்டு வெளியேறினானா?



அப்புறம், செல்போன் எப்படி அவள் ஹேண்ட் பேக்கில் இருந்து வெளியே வந்தது? செல்போனை நீரஜா ஒருவேளை கையிலேயே வைத்திருந்தாளா?



கையில் வைத்திருந்தால் அறையில் ஏற்படும் சிறு சிறு சத்தங்கள் கூட மெதுவாகவாவது கேட்டிருக்கும்! நீரஜா பேசி இருந்தாலோ, அறையில் இருந்தவன் பேசி இருந்தாலோ நன்றாகவே கேட்டிருக்கும்! அப்படி எதுவும் கேட்கவில்லை. நீரஜாவை கொலை செய்தவன், கொலை செய்த பிறகு, அவள் ஹேண்ட் பேக்கை சோதனை செய்திருக்க வேண்டும்! அவள் செல்போன் உயிருடன் இருப்பதைக் கவனித்து, வேறு இடத்தில், வேறு யாரோ இங்கு நடப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்திருக்க வேண்டும்! செல்போனை அணைத்து, கட்டிலில் எறிந்து விட்டு, கொலையாளி விரைந்து வெளியே சென்று விட்டிருக்க வேண்டும்!



இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்! நான் படு வேகமாக மாடிப்படி ஏறி 412-ம் எண் அறையை அடையும் அவசரத்தில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது எனக்குத் தெரியவில்லை.



அறையில் இன்னும் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. நீரஜாவை சுற்றி அவள் விழுந்து கிடந்த அமைப்பை சாக்பீஸால் கோடு போட்டு ஒரு அவுட் லைனாக வரைந்திருந்தார்கள். பவுடர் அடித்து கால் தடங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த அறையை முழுவதுமாக அலசி எடுத்தார்கள்.



ஒரு கான்ஸ்டபிள் குளியலறையில் இருந்து ஒரு நீளமான, கூர்மையான கத்தியை எடுத்து வந்தார்.



"சார்! கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம்!"



சுதர்சனம் அதை வாங்கிப் பார்த்தார். ரத்தக்றையோடு கைரேகைகளையும் கழுவ முயற்சி செய்தது தெரிந்தது. ரத்தக்கறை முழுவதும் போகவில்லை.



"இந்த கத்தியில் கைரேகை இருக்காது. ஆனா, இதுல இருக்கிற ரத்தம் ஒப்பிட்டு பார்க்க உதவும்!"



சுதர்சனம் கத்தியை பத்திரப்படுத்தச் சொல்லி விட்டு வெளியே வந்தார். அவர் கையில் நீரஜாவின் செல்போன் இருந்தது. கை சொடுக்கி என்னை அலட்சியமாக அழைத்தார். நான் அவரருகில் சென்றேன். ஓட்டல் மேனேஜரும் இன்னொருவனும் சற்று தொலைவில் ஓர் ஓரமாக நின்றிருந்தனர்.



"இந்த நெம்பர் உன்னடையதுதானா? நீரஜா - நீரஜாதானே பேர்?"



"ஆமாம் சார்!"



"கடைசியா நீரஜா உனக்குதான் போன் செஞ்சாங்களா?"



"ஆமா, சார்! என்னோட லைன்ல தான் இருந்தாங்க. நாங்க பேசிய மொத்தமும் என் செல்போன்ல பதிவாகியிருக்கு!"



என் செல்போனை அவரிடம் கொடுத்தேன். அதை ஆராய்ந்து பார்த்தவர், ரெக்கார்ட் செய்யப்பட்டதை ஓடவிட்டு கேட்டார். கொஞ்ச நேரத்தில், "நீ...நீ…" என்பதும், அதன்பிறகு, "நீரஜா! நீரஜா!" என்று ஓர் ஆண் குரலும் கேட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது.



"செல்போன் எங்கிட்டேயே இருக்கட்டும்!" என்றார், என் பதிலை எதிர்பார்க்காமல் ஓட்டல் மேனேஜரிடம் திரும்பி, "இந்த ரூம் யார் பேர்ல புக் பண்ணி இருக்காங்கன்னு செக் பண்ணீங்களா?" என்றார்.



ஓட்டல் மேனேஜர், "நீராஜான்ற பேர்ல சார்!" என்றான்.



நான் திடுக்கிட்டேன்.



"எப்போ புக் பண்ணி இருக்காங்க?"



"இன்னிக்கு காலைல புக் பண்ணி இருக்காங்க சார்!"



"யார் புக் பண்ணினாங்கன்னு தெரியுமா?"



"தெரியாது சார்! நேர்ல வந்திருந்தா சிசிடிவியில கண்டுபிடிச்சிடலாம். ரிசப்ஷன்ல கேமரா இருக்கு. ஆனா, இவங்க போன்ல கூப்பிட்டு புக் பண்ணி இருக்காங்க சார்!"



"போன்ல புக் பண்ணினாலும் நீங்க ஐடி ப்ரூஃப் கேட்பீங்களா?"



"ஆமா சார்! இப்போ எல்லாத்துக்குமே ஐடி ப்ரூஃப் கட்டாயமாயிடுச்சு! ரூம் புக் பண்ணி இத்தனையாவது ரூம்னு மெசேஜ் அனுப்புவோம். அந்த மெசேஜை காட்டினா ரூம் சாவியை கொடுப்போம்!"



இன்ஸ்பெக்டர் சுதர்சனம், தன் மோவாயை யோசனையோடு தடவிக் கொண்டார். மெல்லிய மீசையை நீவி விட்டுக் கொண்டே, "சரி, நீரஜாங்கிற பேர்ல ரூம் புக் பண்ணி இருக்கு; அவங்க என்ன ஐடி ப்ரூஃப் கொடுத்திருக்காங்க?"



"வோட்டர் ஐடி கொடுத்திருக்காங்க சார்! வோட்டர் ஐடியில இப்போ ஆதார் லிங்க் பண்ணச் சொல்லியிருக்காங்க! ஆனா, இவங்க இன்னும் லிங்க் பண்ணாததால வேற போன் நெம்பரில் இருந்து ‌பேசி ரூம் புக் பண்ணி இருக்காங்க!"



"ஓகே! அந்த போன் நெம்பர்; வோட்டர் ஐடி எல்லாத்தையும் குறிச்சு கான்ஸ்டபிள் கிட்ட கொடுங்க!"



சுதர்சனம் இன்னும் என்னை நம்பிக்கை இல்லாமலேயே பார்த்தார். என்னை அழைத்து, "நீரஜாவோட கணவர் போன் நெம்பர் இருக்கா?" என்றார்.



"என்கிட்ட இல்லை சார்! நீரஜா போன்ல இருக்கும்!"



"அவர் மும்பை போயிருக்கிறதா சொன்னீங்க இல்லை?"



"ஆமா சார்! அநேகமா நாளைக்குதான் அவர் வருவார்! ஏன் சார், அவர் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்கா?"



கேட்ட என்னை ஏற இறங்க பார்த்தார்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 17
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.