ஒரு பேய்க்கதை 2

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
ஒரு பேய்க்கதை 2

எனக்கு நடுங்குச்சு. ‘மாமா’ ன்னு சத்தம் கேட்டது இன்னும் காதுல கேட்குது. அந்தக் குரல்ல ஏதோ ஒரு வேதனை என்னால உணர முடிஞ்சது.

பொண்ணுங்க லவ் பண்றாங்கன்னா அது ரொம்ப சீரியஸாத்தான் இருக்கும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். எனக்குக் கூடத் தோணும். யாரையாவது லவ் பண்றோம் அவங்களுக்கு சூழ்நிலை ஒத்து வரல. இல்ல அவங்களுக்கு பிடிச்சிருந்தாலும் வேற ஏதாவது காரணத்தால நாம விலக வேண்டி வருது. அப்ப என்ன பண்றது? இதுதான் வாழ்க்கைன்னு அப்படியே போயிட்டே இருக்க வேண்டியதுதான் இப்படித்தான் நான் யோசிச்சு . இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் நல்லதுன்னுகூட யோசிப்பேன். ஆனா ரொம்ப சீரியஸான லவ்வ என் வாழ்க்கையில இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. மாமான்னு கத்தற குரல்ல செல்வியோட வேதனையை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது செல்விக்கு அப்படிப்பட்ட ஒரு வேதனை எதனால வந்திருக்கும்? அன்புக்கு அப்படி என்ன நடந்திருக்கும்? பயத்தையும் மீறி தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.

என் மொபைல் அடிச்சது. யாருன்னு பார்த்தேன்.

அப்பா.

இவர் எதுக்கு இப்ப கால் பண்றார்?

ஒருவேளை வீட்ல யாருக்கும் ஏதாவது…

பதட்டத்தோட ஃபோனை எடுத்தேன்.

“ரமேஷ்”

“சொல்லுங்கப்பா”

“நான் உன்னைப் பார்க்கத்தான் கிளம்பி வந்திட்டிருக்கேன்”

அப்பா சொல்ல திக் னு இருந்தது.

“என்னப்பா சொல்றீங்க? இப்ப எங்கப்பா இருக்கீங்க?”

“பஸ்ல இருக்கேன்”

அவரிடம் என்னவென்று சொல்வது இங்கே இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது வர வேண்டாம் என்றா? நம்ப மாட்டார்.

எதற்காக வருகிறார் என்று தெரியவில்லை.

சரி காலையில் தானே வருகிறார்? வரட்டும்.

அன்றிரவு எப்படியோ தூங்கி விழித்தேன்.

குளித்துவிட்டு வரும்போது அப்பா வாசலில் வந்து நின்றார்.

“என்ன ரமேஷ் எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன் பா”

“ம்”

“என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க? ஒரு போன் கூட பண்ணாம”

நான் கேட்க அப்பா தயங்கியது தெரிந்தது.

எனக்கு அது ஒரு மாறுபட்ட உணர்வை தந்தது. அவரை நான் அதுவரை அப்படி பார்த்ததில்லை. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசும் அவர் எதற்கு தயங்கினார் என்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.

நான் பார்ப்பதை உணர்ந்ததும் சமாளித்தார்.

“என்ன ரமேஷ் அப்படி பார்க்கிறே?”

“என்னாச்சுப்பா உங்களுக்கு ?”

“ஏன் அப்படி கேக்கறே?”

“ஒரு மாதிரி டென்ஷனா இருக்கீங்க”

“நான் நார்மலாதான் இருக்கேன்”

“ம்”

அவர் இயல்பாக இருப்பது போல் நடித்தார். சரி விட்டுப்பிடிக்கலாம் என்று முடிவு செய்தேன்.

“என்னப்பா சாப்பிடறீங்க? ஹோட்டல்ல வாங்கிக்கலாமா இல்ல நான் சமைக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்”

“சாப்பிட வேண்டாமா?”

“ரமேஷ் நான் இங்க வந்தது”

“சொல்லுங்கப்பா”

“உன்னை ஊருக்கு கூட்டிட்டுப் போகத்தான்”

அவர் மிக இயல்பாக சொல்ல அவரை ஆச்சரியமாய் பார்த்தேன்.

“ஊருக்கு கூட்டிட்டு போகப் போறீங்களா?”

“ம்”

“என்னையா ?”

“ம்”

“எதுக்கு?”

“உனக்கு ஜாதகம் பார்த்தேன்”

“சரி”

“உனக்கு பெரிய கண்டம் ஒண்ணு இருக்கு”

“யாருப்பா அப்படி சொன்னாங்க?”

“நம்ம ராமசாமி ஜோசியர்”

“அவருக்கு வேற வேலை இல்ல”

“அப்படி தூக்கி எறிஞ்சு பேசாத”

“அப்படி சொன்னா இப்படித்தான் சொல்லுவாங்க”

“உனக்கு நம்பிக்கை இல்லைன்னா பரவாயில்ல. எனக்கும் உன்னோட அம்மாவுக்கும் நம்பிக்கை இருக்கு”

“உங்களை திருத்த முடியாது ஆனால் என்னால் இப்ப ஊருக்கு வர முடியாது”

“ஏன்?”

“முடியாது பா”

“ரமேஷ் சொன்னா புரிஞ்சிக்க இங்க இருந்தா உன்னோட உயிருக்கு ஆபத்து” அவர் சொல்ல அவர் கண்களை உற்றுப் பார்த்தேன்.

என்னிடம் ஏதோ மறைக்கிறார் என்று மட்டும் புரிந்தது.

“அப்பா”

“ம்”

“ராமசாமி ஜோசியர் வேற என்ன சொன்னார்?”

“நிறைய சொன்னாரே”

“அதான் ஏதாவது சொல்லுங்கன்னு கேட்டேன்”

“என்னை சந்தேகப்படறியா?”

“இல்லப்பா உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கக் கேட்கிறேன்”

நான் சொல்ல அப்பா ஒன்றும் பேசாமல் என்னைப் பார்த்தார். பெருமூச்சு விட்டார். சொன்னார்.

“பொய்தான் சொன்னேன் போதுமா?”

அவர் அப்படி சொல்வார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

“ஏன் பா?”

“நீ உடனே நம்ம வீட்டுக்கு வரணும் நீ இங்க இருக்கிறது கூடாதுன்னு சொன்னேன் “

“ஏன் இங்க இருக்கக்கூடாது? இங்க இருந்தா என்ன பிரச்னை? “

நான் அவரிடம் கேட்க அவர் அந்த கேள்வியை ரசிக்கவில்லை. என்னை கோபமாய் பார்த்தார்.

“எதுவும் பேசறதுக்கு நேரம் இல்ல உடனே கிளம்பு”

என் அப்பாவை நான் இப்படி பார்த்ததே இல்லை. ஆனால் அவள் சொல்வதை என்னால் மீற முடியவில்லை.

என் துணிகளை மடித்து பெட்டியில் வைத்தேன். ஆபீசுக்கு போன் செய்து இரண்டு நாட்கள் லீவ் சொன்னேன்.

“போலாமா ரமேஷ்?” அப்பா வந்து கேட்க அவர் பதட்டம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

“சரிப்பா” என்றேன்.

இருவரும் இறங்கினோம். தெருவில் சற்று தூரம் நடந்திருப்போம் என்னிடம் முன்தினம் கதை சொன்னவர் எதிரில் வந்தார். அப்பாவைப் பார்த்ததும் அவர் முகம் சட்டென்று மாறியது:அதை நான் கவனித்து விட்டேன். ஆனாலும் அவர் சுதாரித்துக் கொண்டு அப்பாவிடம் பேசினார்.

“என்ன பரந்தாமன் உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்ல ரொம்ப ஆச்சரியமா இருக்கு” அவர் சொல்ல அப்பா ஒன்றும் சொல்லாமல் அவரை ஏறிட்டார்.

அவர் புன்னகைக்க அப்பா பதிலுக்கு புன்னகைக்காமல் நடக்க ஆரம்பித்தார்.

“நீ பரந்தாமன் மகனா?” அவர் கேட்க ஆம் என்று தலையசைத்தேன்.

“நேத்து ஏன் சொல்லல?”

“நீங்க எதுவும் கேட்கலையே?”

நான் சொல்ல அவர் என்னைப் பார்த்த பார்வையில் நட்பில்லை.

***

கொஞ்ச தூரம் நடந்திருப்போம். எங்கோ இருந்து வந்த அந்த சூறாவளி சுழன்றடித்தது. அப்பாவின் முகம் வெளிறியது. அவர் இப்படி பயப்படுவதை இப்போதுதான் பார்க்கிறேன்.

“ரமேஷ்” அவர் குரல் நடுங்கியது.

“அப்பா”

“எப்படியாவது இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போகணும்” அவர் சொல்ல நாங்கள் அடுத்த எட்டு எடுத்து வைக்க காற்று எங்களை சூழ்ந்தது. எங்களால் அசைய முடியவில்லை. காற்றின் வேகம் பயங்கரமாக அதிகரிக்க அப்பா அலறினார். எனக்கு பயத்தில் ஒன்றும் புரியவில்லை.

ஏன் இன்று பார்த்து இப்படி நடக்க வேண்டும்?

அப்பாவின் கைகளை இறுக்கமாய் பற்றினேன். அவர் கை பயத்தில் சில்லிட்டது.

அப்பொழுதுதான் காற்றின் நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முகம் என் கண்ணில் தெரிந்தது. முகத்தின் ஒரு பாதி முழுவதும் ரத்தம் உறைந்திருக்க மறுபாதியில் தெரிந்த ஒற்றைக் கண் எங்களை கொடூரமாய் வெறித்தது.

அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிய முற்பட அவர் விழாமல் பிடிக்க முற்பட்ட என் கன்னத்தில் யாரோ பளார் என்று அறைய முற்றிலும் நிலைகுலைந்தேன்.

கொஞ்ச நேரத்தில் சூறாவளி விலகிவிட சுதாரித்துக் கொண்ட நான் அப்பா எங்கே என்று தேடினேன். சற்று தூரத்தில் அவர் மல்லாக்க விழுந்து கிடக்க பதட்டமாய் அருகில் சென்று பார்த்தேன். சிரமப்பட்டு மூச்சு விடுவது போல் தோன்றியது.

“ அப்பா “ அழைத்தேன்.

அவர் அசைவு இல்லாமல் கிடக்க எனக்கு பதறியது.

“வாங்கப்பா ஹாஸ்பிடல் போலாம்” நான் அழைக்க அவரிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை.

மெல்ல அவரை எழுப்பி அமர வைக்க முற்பட அப்போது காற்றில் தோன்றிய அந்த முகத்திற்குரியவள் எதிரில் வந்து நின்றாள்.

அந்த முகத்தில் ஏதோ ஒரு வெறி தெரிந்தது.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . இவள் தான் அவளா? ஆனால் எங்களை எதற்காக?

எனக்குள் கேள்விகள் மட்டுமே இருந்தன. எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் இருந்தது.

“வேண்டாம் விட்டுடு தயவு செய்து என்னை மன்னிச்சுக்க” அப்பா அவளைப் பார்த்து கெஞ்ச எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்றால் இவள் அப்பாவிற்கு தெரிந்தவளா?

அப்பாவை குழப்பமாய் பார்த்தேன்.

“அப்பா யாருப்பா இது? எதுக்காக பா பயப்படறீங்க? என்ன விஷயம் பா , சொல்லுங்க பா ? “

அப்பா என்னை நடுக்கமாக ஏறிட்டார்.

“ரமேஷ்”

“அப்பா”

“அவ நம்மள கொல்லாம விட மாட்டா. எப்படியாவது தப்பிச்சுக்க”

“யாருப்பா அது?”

நான் கேட்க அவர் பதில் சொல்வதற்குள் தூக்கி எறியப்பட்டார். அலறிக்கொண்டு தரையில் வேகமாய் மோதி விழுந்தார். அவள் அலட்சியமாய் பார்த்தபடி அவர் அருகில் மீண்டும் சென்றாள்.

“வேண்டாம் ப்ளீஸ்” நான் கத்த என்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அப்பாவை ஒற்றைக் கையால் பற்றி தரையில் ஓங்கி அடித்தாள். அவர் தலை சிதறி ரத்தம் தெறித்து உடம்பு துடிக்க அதைப் பார்த்து வெறித்தனமாக சிரித்தாள்.

நான் கதறித் துடித்தபடி நடப்பதை நம்ப முடியாமல் பார்க்க அவள் என்னை நோக்கி வர ஆரம்பிக்க எப்படியாவது அவளிடம் இருந்து தப்பித்தாக வேண்டும் என்ற இலக்கில் அங்கிருந்து ஓடினேன். அவள் முகத்தில் ஆங்காரம் தெரிந்தது. என்னை துரத்தினாள். என்னால் முடியவில்லை. எப்படியும் அவளிடம் மாட்டிக் கொள்வேன். என்னையும் கொன்று விடுவாள் என்றுதான் தோன்றியது. அப்போது அந்த அம்மன் கோவில் என் கண்ணில் பட்டது. எப்படியாவது உள்ளே சென்று விட்டால்…?
என் கடைசி நம்பிக்கை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன். அவளுக்கும் எனக்குமான தூரம் குறைந்து கொண்டே வந்தது. அவள் தன் கூரிய விரல்களால் என் முதுகைப் பற்ற முயற்சிக்க விரல்கள் கீறி ரத்தம் துளிர்த்தது. இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தால் கோவில் என்ற நிலையில் அவள் எப்படியாவது என்னை தடுக்க வேண்டும் என்று முயன்றும் கோவிலுக்குள் தாவித் தரையில் விழுந்தேன்.


அவள் வெளியில் நின்றபடி கத்தியது எனக்கு நன்றாகக் கேட்டது.

மூச்சிறைத்தேன்.

தண்ணீர் எங்காவது கிடைக்குமா?

பைப் இருந்தது. அதைத் திறந்து தண்ணீரை கையால் பிடித்துக் குடித்தேன்.

மயக்கம் வர சரிந்தேன்.

மயக்கம் தெளிந்து பார்க்கும் போது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. கோவிலில் இல்லை என்பது மட்டும் தெரிந்தது.

இது யார் வீடு?

யோசிக்க அறைக் கதவு திறந்தபடி அவர் வந்தார். எனக்கு செல்வியின் கதையை சொன்னவர்.

“என்ன ரமேஷ் இது யாரு வீடுன்னு யோசிக்கிறியா?” அவர் கேட்க பேச முடியாமல் தலையசைத்தேன்.

“என்னோட பையனோட வீடு தான்.”

“அப்பா அங்க …” பேச முடியாமல் கண்ணீருடன் சொல்ல அவர் புரிந்து கொண்டார்.

“தெரியும் . போலீஸ்க்கு தகவல் கொடுத்திருக்கேன். போஸ்ட்மார்ட்டம் முடிச்சிட்டு பாடிய வாங்கிக்கலாம்”

எனக்கு அப்பாவை நினைக்க அழுகை வந்தது. அவள் மேல் ஆத்திரம் வந்தது.

யார் அவள் ? எதற்காக அப்பாவை அவ்வளவு கொடூரமாக கொன்றாள்?

மீண்டும் மீண்டும் அந்த யோசனை வர கண் மூடினேன்.

“கவலைப்படாதே” அவர் சொல்ல மௌனமாய் அவரை ஏறிட்டேன்.

“எதுக்காக அப்பாவை..?”

சற்று நேரம் மௌனமாய் இருந்தவர் ஒரு பழைய பாஸ்போர்ட் போட்டாவைக் காட்டினார்.

அதைப் பார்த்ததும் எனக்கு உச்சகட்ட கோபம் வந்தது. அவள் தான். என் அப்பாவை கொடூரமாக கொன்றது மட்டுமல்லாமல் என்னையும் கொலை செய்ய முயன்றவள்.

“யார் இவ…?”

நான் கேட்க அவர் என்னை நேர் பார்வை பார்த்தபடி சொன்னார்.

“செல்வி”

தொடரும்.
 

Author: gavudham
Article Title: ஒரு பேய்க்கதை 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.