ஒரு ரகசிய குற்றம் 12

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
நான் சொல்வதைக் கேட்டு நீரஜாவின் விழிகளும் உதடுகளும் விரிந்தன. அதிர்ச்சியிலும் எப்படி இவள் இப்படி அழகாகத் தெரிகிறாள் என்று நான் ஒரு விநாடி யோசித்தேன்.‌



"நீங்க என்ன சொல்றீங்க மாதவன் சார்? நான் ஒரு நாளைக்கு அவன் கூப்பிட்டா போகணுமா?" என்றாள்.



நான் பொறுமையாக, "ஆமாம்." என்றேன்.



"என்னால நிச்சயம் முடியாது. ஏதோ ஒரு முறை தவறு செஞ்சேங்கிறதுக்காக திரும்பத் திரும்ப என்னால இழுத்த இழுப்புக்கெல்லாம் போக முடியாது."



"நான் சொல்றதை முதல்ல பொறுமையா கேளுங்க நீரஜா. உங்களை பிளாக்மெயில் பண்றவன் யாருன்னு நாம தெரிஞ்சுக்கணும். நீங்க இதுக்கு சம்மதிச்சா மட்டும் தான் அடுத்து அவனோட பிளான் என்னன்னு நமக்குத் தெரியும். விக்ரம்தான் உங்களை பிளாக்மெயில் பண்றான்னு நமக்குத் தெளிவா தெரியுது. நீங்க வர்றேன்னு ஒத்துக்கிட்டா அவன்தான் குழம்புவான். அவனோட திட்டம் உங்களை பயமுறுத்தி, உங்க கணவரை விட்டு நீங்க விலகி வரணும். அதுதான் அவனோட எண்ணம். ஆனா, நீங்க ஒரு நாளைக்கு ஒத்துக்கறேன்னு சொன்னதும், அடுத்து என்ன பண்றதுன்னு அவன் யோசிப்பான். முதல்ல அவன் சொல்றதுக்கு நீங்க ஒத்துக்கோங்க! அப்புறம் அவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்."



"சரி, ஒத்துக்கறேன். அடுத்து அவன் என்ன பண்ணுவான்?"



"உங்களை பிளாக்மெயில் பண்றவன் நிச்சயமா விக்ரமா இருந்தா குழம்புவான். வேற ஆளா இருந்தா, 'சரி, வா'ன்னு சொல்லுவான்."



"வேற ஆளா இருந்தா?"



"போங்க. ஆனா, அவன் கூப்பிடற இடத்துக்கு இல்லை."



"பின்ன?"



"நீங்க சொல்ற இடத்துக்கு அவனை வர வைங்க!"



"அதுக்கு அவன் ஒத்துக்கணுமே?"



"என் பாதுகாப்பு எனக்கு முக்கியம்னு சொல்லி புரிய வையுங்க. ஏற்கனவே விக்ரமோட தொடர்பு உனக்குத் தெரிஞ்சு நீ என்னை பிளாக்மெயில் பண்ணிட்டிருக்கே; நான் இன்னொரு சிக்கல்ல மாட்டிக்க விரும்பலை. அதனால நான் சொல்ற இடத்துக்கு நீதான் வரணும். அப்போதான் நீ சொல்றதுக்கு நான் ஒத்துக்க முடியும்னு சொல்லுங்க.''



"அவன் பிடிவாதமா ஒத்துக்கலைன்னா என்ன பண்றது?"



"வேணும்னா இப்படி சொல்லுங்க. 'ஒரு பப்ளிக் லாட்ஜில் - அவன் எந்த லாட்ஜில் ரூம் போடச் சொன்னாலும் சரி; அந்த லாட்ஜில் ரூம் புக் பண்ணிட்டு உனக்கு போன் பண்றேன், வா'ன்னு சொல்லுங்க. உனக்கும் பிரச்சினை இல்லை; எனக்கும் பிரச்சினை இல்லைன்னு சொல்லுங்க. அவன் ஒத்துக்குவான்!"



"சரி, அதுக்கப்புறம்?"



"இந்த இடத்தில் இருந்து நான் உங்களுக்கு ஒரு திட்டம் சொல்றேன். கவனமா கேளுங்க."



"சரி!" என்றாள் நீரஜா.



"இப்ப எல்லா ஓட்டல்லேயும் லாட்ஜ்லேயும் சிசிடிவி கேமரா இருக்கு இல்லையா?"



"ஆமாம்."



"ஸோ… நீங்க எதுக்கும் பயப்படாதீங்க! ஓகே வா?"



நீரஜா தலையாட்டினாள்.



"அவன் எந்த லாட்ஜில் ரூம் புக் பண்ண சொல்றானோ அந்த லாட்ஜிக்கு நான் முன்னாடியே போயிடுறேன். உங்களுக்கு ஒரு ரூம்; எனக்கு ஒரு ரூம் பக்கத்து பக்கத்துல புக் பண்ணிடறேன்."



"சரி."



"நீங்க உங்க ரூமுக்கு போயிட்டு அவனுக்கு போன் பண்ணுங்க; சரியா?"



"சரி."



"நீங்க ரூம்ல இருக்கும்போது, உங்க செல்போன் சாதாரணமா வெளியில தெரியற மாதிரி வெச்சுக்கோங்க! இன்னொரு செல்போன்‌ உங்க ஹேண்ட் பேக்ல இருக்கட்டும்."



"ரெண்டு செல்போன் எடுத்துட்டு போகணும்னு சொல்றீங்களா?" என்றாள் நீரஜா.



"ஆமாம்."



"அவன் வந்து கதவை தட்டுவான். நீங்க கதவை திறக்கறதுக்கு முன்னாடி ஹேண்ட் பேக்ல இருக்கிற செல் போன்ல இருந்து என் செல்போனுக்கு கால் பண்ணுங்க. நான் என் செல்போனை ஆன் பண்ணிட்டு உங்க ரூம்ல என்ன நடக்குதுன்னு கேட்டுட்டு இருக்கேன். எனக்கு நீங்க கால் பண்ணிட்டு அந்த செல்போனை மறுபடியும் ஹேண்ட் பேக்ல வச்சுக்கோங்க. உங்க கையில இருக்கிற செல்போன் நார்மலாகவே அவனுக்கு தெரிகிற மாதிரி இருக்கட்டும்."



"ஏன், ரெண்டு செல்போன் யூஸ் பண்ணனும்? என் செல்போனிலேயே கால் பண்ணிட்டு அதை தெரியாம வச்சுக்கலாம் இல்லையா?"



"இல்லை; அவனுக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது."



"சரி."



"உங்களுக்கு ஏதாவது ஆபத்துன்னா நான் உடனே வர்றேன்."



"சரி, எல்லாம் ஓகே! வர்றது விக்கிரமா இருந்தா நான் என்ன பண்றது? வேற ஆளா இருந்தா என்ன பண்றது?"



நீரஜா கேட்டுவிட்டு என்னைப் பார்த்தாள்.



"ரூமுக்குள்ள விக்ரம் வந்தாலும் சரி; வேற யாராவது வந்தாலும் சரி; ஒரே ஒரு விஷயம்தான். அவன்கிட்ட என்ன ஆதாரம் இருக்குன்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். நீங்களும் விக்ரமும் இருக்கிற போட்டோஸ், வீடியோஸ் ஏதாவது இருக்கான்னு காட்ட சொல்லுங்க. அதெல்லாம் எதுவும் இல்லைன்னா நீங்க பயப்படத் தேவையில்லை. அப்படி இருந்ததுன்னா தான் நீங்க அவன்கிட்ட பேரம் பேச வேண்டி வரும்!"



"என்ன பேரம்?"



"முதலாவது, எங்க கணவருக்குத் தெரிய கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். உனக்கு பணம் வேணும்னா வாங்கிட்டு உன்கிட்ட இருக்கிற ஆதாரத்தை கொடுத்துட்டு போய்கிட்டே இரு. இல்லை, எனக்கு பணமும் வேணும்; நீயும் வேணும்னு பிடிவாதம் பிடிச்சேன்னா... இந்த இடத்தில் பேச்சை நிறுத்தி அவனை ஒரு பார்வை பாருங்க!" என்று சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தேன்:



"நீ என்ன என் ஹஸ்பண்ட் கிட்ட சொல்றது; நானே சொல்லிடுறேன்னு சொல்லுங்க! உனக்கு பணமும் கிடையாது; நானும் கிடையாது! நீ என்னை பிளாக் மெயில் பண்றேன்னு நானே போலீஸ்ல சொல்லி உன்னை பிடிச்சு கொடுத்துடறேன்னு சொல்லி நீங்க அவனை மிரட்டுங்க. நீ எதுக்குமே ஒத்துக்கலைன்னா, எல்லாத்தையும் தெளிவா லெட்டர் எழுதி வெச்சுட்டு செத்துப் போயிடுவேன்னு சொல்லுங்க. இப்ப நாம பேசறது எல்லாம் ரெக்கார்ட் ஆயிட்டு இருக்குன்னு சொல்லுங்க."



"அவன் இதுக்கெல்லாம் பயப்படலைன்னா?"



"கண்டிப்பா பயந்துதான் ஆகணும்! ஏன்னா, நீங்க எதுக்கும் துணிஞ்சிட்டீங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சிடும். வந்தவரைக்கும் லாபம்னுதான் நினைப்பான்!"



நான் சொன்ன எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த நீரஜா, "இருந்தாலும் எனக்கு பயமாவே இருக்கு!" என்றாள்.



"நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. பக்கத்து ரூம்ல நீங்க பேசுறதை எல்லாத்தையும் நான் கேட்டுகிட்டு இருக்கேன். எல்லாமே ரெக்கார்டு ஆயிட்டு இருக்கு. எல்லாம் சுமூகமாக முடிஞ்சிடுச்சின்னா ரெக்கார்ட் பண்றதை உங்க கிட்டேயே கொடுத்திடுவேன். அப்படி இல்லேன்னா, அது ஒரு எவிடன்ஸ்ஸா உபயோகப்படும்; சரிங்களா?"



"சரி." என்று புன்சிரித்தாள் நீரஜா. அவள் முகத்தில் இப்போதுதான் தைரியம் வந்திருந்தது.



"இப்போ, தைரியமா நீங்களே போன் பண்ணிச் சொல்லிடுங்க!"



"ரெண்டு நாள் டைம் வெச்சிருக்கானே!"



"ரெண்டு நாள்ல நீங்க இதுக்கு ஒத்துக்கணும்ன்னு சொல்லி இருக்கான். அதனால, 'என் கணவர் மும்பை போய் இருக்கார். வர்றதுக்கு மூணு நாள் ஆகும். அதுக்குதான் போன் பண்ணினேன்னு சொல்லுங்க. அவர் இல்லாதப்பவே இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்னு சொல்லுங்க."



நீரஜா தன் செல்போனில் அவனுடைய எண்ணை எடுத்து அவனை அழைத்தாள்.



"ரிங் போகுதா?" என்றேன் ஆர்வமாக. நீரஜா தலையாட்டினாள்.



"எடுத்துப் பேசினா ரெக்கார்ட் பண்ணுங்க! ஸ்பீக்கர்ல போடுங்க!" என்று எழுந்து சென்று கதவை மூடி விட்டு, லைட்டைப் போட்டு விட்டு வந்தேன்.



அழைப்பு செத்துப் போகும் கடைசி வினாடியில் எடுத்தான். நீரஜா ரெக்கார்ட் மற்றும் ஸ்பீக்கரை இயங்கி விட்டு, "ஹலோ!" என்றாள்.



"என்ன பேபி! என்னை உற்சாகப்படுத்துற மாதிரி செய்தி இருக்கா, என்ன? நீயே போன் பண்ற?"



எதிர்முனையில் கேட்ட கரகரப்பான குரலை உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.



"சொல்லு, என்ன விஷயம்?"



"நீ சொல்றதை நான் யோசிச்சு பார்த்தேன்."



"யோசிச்சு பார்த்து என்ன முடிவு பண்ணி இருக்க?"



"எனக்கு வேற வழி தெரியல. நீ சொல்றதுக்கு நான் ஒத்துக்கறேன்."



எதிர்முனையில் பத்து வினாடி மௌனம் நிலவியது.



"நீ என்ன, உண்மையாவா சொல்ற?"



"ஆமா, உண்மையாதான் சொல்றேன். எங்க வீட்டுக்காரர் மும்பை போய் இருக்கார். அவர் திரும்பி வர்றதுக்குள்ள இந்த பிரச்சனையை சுமூகமாக முடிச்சிடணும்னு நினைக்கிறேன்."



"அப்படியா? மும்பையிலிருந்து எப்போ வர்றார்?"



"நாளான்னிக்கு."



"அப்போ நான் சொன்னதுக்கு ஓகேயா?"



"பணம் எவ்வளவு வேணும்னு கேளு தரறேன். இன்னொரு விஷயத்துக்கு நான் ஒத்துழைக்கணுமான்னு கொஞ்சம் யோசிக்கிறியா? மேலும் மேலும் நான் தப்பு பண்ணனுமான்னு நினைக்கிறேன்."



"ஒரு முறை தப்பு பண்ணியாச்சு. என்னோடவும் ஒரு முறை தப்பு பண்ணிட்டு இந்த தப்போடு முடிச்சுக்கோயேன். அதில் என்ன உனக்கு பிரச்சனை?"



நான் நீரஜாவை பார்த்து சிறிது நேரம் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தேன். அவள் அமைதியானாள்.



"என்ன பேபி, லைன்லதான் இருக்கியா?" என்றது எதிர்முனை. நான், இப்போது பேசும்படி சைகை செய்தேன்.



"லைன்ல தான் இருக்கேன். இந்த பிரச்சனை, இந்த ஒரு முறையோடு முடிஞ்சி போயிடும்னு நான் எப்படி நம்பறது? திரும்பத் திரும்ப நீ என்னை தொல்லை கொடுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?"



எதிர்முனையில் வெடிச்சிரிப்பு கிளம்பியது.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 12
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.