ஒரு ரகசிய குற்றம் 15

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
"ஆமாம். இதே ஹோட்டல்ல செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நெம்பர் 412-இல் இருக்கானாம்! ஒரே ஒரு மாடி தானே, ஏறி மேல வான்னு சொல்றான். நம்ம பிளானை அவன் கெஸ் பண்ணிட்டான்னு நினைக்கிறேன்."



அடிபட்ட சிறுத்தை போல் எனக்கு கோபம் வந்தது. பொறியில் மாட்டாமல் தப்பிச் சென்ற விலங்கை நினைத்து வெறுப்பை உமிழும் வேடனை போல் உணர்ந்தேன். என்னை விட அவன் வேகமாக சிந்திக்கிறான் என்பதையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.



"இப்ப என்ன செய்றது?" என்றாள்.



"நீங்க போக வேணாம் நீரஜா!" என்றேன். என் உள்ளுணர்வு போக வேண்டாம் என்று என்னை எச்சரித்தது.



"ஏன் போக வேணாம்னு சொல்றீங்க?"



"நாம அவனை பொறியில் சிக்க வைக்கலாம்னு நினைச்சோம். இப்போ அவன் வெச்ச பொறியில் நாம சிக்கிக்குவோம் போலிருக்கு."



"அதுக்காக…? போக வேணாம்னு சொல்றீங்களா?" என்றாள்- என்னை ஏறிட்டுப் பார்த்து,

"அதுக்காக மட்டும் இல்ல. இதுல ஏதோ விபரீதமாக இருக்குமோன்னு தோணுது."



"என்ன விபரீதம்?"



"என்னன்னு எனக்கு புரியல. ஆனா, என் உள்ளுணர்வு ஏதோ விபரீதமா நடக்கப் போகுதுன்னு மட்டும் சொல்லுது."



"என்ன விபரீதம் நடக்கும்னு சொல்றீங்க? இந்த ஹோட்டல்ல ஆட்கள் நடமாடிட்டுதானே இருக்காங்க? என்ன நடந்துடும்? நான் போய் பார்க்கிறேன்! என்னை பிளாக் மெயில் பண்ணினவன் யாருன்னு நான் பாக்கணும். ரூமுக்குள்ள போன பின்னாடி கூட நான் என்னுடைய முடிவை மாத்திக்கிட்டு திரும்பி வர முடியும்!"



படபடவென்று கோபமாகப் பேசிக் கொண்டே தன் ஹேண்ட் பேக்கையும் செல்போனையும் எடுத்துக் கொண்டு நடந்தவளை நான் நிறுத்தினேன்.



" நீரஜா இருங்க, ஒரு நிமிஷம்! இந்த கேமிரா இருக்கிற ஹேண்ட் பேகையாவது எடுத்துட்டுப் போங்க."



"ரெண்டு ஹேண்ட் பேக் எப்படி எடுத்துட்டு போக முடியும்?"



"உங்க ஹேண்ட் பேக்கை விட்டுட்டு இதை எடுத்துட்டுப் போங்க."



"வேணாம் மாதவன் சார்!"



"ஏன் வேணாம்ங்கிறீங்க?"



"ஹேண்ட் பேக் ஒரே இடத்தில் இருந்தா மட்டும்தான் சரியா இருக்கும். அவன் முகம் தெரியணும்னா அதுக்கு தகுந்த மாதிரி ஹேண்ட் பேக்கை திருப்பிப் பிடிக்கணும். அது ரொம்ப ரிஸ்க்! முடியாது! அதில்லாம அவன் ஏற்கனவே சந்தேகப்பட்டுதான் இதே ஹோட்டல்ல ஒரு ரூம் புக் பண்ணியிருக்கான். நாம ஹோட்டலுக்கு வந்து அவனுக்கு போன் பண்ண பின்னாடி நம்மை அவன் ரூமுக்கு வரச் சொல்றான். அதனால அவனும் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் இருக்கான்."



"அதான் நானும் சொல்றேன். நீங்க தனியா போய் மாட்டிக்கப் போறீங்கன்னு எனக்கு பயமா இருக்கு."



"என்னுடைய அனுமதி இல்லாம அவன் என்னை ஒண்ணும் பண்ண முடியாது. கூச்சல் போட்டா பக்கத்து ரூம்ல இருந்து யாராவது வர மாட்டாங்களா?"



"வருவாங்க. இருந்தாலும்… நான் சொல்ற இதையாவது கேளுங்க. உங்க செல்போன்ல இருந்து எனக்கு கால் பண்ணுங்க!"



நீரஜா என் செல்போன் நம்பரை அழைத்ததும் எனக்கு ரிங்டோன் வந்தது நான் செல்போனை 'ஆன்' செய்து விட்டு, "எந்த காரணத்தைக் கொண்டும் போன் காலை கட் பண்ணாதீங்க. நான் லைனிலேயே இருக்கேன். செல்போனை கையிலேயே வச்சுக்கிட்டு நீங்க ரூமுக்குள்ள போங்க. அவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி இருந்தா போனை ஹேண்ட் பேக்ல போட்டு வெச்சுக்குங்க. ஏதாவது உங்களுக்குத் தப்பா தோணுச்சுன்னா சத்தமா ஒரு குரல் கொடுங்க. அதிகபட்சம், பதினைந்து செகண்ட்ல நான் அந்த ரூமுக்குள்ள இருப்பேன்."



நீரஜாவுக்கு இப்போது ஏதோ ஓர் அசாத்திய தைரியம் வந்திருந்தது. அவள் அந்த அறையை விட்டு செல்லும் போது, எச்சரிக்கையா இருங்க. செல்போனை கட் பண்ணாதீங்க" என்றேன். அவள் கதவை திறந்து கொண்டு என் பார்வையை விட்டு மறைந்தாள். நான் கதவை திறந்து கொண்டு அறைக்கு வெளியே போகும் நீரஜாவை எட்டிப் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டேன். செல்போனை காதில் ஒட்ட வைத்துக் கொண்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டு, நடப்பதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டும்.



நீரஜா, படிக்கட்டுகளில் ஏறி அந்த 412-ம் அறையை அடைவதற்கு அதிகபட்சமாக ஒன்றரை நிமிடங்கள் ஆகலாம். அவள் நடந்து போகும்போது ஏற்படும் சிறு சிறு சத்தங்கள் மென்மையாகக் கேட்டது. அறைக்குச் சென்று கதவு தட்டும் சத்தம் சற்று கூடுதலாக இருக்கும் கேட்டது. "கதவு திறந்து இருக்கு!" என்று நீரஜா சொன்னது எனக்குதான். நான் கூர்மையானேன். வலது காது, ஒலியைத் துல்லியமாகக் கணக்கிட்டது.



சிறு சிறு சலனங்கள்!



"யாரும் இல்லையா?" என்ற நீரஜாவின் மெல்லிய குரல்.



சிறிது நேரம் அமைதியாகக் கடந்த பிறகு…



"நீ … நீ…"



நீரஜாவின் அரைகுறையான வார்த்தைகள்!



சின்னச் சின்ன ஒ சை க ள்!



பிறகு -



அமைதி!



துல்லியமான அமைதி!



அநேகமாய் நீரஜா செல்போனை தன் ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.



'சொத்'தென்ற சத்தம் அதை உறுதி செய்தது. அது, செல்போன் வைத்திருந்த ஹேண்ட் பேகை கட்டிலில் வைக்கும் சத்தமாக இருக்கும்.



நான் காத்திருந்தேன்; நீரஜா பேசுவதற்கு! அந்த முகம் தெரியாதவன் பேசுவதற்கு!



காத்திருந்தேன். காத்திருந்தேன். காத்திருந்தேன்.



கும்மிருட்டு மயான அமைதி!



எனக்குப் புரியவில்லை. நான் தவித்தேன்.



வலது காதில் ஒட்டி இருக்கும் செல்போன் வழியாக உள்ளே நுழைந்து, அந்த 412 -ம் அறைக்குள் போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஏதாவது விபரீதமாக நடந்திருக்குமா என்று விபரீதமான கற்பனைகள் எனக்குள் ஓடியது. விபரீதமாக இருந்தால் நீரஜா குரல் கொடுத்திருப்பாள் என்றும் மனதுக்குள் எண்ணங்கள் குழப்பமாக அலைந்தது. போய்ப் பார்க்கலாமா என்று துடிப்பு எழுந்தது.



"நீ ...நீ…" என்று நீரஜா செல்போனில் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டேன்.



அப்படியானால், நீரஜாவுக்கு ஏற்கனவே அறிமுகமான நபராகத்தான் இருக்க வேண்டும்!



அப்படியானால், நான் காத்திருக்கத்தான் வேண்டும்!



காத்திருந்தேன்.



காத்திருக்கும் போது, முடிவில்லாத, விபரீதமான கற்பனைகள் தோன்றுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.



அறையினுள் என்ன நடக்கிறது?



ஏன் அமைதியாக இருக்கிறது?



நீரஜா ஏன் பேசவில்லை?



அந்த, அவன் ஏன் பேசவில்லை?



ஹாண்ட் பேகில் இருக்கும் நீரஜாவின் செல்போன் இன்னும் என் செல்போனின் தொடர்பில்தான் இருக்கிறது. சிறு சிறு சத்தங்கள் கூடவா கேட்காமல் இருக்கும்?



எதுவும் தெரியாமல் எப்படி போய்ப் பார்ப்பது?



ஏதோ சத்தம் கேட்டது.



என் சகல புலன்களும் காதுகளாய் மாறி உன்னிப்பாக கவனிக்க…



"நீரஜா! நீரஜா!"



ஓர் ஆண்குரல்!



கிணற்றின் ஆழத்தில் இருந்து கேட்டது.



குரலை இனம் காண முடியவில்லை!



அவ்வளவுதான்!



அதன் பிறகு -



மீண்டும்... கனத்த பத்து 'டன்' மெளனம்!



என்ன நடக்கிறது?



என்னை அறியாமல் நான் கட்டிலை விட்டு எழுந்து விட்டிருந்தேன்.



"நீரஜா! நீரஜா!" என்று ஒரு ஆண் நீரஜாவை அழைத்ததன் அர்த்தம் என்ன?



அப்படியானால்…? அப்படியானல் …?



நீரஜாவுக்கு என்ன?



நான் இருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு, பாய்ண்ட் 38 துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு போல் பாய்ந்தேன். அப்போதுதான் ஓர் அறையில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த ஒருவர் என் புயல் வேகத்துக்கு பயந்து கதவை மூடிக் கொண்டு, மீண்டும் திறந்து பார்க்கும் போது நான் காணாமல் போயிருந்தேன். படிக்கட்டுகளில் பறந்தேன். மூன்று மூன்று படிக்கட்டுகளாய்த் தாவினேன். இரண்டாம் மாடி வராண்டாவில் நான் பாய்ந்த போது, விளக்கொளியில், வராண்டாவின் கோடியில் ஒருவன் சென்று மறைந்தான். யாரோ ஒரு பெண் சத்தம் கேட்டு ஒரு அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் வாயும், கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அறை எண் 412 ஐ அணுகினேன். ஓடும் வேகத்தில் நிற்க முடியாமல் சறுக்கிக் கொண்டு 412-ம் அறையைத் தாண்டிச் செல்ல இருந்தேன். நல்ல வேலையாக வாசல்படியின் விளிம்பைப் பற்றிக் கொண்டு நின்றேன். அறைக் கதவு லேசாகத் திறந்திருந்தது. காட்டெருமை போல் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.



நுழைந்தவன்… 1500 மெஹா வாட் மின்சாரக் கம்பியைத் தொட்டது மாதிரி அதிர்ச்சியில் உறைந்து, உடல் அதிர நீரஜாவை பார்த்தேன்.



என்னால் நம்பவே முடியவில்லை.



நீரஜா அந்த அறையின் வழவழப்பான தரையில் விழுந்து கிடந்தாள். நீல நிற புடவையின் மார்பு பகுதியில் இருந்து புது ரத்தம் வழிந்து தரையில் மெல்ல பரவ ஆரம்பித்திருந்தது. புடவை கணுக்கால் வரை உயர்ந்து வாழைத்தண்டு மாதிரி பளபளப்பாகத் தெரிந்தது. அவள் கண்கள் மேலே சொருகி கொண்டு, உதடுகள் கடைசி நேர வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையில் விரிந்து உறைந்திருந்தது. கைகளில் ஒன்று தலைக்கு மேலும் இன்னொன்று வீசுவது மாதிரி விரிந்தும் இருந்தன.



"நீரஜா! நீரஜா!" என்றேன்.



அவளிடம் சலனம் இல்லை!
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 15
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.