ஒரு ரகசிய குற்றம் 14

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே



விளக்கம்:



ஒருவன் தனது வாழ்நாள் எல்லையை அளந்து அறிந்து கொள்ள எண்ணுபவன், தனது கையை தலையின் மேல் வைத்ததும் இயல்பான எடையாய்த் தோன்றினால் அவனது வாழ்நாளுக்கு நன்மை. மிகுந்த எடையுள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஆறு மாதங்கள் மட்டுமே! மேலும் இரண்டு மடங்கு அதிக எடை உள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஒரு மாதம் மட்டுமே!



பாடல் 770: மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரிட்சை





மறுநாள் காலை பரபரப்பாக விடிந்தது. நான் இன்னொரு வேலை செய்ய வேண்டியிருந்தது. மிகச்சிறிய வேலைதான். நேற்றே அதை செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதற்கு காரணம் எதுவுமில்லை.



காலையில் வீட்டை விட்டு கிளம்பி நேராக ஒரு ஃபேன்சி ஸ்டோரில் ஒரு லேடிஸ் ஹேண்ட் பேக் வாங்கிக் கொண்டு அலுவலகக்கு வந்தேன்.



நேற்று கேமரா பொருத்திய பொம்மையை அந்த சிறிய ஹேண்ட் பேக்கில் பொருத்த முடிவு செய்தேன்.



ஹேண்ட் பேக்கில், வெளிப் பகுதியில் அலங்காரத்துக்காக பொருத்தப்பட்ட ஒரு எவர்சில்வர் பட்டனை அகற்றினேன்.



அந்த இடத்தில் இருந்த மிகச்சிறிய துளையை சிறிது பெரிதாக்கினேன். ஹேண்ட் பேக்கில் பொம்மையை வைத்து கேமரா பொருத்திய கண்ணை அந்த சிறிய துளைக்கு நேராக வைத்து, உள்ளே பொம்மையை பெவிகால் போட்டு ஒட்டினேன்.



இப்போது சிறிய ஹேண்ட் பேக்கில் அந்த சிறிய பொம்மை இருந்தது. அந்த பொம்மையின் ஒரு கண்ணில் கேமரா இருந்தது. அந்த கேமரா சரியாக அந்த சிறிய துளையில் பொருந்தியிருந்தது.



அந்த ஹேண்ட் பேக்கை என் அலுவலகத்தின் ஒரு மேஜை மீது வைத்து விட்டு, அதை என் செல்போனில் ப்ளூடூத்துடன் இணைத்து, சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்த்தேன்.



அது அற்புதமாக வேலை செய்தது.



ஹேண்ட் பேக்கில் ஒரு கேமரா இருக்கிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சந்தேகப்பட்டு பேக்கை திறந்து பார்த்தாலும் ஒரு சிறு பொம்மை இருப்பதாகத் தான் நினைப்பார்கள். ரொம்ப கவனமாக ஹேண்ட் பேக்கில் கைவிட்டு பார்த்தால்தான் அதை உள்ளே ஹேண்ட் பேக்கோடு ஒட்டி இருப்பதை கண்டுபிடிக்க முடியும். அவசரத்தில் கை விட்டு துழாவினால் ஒட்டியிருப்பது பிரிந்து வந்து விடும். இப்படி எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க கொஞ்சம் அறிவும், கொஞ்சம் அதிர்ஷ்டமும், கொஞ்சம் பொறுமையும் ஒருவருக்கு வேண்டும்.



மாலையில் வானிலை தெளிவாக இருந்தது. ஹேண்ட் பேக்கை மிகவும் எச்சரிக்கையாக எடுத்து என்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு, அதை முதுகில் மாட்டிக் கொண்டு, உற்சாகமாக விசில் அடித்தபடி ஒரு சாகசத்தை நிகழ்த்தப் போகும் நினைவுடன் 'கோல்டன் ஸ்பாட்' ஹோட்டலை வந்தடைந்தேன்.



இறங்கி ரிசப்ஷன் பதுமையிடம் செல்போன் மெசேஜை காட்டினேன். ரிசப்ஷனில் இப்போது வேறு ஒரு பதுமை மாறி இருந்தது. நல்ல குட்டைக் கட்டையாக இருந்தவள் மெசேஜை பார்த்து, கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு, 305, 306-ம் நம்பர் அறைகளின் சாவியை எடுத்து கொடுத்தாள். "ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கு சார்!" என்றாள்.



சாவியைப் பெற்றுக் கொண்டு, நீண்ட வராண்டாவில் நடந்து, கோடியில் இருக்கும் படிக்கட்டுகளில் ஏறி முதல் தளத்திற்கு வந்தேன்.



அங்கே ஒரு நீண்ட வராண்டா. இரண்டு புறமும் அறைகள்.



வராண்டாவில் நடந்தேன்.



வலது பக்கத்தில் 305 306 எண் கொண்ட அறைகள் பக்கத்து பக்கத்தில் இருந்தன.



நான் முதலில் 305-ம் எண் அறையைத் திறந்து உள்ளே நுழைந்ததும், உள் பக்கம் பூட்டிக்கொண்டு அறையை பார்த்தேன்.



மிகத் தூய்மையாக இருந்தது. கட்டில், மெத்தை, தலையணை, சிறிய மேஜை, அலமாரி, டிவி, அட்டாச்டு பாத்ரூம்.



ஹேண்ட் பேக்கை கட்டிலின் தலைமாட்டில் இருக்கும் அலமாரியின் கீழ் விளிம்பில் வைத்தேன்.



செல்போனில் கேமராவை இயக்கி ஹேண்ட் பேக்கை வாசலை நோக்கி சரி செய்து வைத்து விட்டுப் பார்த்தேன்.



அந்த அறையின் முக்கால் பகுதி செல்போனில் தெரிந்தது.



மிகவும் திருப்தியாக கதவை வெறுமனே சாத்தி விட்டு, அடுத்த 306-ம் எண் அறைக்கு வந்து, நீரஜாவுக்கு போன் செய்தேன்.



"எங்க இருக்கீங்க, நீரஜா?" கேட்டேன்.



"ஹோட்டலுக்கு வெளியே காரில் இருக்கேன்" நீரஜா பதில் சொன்னாள்.



"சரி, உள்ளே நுழைஞ்சு நேரா முதல் மாடிக்கு வாங்க! ரூம் நம்பர் 305! கதவு சும்மாதான் சாத்தி இருக்கும். திறந்திட்டு உள்ளே போங்க. உள்ளே 'பெட்'டுக்கு மேலே ஒரு ஹேண்ட் பேக் இருக்கு. அதுல ஒரு சிறிய கேமரா பொருத்திய பொம்மை இருக்கு."



"என்னது? கேமரா பொருத்திய பொம்மையா? என்கிட்ட நீங்க இதை பத்தி சொல்லவே இல்லையே?"



"நேத்து நீங்க என்கிட்ட பேசிட்டு போன பிறகு எனக்கு இந்த ஐடியா தோணுச்சு. ஒரு சின்ன கேமராவை ப்ளூடூத் ல கனெக்ட் பண்ணி, செல்போன்ல பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு கேமராவைத் தான் ஒரு சின்ன பொம்மையில் பொருத்தி, அந்த பொம்மையை ஹேண்ட் பேக்ல, 'பெவிக்கால்' போட்டு ஒட்டி வெச்சிருக்கேன்."



"சரி."



"அந்த கேமராவை என் செல்போனோடு கனெக்ட் பண்ணி இருக்கேன்."



"சரி."



"அதனால அந்த ஹேண்ட் பேக்கை எடுக்கவோ திருப்பி வைக்கவும் செய்யாதீங்க. நான் பக்கத்து ரூம்ல இருக்கேன். நீங்க உள்ளே போயிட்டு அவனுக்கு போன் பண்ணி, ரூம் நம்பர் 305-க்கு வரச் சொல்லுங்க. பயப்படாதீங்க! ரூம்ல என்ன நடக்குதுன்னு நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன்."



நீரஜா, "சரி." என்றாள்.



போனைத் துண்டித்தேன்.



செல்போனில் கேமிராவை இயக்கி, பார்த்துக்கொண்டிருந்தேன்.



305-ம் எண் அறைக் கதவு மூடியிருந்தது, செல்போனில் தெரிந்தது.



அந்தக் கதவு திறக்கப் போவதற்காகக் காத்திருந்தேன். என் அறையில் ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது.



ஒரு சில நிமிடங்கள்…



மௌனத்தில் கரைந்தன.



அறைக் கதவை திறந்து கொண்டு நீரஜா உள்ளே நுழைவது தெரிந்தது.



உள்ளே நுழைந்தவள், மெல்லிய நீல நிற வழுக்கும் சேலை கட்டியிருந்தாள். இடுப்புக்கு நிறைய இடமளித்து கீழிறக்கி கட்டப்பட்ட சேலையில் தெளித்தாற் போல் சில ஜரிகை வேலைபாடுகள் தெரிந்தன.



உள்ளே நுழைந்து கதவை மூடினாள். அதே கடல் நீலத்தில் , அதே போல் முதுகுக்கு நிறைய இடம் கொடுத்து தைத்த ஜாக்கெட் அணிந்திருந்தாள். திரும்பி நடந்து தன் சிறிய ஹேண்ட் பேகை கட்டிலின் மீது வைத்து விட்டு, நான் அலமாரிக்குக் கீழ் கேமரா வைத்திருக்கும் பக்கம் பார்த்தாள். அதை நோக்கி தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். பிறகு, தன் செல்போனை எடுத்து, எண்களைத் தடவி, பிளாக்மெயில் செய்தவனுக்கு அழைப்பு விடுத்தாள். அவள் அழைப்பு ஏற்கப்படவில்லை என்று தோன்றியது. இரண்டாம் முறை முயற்சித்தாள்.



இம்முறை அவள் அழைப்பு ஏற்கப்பட்டடிருக்க வேண்டும்.



மீண்டும் கேமிராவை பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். எதிர் முனையில் அழைப்பு ஏற்கப்பட்டு அவள் பேசுவது தெரிந்தது. அவள் கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள். அவள் முகம் மாற்றம் அடைவதைக் கவனித்தேன். மீண்டும் வேகமாக கையை ஆட்டிப் பேசினாள்.



பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏதோ ஒரு புதுப் பிரச்சினை தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றியது.



நான் என் சகல புலன்களையும் மூளையையும் எச்சரிக்கை நிலைக்குக் கொண்டு வந்திருந்தேன்.



நீரஜா, பேசி முடித்து விட்டு தன் செல்போனை கோபமாக் கட்டிலில் எறிந்து விட்டு கேமிராவை பார்த்தாள். அவள் முகம் இறுக்கமாக இருந்தது. என்ன நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.



நான், செல்போனில் கேமிராவை அனைத்து விட்டு நீராஜாவுக்கு போன் செய்தேன்.



"ஹலோ!" நீரஜாவின் பதட்டமான குரல்.



"என்ன நீரஜா? ஏதாவது பிரச்சினையா?" என்றேன்.



"ஆமா சார்! நாம போட்ட திட்டம் எல்லாம் வீண்!'



"நீங்க என்ன சொல்றீங்க?"



"ஆமா சார்! அவன் இங்க - இந்த ரூமுக்கு வர மாட்டானாம்!"



"ஏன் வர மாட்டானாம்?"



"தெரியலை."



"சரி, இருங்க. நான் உங்க ரூமுக்கு வர்றேன்."



போனை அணைத்து விட்டு, கதவு திறந்து இரண்டு பக்கமும் பார்த்தேன்.



வராண்டாவில் வெள்ளமாய் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருந்தது.



நடமாட்டம் இல்லை என்று தெரிந்து கொண்டு, சட்டென்று அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு, உள்ளே நுழைந்தேன்.



நீரஜா நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் ரத்தம் இழந்து வெளிறிப் போயிருந்தது.



மன்னிக்கவும்.



செல்போனில் பார்த்ததை விட, நேரில் பார்க்கும் போது மூர்க்கத்தனமாக மூச்சு முட்டுவது போல் இருந்தது அவள் அழகு. அவள் மீது நறுமணம் வீசியது. நானாக இருந்தால், பணமாவது, சொத்தாவது? நீரஜா மட்டும் அருகில் இருந்தால் போதும் என்று இருக்கிற என் எல்லா சொத்துக்களையும் காமன் பெயரில் எழுதி வைத்து விட்டு நீரஜாவை சரணடைந்திருப்பேன்.



இவன்கள் என்னடாவென்றால், இந்த அழகிய தேவதையை இப்படி அலைக்கழிக்கிறார்கள்!



நான் கதவை மூடிவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் எனக்கு வழிவிட்டு, முன்னே சென்று கட்டிலில் அமர்ந்தாள். நான் அவள் பின்னால் சற்று இடைவெளி விட்டு நடந்து சென்று கட்டிலின் விளிம்பில் அமர்ந்து, "என்னாச்சு?" என்றேன்.



"அவன் இங்க வர மாட்டானாம்!" என்றாள்.



"ஏன், வர மாட்டானாம்?"



"அதுக்கெல்லாம் அவன் பதில் சொல்லலை."



"வேறென்ன சொன்னான்?"



"என்னை அவன் ரூமுக்கு வரச் சொன்னான்!"



"அவன் ரூமுக்கா?"



"ஆமாம்."



"எங்க?"



"இதே ஹோட்டல்ல!"



"இதே ஹோட்டலிலா?"



நான் இதை எதிர்பார்க்கவில்லை.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 14
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.